

டாக்டர் திலீப் மஹாலனபிஸிடம் அப்போது போதிய மருந்துகள் இல்லை. வழிகாட்டவும் யாரும் இல்லை. இந்த முயற்சி தவறினால் அடுத்து என்ன செய்வது என்ற பெரும் யோசனை அவருக்கு இருந்தது. ஆனால், மிகுந்த நம்பிக்கையுடன் ஓரல் சலைன் முயற்சியை கையில் எடுத்தார்.
அந்த மருந்து ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சென்றடைந்து பல உயிர்களைக் காப்பாற்றியபோது டாக்டர் திலீப் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “போர்முனைகள்தான் நமக்கு எவ்வளவு பாடங்களைக் கற்பிக்கின்றன” என்று இந்த நிகழ்வு குறித்து பின்னாளில் டாக்டர் திலீப் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, “இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு ஓஆர்எஸ்" என லான்செட் பத்திரிக்கை அவரைக் கொண்டாடியது. அதேசமயம் ஆப்பிரிக்க நாட்டின் டாக்டர் பாரூவா உலக சுகாதார அமைப்புக்கு டாக்கா உப்புக்கரைசலின் அவசியத்தை வலியுறுத்த, மெதுவாக உலகெங்கும் பிரசித்தி பெற்றது டாக்டர் திலீப்பின் ஓஆர்எஸ்.
தேடி வந்த விருதுகள்: 1971 போரைத் தொடர்ந்து 1975 முதல் 1979 வரை, உலக சுகாதார அமைப்பின் வாயிலாக, காலரா கட்டுப்பாட்டு மையத்தின் தலைவராக ஆப்கானிஸ்தான், எகிப்து, ஏமன் உள்ளிட்ட காலரா பாதித்த நாடுகளில் டாக்டர் திலீப் பணிபுரிந்தார். பின்னர் வயிற்றுப்போக்கு நோய்த்தொற்று தடுப்பு மருத்துவராக உலக சுகாதார அமைப்பிலும், வங்கதேசத்தின் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனராகவும் பணிபுரிந்தார்.
வெப்பமண்டல நோய்த்தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அத்துடன், தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமியின் அறிவியல் ஆராய்ச்சி உறுப்பினராகவும், நமது ஐசிஎம்ஆரின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
ஆராய்ச்சிகளும் பணிகளும் நிறைந்த அவரது வாழ்க்கை உண்மையில் மற்றவர்களுக்காகவே இருந்தது. குழந்தைகள் நல ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க சர்வதேச போலின் விருது, தாய்லாந்தின் உயரிய மகிடோல் விருது என விருதுகள் அவரது இல்லத்தை அலங்கரித்த போதும் தனது வாழ்க்கையை குழந்தைகள் நலனுக்காக அர்ப்பணிப்பதே தனக்கு மாபெரும் விருதாக இருக்கும் என்று எண்ணினார்.
எளிய மக்களுக்காக... 1978-ம் ஆண்டு, 108 நாடுகள் ஓஆர்எஸ் தயாரிப்பைத் தொடங்கி, இன்றுவரை ஆண்டுக்கு 50 கோடி ஓஆர்எஸ் பொட்டலங்கள் உலகெங்கும் தயாரித்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் அவரது டாக்கா உப்பும், சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, சோடியம் ட்ரை-சிட்ரேட் மற்றும் குளுகோஸ் கலந்த விலை குறைந்த ஓஆர்எஸ் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இதுவே எளிய மக்களுக்கானதாக உலகெங்கும் இன்றும் கோடிக்கணக்கான உயிர்களை, குறிப்பாக குழந்தைகள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
அதற்குக் காப்புரிமை கோரியிருந்தால் பல கோடிப் பணத்தை சம்பாதித்திருக்க முடியும் என்று அவருக்கு தெரிந்திருந்தும், மக்களுக்கு அது நலமளித்தால் போதும் என்று முடிவு செய்தார். ஆகையால் டாக்கா உப்புக்கு எந்தவொரு காப்புரிமையையும் அவர் கோரவில்லை என்பதே டாக்டர் திலீப் அவர்களின் சிறந்த குணத்திற்கு ஒரு சான்று.
அது மட்டுமல்ல, தனது வாழ்நாள் சேமிப்பாக கையில் இருந்த ஒரு கோடி ரூபாயையும் மனைவியின் சம்மதத்துடன் தான் முதன்முதலாகப் பணிபுரிந்த குழந்தை நல மருத்துவமனைக்குத் தானமாக கொடுத்தார்.
ஓஆர்எஸ்ஸின் தந்தை: இன்றும் அவரது பெயரால் சிறப்புடன் செயல்பட்டு வரும் மஹாலனபிஸ் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளை மட்டுமல்ல அவரது ஆராய்ச்சிக் கனவுகளை சேர்த்தே நனவாக்கிக் கொண்டிருக்கிறது. அது இன்னும் சூப்பர் ஓஆர்எஸ் எனும் அதிக சத்துக்கள் நிறைந்த உப்புக்கரைசலை உருவாக்கி பயன்படுத்தக் கொடுப்பதுடன், தடுப்பூசி விழிப்புணர்வில் சிறந்தும் விளங்குகிறது.
87 வயதில் நுரையீரல் நோய் காரணமாக, 2022-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கொல்கத்தாவில் இயற்கை எய்தினார் டாக்டர் திலீப். மறைந்த அவரது பெயரால் அவரது குடும்பத்திற்கு இந்திய அரசு உயரிய பத்மபூஷன் விருது இந்த ஆண்டு அறிவித்துள்ளது.
தனது உயரிய கண்டுபிடிப்பால், ‘தி ஓஆர்எஸ் டாக்டர்' என்றும், ‘ஓஆர்எஸ்ஸின் தந்தை' என்றும் போற்றப்படும் டாக்டர் திலீப்மஹாலனபிஸ், தன்னலமற்ற தனது குணத்தால் மேற்கு வங்கம் தொடங்கி ஒட்டுமொத்த உலகின் இளைய சமுதாயத்திற்குமே முன்மாதிரியாக விளங்குகிறார்.
(மகிமை தொடரும்)
- டாக்டர் சசித்ரா தாமோதரன் | கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com