

நாளை உலகத் தாய்மொழி நாள். ஒவ்வொருவருக்கும் தன் தாய்மொழியை உலக மொழிகளின் வரிசையில் முதலாவதாக வைப்பதற்கான போட்டியே தற்போது நிலவிவருகிறது. தமிழ் தன்னிகரற்ற மொழி. முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். செம்மொழிக்கான தகுதியுடனே பிறந்தது தமிழ் என நாம் மொழியை உயர்த்திப்பிடிக்கிறோம். எப்படி தமிழ் உயர்ந்து நிற்கிறது?
1935-ல் ஆங்கில மொழிக்கு ecosystem என்ற புதிய கலைச்சொல் அறிமுகமானது.
தமிழர்கள் ஐந்துவகையாக நிலத்தை கி.மு.-வுக்கு முன்பே பிரித்து விளக்கினர்.
சங்ககாலப்பாடல்கள் திணை அடிப்படையிலேயே அமைந்துள்ளன. தமிழில்திணை என சொல்லப்படும் இடுகுறிப் பெயரே, அந்த ஆங்கிலச் சொல்லின் பொருளாகிறது.
ஒவ்வொரு பாடலின் உரிப்பொருள், கருப்பொருள் கொண்டு எவ்வகை நிலத்தில் பாடப்பட்டது என்பதை நாம் கண்டறி வோம். இங்கேதான் சூழலியலுடன் மொழியின் வளர்ச்சியை, சூழலியல் அழிந்தால் மொழியும் அழியும் என்ற உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.
‘தமிழ் ஒரு சூழலியல் மொழி’ புத்தகத்தில் சூழலியல் சார்ந்த வாழ்வில் பயன்பாட்டில் இருந்த தமிழ் சொற்கள் சில தற்போது மறைந்து வருவதை நூலாசிரியர் ஆய்ந்தறிந்துள்ளார். ஆறு கடலுடன் கலக்கும் இடத்துக்கான தமிழ் சொல்லை தேடுகிறார். கழிமுகம் என்பது தமிழ் சொல் என்றாலும் இடுகுறிப்பெயரில் என்னவாக இருக்கும் என்ற தேடுதல் குமரி மாவட்டத்து மருந்துவாழ் மலையில் ஒளிந்திருந்ததாகச் சொல்கிறார். ஆறு கடலில் கலக்கும் இடத்தை பொழி என்று அழைப்பராம் குமரி மாவட்டத்தில். அதுமட்டுமல்ல கூடை முடையும்போது நெடுவாக்கில் அமைந்த பட்டையோடு குறுக்குப் பட்டை கூடும் இடத்தையும் பொழி என்றே சொல்வார்களாம்.
எப்படி காணாமல் போனது?
பேச்சுவழக்கில், எழுத்துவழக்கில் பயன்பாட்டில் இல்லாத சொற்கள் காணாமல் போகின்றன. மொழிச்சொற்களின் அழிவுநான்கு தலைமுறைகளில் நிகழ்ந்து விடுகிறது.
எடுத்துக்காட்டாக நூலாசிரியரின் இளம்பிராயத்தில் பெற்றோர் பயன்படுத்தி கேட்டச் சொல் ஓரி. இதன் பொருள் தனித்திருத்தல். அதுவே நூலாசிரியரின் மகள் தலைமுறையில் 'லோன்லி' என்றஆங்கில மொழி பொருளில் பயன்படுத்தப் படுகிறது. நூலாசிரியரின் நான்காம் தலைமுறையில் ஓரி என்ற தமிழ்ச்சொல் அழிந்துவிட்டிருக்கும். தமிழ்மொழியில் இலக்கியங் கள் பிறந்து 3,000 ஆண்டுகளாகின்றன. நூறு வருடம் ஒரு சொல் உயிர்வாழும் எனில், இத்தனை வருடங்களில் எத்தனை சொற்கள் காணாமல் போயிருக்கும்.
