நானும் கதாசிரியரே! 4 - ‘வேகி’ கழுகின் கடும் பசி

நானும் கதாசிரியரே! 4 - ‘வேகி’ கழுகின் கடும் பசி
Updated on
2 min read

சென்ற பகுதியில் பசியோடு இருந்த கழுகு பற்றி பார்த்தோம் இல்லையா? அந்தக் கதையை எப்படி எழுதலாம் என்பதைப் பார்ப்போம். அது ஒரு பெரிய காடு. அங்கே ‘வேகி’ என்ற ஒரு கழுகு வசித்தது. வேகி என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா? அங்குள்ள மற்ற கழுகுகளை விடவும் வேகமாக இது பறக்கும். அதனால், அதை வேகி என்று அழைத்தார்கள். ஒருநாள் ’வேகி’ கழுகு நீண்ட தூரம் பறந்து சென்றது.

அதனால், மிகவும் களைப்பாக இருந்தது. கூடவே பசிக்கவும் செய்தது. ஏதாவது இரை கிடைக்குமா என்று காட்டுக்குள் தேடியது. அந்தப் பகுதியை இரண்டுமுறை சுற்றி வந்தும் அதன் கூர்மையான பார்வை திறன் வாய்த்த அதன் கண்களுக்கு இரை ஏதும் தென்படவில்லை. கழுகு ரொம்பவும் சோர்ந்துவிட்டது.

காட்டின் நடுவே உள்ள ஆற்றின் அருகே இருந்த சின்ன பாறையின் பக்கத்தில் ஏதோ ஒரு விலங்கு ஓடுவது போல தெரிந்தது கழுகுக்கு. நன்கு உற்றுப் பார்த்தபோது கொழுகொழு முயல் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பிடிப்பதற்காக, விமானம் தரையிறங்குமே அதுபோல கழுகு மெதுவாக தாழ்வாகப் பறந்தது.

அப்போதுதான் வந்தது பிரச்சினை. அந்தப் பாறை அருகே ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவன் கையில் வில் வைத்திருந்தான். கழுகைப் பார்த்ததும், கூர்மையான அம்பை எடுத்து வில்லின் நாணில் பூட்டினான். இது தெரியாமல், அவன் இருக்கும் பகுதியை நோக்கி கழுகு தாழ்வாகப் பறந்தது.

யாரிடம் யார் சிக்கியது? - முயலைப் பிடிக்க இன்னும் கீழே இறங்கி வந்தது கழுகு. வேட்டைக்காரன் கழுகு மீது அம்பு எய்வதற்கு குறி பார்த்துக் கொண்டிருந்தான். கழுகு வருவது தெரியாமல் முயல் விளையாடிக் கொண்டே புற்களை மேய்ந்துகொண்டிருந்தது. கழுகு முயலைக் கொத்த சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. கழுகைக் கொல்ல வேட்டைக்காரன் தயாராக நின்றான். முயலுக்கு மேலே பறக்கும்போது, தன் நிழல் முயல் அருகே விழுந்தால் தப்பித்து ஓடிவிடும் என கவனமாக இருந்தது கழுகு.

அப்போது பார்த்து வானத்தில் மேகக்கூட்டம் செல்ல, அதன் நிழல் முயல் மீது விழுந்தது. இதுதான் சரியான நேரம் என சட்டென்று முயலை நோக்கிப் பறந்தது கழுகு. கழுகு தரையை ஒட்டி வருவதைப் பார்த்த வேட்டைக்காரன் அதை நோக்கி அம்பு எய்துவிட்டான். முயல் அருகே சென்று விட்டது கழுகு. கழுகை நெருங்கி விட்டது அம்பு. அந்த நேரத்தில் முயல் விளையாட்டாக பாறை நோக்கி ஜம்ப் பண்ணியது.

அதைப் பிடிக்கச் சென்ற கழுகும் அதற்கு ஏற்றவாறு கொஞ்சம் உயர பறந்தது. அந்த இடைவெளியில் பாய்ந்த வந்த அம்பு கழுகின் மீது படாமல் பாறை மீது மோதி கீழே விழுந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்ட முயல் வேகமாக அருகில் இருந்த புதரில் ஓடி ஒளிந்து கொண்டது. அடுத்த நொடி கழுகு சர்ரென்று உயரப் பறந்து வானத்திற்குச் சென்று தப்பியது. வேட்டைக்காரன் ஏமாந்து வீடு திரும்பினான்.

இப்படி எழுதலாம் என்பது என் கற்பனை. நீங்கள் வேறு மாதிரியும் எழுதிப் பார்க்கலாம். ஏனென்றால், ஒவ்வொருவரின் கற்பனையும் வேறு வேறு அல்லவா?

இப்போது நீங்கள் கதை எழுதுவது குறித்து ஓரளவு புரிந்துகொண்டிருப்பீர்கள். அடுத்த வாரம் ஒரே கதையை எழுத்தாளர் படிப்பதற்கும், வாசகர் படிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.

கதை பாடம்: ‘கழுகின் பசி’ ஒரு நகரத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என எழுதிப் பாருங்கள்.

- விஷ்ணுபுரம் சரவணன் | கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in