கனியும் கணிதம் - 22: வண்ணம் அடிப்பதில் கணிதம்

கனியும் கணிதம் - 22: வண்ணம் அடிப்பதில் கணிதம்
Updated on
2 min read

உங்கள் பள்ளியில் வண்ணமடிக்க திட்டமிடு கிறார்கள். வகுப்பறைக்கு மட்டும் வண்ண மடிக்க எவ்வளவு செலவாகும்? என்று உங்களை பட்ஜெட் போடச்சொல்கிறார்கள். பட்ஜெட் என்றால் தெரியும்தானே? பிப்ரவரி மாதம் வந்தாலே செய்திகளில் இந்த வார்த்தையை அடிக்கடி கேள்விப்படலாம். தோராயமாக எவ்வளவு செலவாகும் என்ற கணக்கும், எவ்வளவு செலவானது என்ற கணக்குமே பட்ஜெட்.

என்னென்ன தேவை?

இப்போதெல்லாம் வண்ணமடிக்க இரண்டு வகையாக கூலி கேட்கின்றார்கள். ஒன்று, ஒரு சதுர அடிக்கு வண்ணம் அடிக்க எவ்வளவு செலவாகும். இந்த செலவு நாம் சொல்லும் வண்ணம் மற்றும் உழைப்பையும் சேர்த்து. இரண்டு, வண்ணமடிக்க பெயிண்ட் வாங்கித்தந்தது, எத்தனை நாட்கள் எத்தனை நபர்கள் வேலைகள் செய்கின்றார்களோ அவர்களுக்குத் தினசரி கூலி. இரண்டில் எதில் லாபகரமானது என்பதைக் கணக்கிட வேண்டும்.

அதற்கு முதலில் அறையில் பரப்பளவு தேவை. உட்சுவர்களுக்கு மட்டும் வண்ணம் பூசுவோம். அறைக்குள் நான்கு சுவர்கள் உள்ளன. அப்படி என்றால் ஒவ்வொரு சுவரின் பரப்பளவு தெரியவேண்டும். வண்ணம் பூச நமக்கு தேவை பரப்பளவு. அதன் அலகு சதுர அடி (sq. ft) அல்லது சதுர மீட்டர் (sq. m) கரும்பலகை இருக்கும் சுவரின் நீளம் 20 அடி, உயரம் 15 அடி. அப்படி என்றால் அதன் பரப்பளவு 20 அடி X 15 அடி = 300 சதுர அடி = 300 sq ft = 300 ft2

(அடியையும் அடியையும் கூட்டினால் அடி வரும். அடியையும் அடியையும் பெருக்கினால் சதுர அடி ft2 வரும். கழித்தாலும் அடியே வரும். வகுத்தால் வெறும் எண்கள் மட்டுமே)

இதே மாதிரி அறையில் இருக்கும் நான்கு சுவர்களின் பரப்பளவையும் கண்டுபிடிக்க வேண்டும். அறையின் நீளம், அகலம், உயரத்தை அளந்தால் இதைக் கண்டுபிடித்துவிடலாம். அளக்கும்போது மீட்டரிலோ அல்லது சென்டிமீட்டரிலோ அளந்தால் அதனை அடிக்கு மாற்ற வேண்டும். அந்த நான்கு சுவர்களின் பரப்பளவையும் கூட்ட வேண்டும். அதன் அலகுஎன்னவாக இருக்கும்? அதே சதுர அடிதான்.தோராயமாக 1000 சதுர அடி என வைத்துக் கொள்வோம். கணக்கு முடிந்ததா ? இல்லை.

மிச்ச பக்கங்கள்?

அறையின் வடிவம் கனச்சதுரம். அதற்கு ஆறு பக்கங்கள் மொத்தம்.4 பக்கத்தைத்தான் சேர்த்திருக்கின்றோம், ஆனால் ஒரு கூரைப்பகுதிக்கு வழக்கமாக வெள்ளை நிறம் மட்டுமே பூசுவார்கள். அதற்குத் தனி கூலி எப்போதும். தரையில் வண்ணம் தேவையில்லை. ஆனாலும் கணக்கு முடியவில்லை. ஜன்னல், கதவுகளின் பரப்பளவைக் கழிக்க வேண்டும். அவையும் செவ்வக வடிவில் இருக்கும் என்பதால் கணக்கிடுவது எளிது. அதைக் கழித்த பின்னர் 800 சதுர அடி வருகிறது.

ஒரு சதுர அடிக்கு வண்ணமடிக்க 10 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அப்ப 800 X 10 = 8000. இதன் அலகு என்ன? சரி, இதன் அலகு ரூபாய். ஆகவே!.. ஓர் அறைக்கு வண்ணம் பூச நமக்கு அறையின் பரப்பளவு, அதனை அளப்பது எப்படி, அதன் அலகு, ஓர் அலகிலிருந்து மறு அலகிற்கு மாற்றுவது, கூட்டல், கழித்தல் (சன்னல், கதவு), வகுத்தல் (சதுர அடிக்குக் கூலி), ஒப்பீடு (எந்த விலை லாபகரமானது) என்பது ஒரு பயனாளியாகவும் உதவும், இதுவே அந்தத் தொழிலினை மேற்கொள்வதென்றாலும் உதவும். ஏனோ தானோ என்றும் இதைச் செய்யலாம், அட இதற்குப்போய் இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்று தோன்றலாம். ஆனால் கணித அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டால் இன்னும் மேம்பட்ட, நிறைவு தரும் ஒரு வாழ்வினை மேற்கொள்ளலாம். உழைப்பும் நேரமும் வீணாகாமல் தடுக்கலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.

‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’

ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.

தொடர்புக்கு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in