தொல்காப்பியம் ஒரு சுருக்கெழுத்து பிரதி
தமிழ்மொழி எங்கு உயர்ந்து நிற்கிறது என்பதை தொல்காப்பியம் சொல்கிறது. தொல்காப்பியம் வழி தமிழ்மொழி எப்படி உலக மொழிகளில் சிறந்த ஒன்றாக உயர்ந்து நிற்கிறது என்பதை ஆதாரத்துடன், தற்போது தமிழ்மொழியின் தன்மையையும் சொல்கிறார் நூலாசிரியர்.
தமிழ் அனைத்தையும் அணைத்து செல்லும் இயல்புடையது. சமஸ்கிருதம் மணிப்பிரவாள நடையாக தமிழோடு ஒன்றிணைந் திருந்தது என்றாலும், தமிழறிஞர்கள் தமிழின் பெருமையை காத்து நின்றனர்.
ஐவகை திணையாகப் பிரிக்கப்பட்ட நிலத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியல் அக்கறையின்மையே மொழியின் தேய்வுக்கும் காரணம்.
சங்ககாலப்பாடல்கள் மூலம் இதை அறியலாம். சோழர்கள் காலத்தில் முதுமக்கள்தாழியில் செய்யப்பட்ட சவஅடக்கம் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. பிந்தைய பல்லவர்கள் காலத்தில் அரசர்களுக்காக எழுப்பப்பட்ட கற்றளிகள் சூழல் அழிவைச் சொல்கின்றன. அதைவிட சூழலியல் அக்கறையின்மை இன்று பன்மடங்கு அதிகமாய் உள்ளது. இது மொழியின் வளர்ச்சிக்கு உதவாது.
தமிழ்மொழி அறிவியலோடு கலந்தது
‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ பாடலை நாம் எல்லோரும் ரசித்து படித்திருப்போம். பாடலின் ஒரு அடி தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீராயின் என்பது. வலசை வரும் பறவைகளே தெற்கு வடக்காக பயணம் மேற்கொள்ளும் என்ற அறிவியல் உண்மையை இவ்வரிகள் உணர்த்துகின்றன.
ஆனால், நம் மொழியின் பெருமையை நாமே மதிப்பதில்லை. சூழலியலையும் பாழ்படுத்தி வரும் மனித இனம் அது மொழியின் அழிவுக்கானது என்பதை உணரவேண்டும். மொழியின் அழிவு அம்மொழியைப் பேசும் மனித இனத்தின் அழிவையும் கொண்டுவரும்.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஆழ்ந்து வாசித்து, தமிழின் பெருமையை உணரச் செய்வது மட்டுமல்லாமல், தமிழினம் செய்ய வேண்டிய வற்றையும் உணர்த்துகிறது. ஏராளமான தமிழறிஞர்களின் மேற்கோள்களை கொண்டிருக்கிறது.
சூழலியலும் தமிழும் சேர்ந்து வளர்ந்து வருவது. மொழியைக் காக்க விரும்புபவர்கள் சூழலியலையும் பாதுகாக்க வேண்டும். தியோடர் பாஸ்கரின் கூற்றுப்படி, “ஒரு வங்கியையே வைத்திருப்பவர் ஐந்துக்கும், பத்துக்கும் அடுத்தவரிடம் கையேந்துவது போலத் தமிழ்மொழி என்னும் வங்கியில் ஏராளமான கலைச்சொற்கள் குவிந்திருக்க, நாம் அடுத்த மொழியிடம் சொற்களைப் பிச்சை எடுக்கிறோம்”.
உலகின் மிகச் சிறந்த மொழியைப் பேசிடும் தமிழர்கள், நம் மொழியின் நிலைத்தன்மை சூழலியலுடன் உள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும் என இப்புத்தகம் வலியுறுத்துகிறது. நூலாசிரியர் நக்கீரனின் சூழலியல் அறிவு மொழியறிவுடன் வெளிப்பட்டுள்ளதை படிக்க படிக்க பிரமிக்க வைக்கிறது.
புத்தகம்: ‘தமிழ் ஒரு சூழலியல் மொழி’
பதிப்பகம் : காடோடி.
விலை :ரூ.190
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு
மேல்நிலைப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்பு: udhayalakshmir@gmail.com