

தமிழ்நிலா தலையைச் சொறிந்துகொண்டிருந்தாள். பாட புத்தகங்கள் கலைந்து கிடந்தன. என்னடி ஆச்சு? அம்மா கேட்டார். எதை படிக்கிறதுன்னே தெரியல. நாளைக்கு வகுப்பறைல அறிவியல் தேர்வு இருக்கு. மூனு நாளில் புதிய கல்விக் கொள்கையின் நன்மை, தீமை குறித்த கட்டுரை கொடுத்தாகனும். கணக்கு வீட்டுப்பாடமும் செய்யனும்… ஷ்ஷ்ஷ்ஷ், முடியல என்றாள்.
ரொம்பல்லாம் கவலப்படாத. எவ்வளவு நேரமானாலும் நீதான் இதை செய்யப் போறாய். அதனால, உடனடியா செய்ய வேண்டியது எதுன்னு பொறுமையா யோசி. கவனம் செலுத்தி அதை முதலில் செய். அடுத்ததை பிறகு செய் என்றார். கீதாஞ்சலி மாதிரியே சொல்றீங்களே! தமிழ்நிலா புன்னகைத்தாள்.
அறிவியலில் ஆர்வம்
இந்தியாவின் மங்களூரைப் பூர்வீகமாகக் கொண்டவள் கீதாஞ்சலி. 2005-ல் அமெரிக்காவில் பிறந்தாள். கற்றறிந்த பெற்றோரால் வளர்க்கப்பட்டாள். மூன்றாவது படிக்கும்போதே, சமூக மாற்றத்துக்காக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினாள். ஒன்பது வயதில், தேசிய அளவிலான கதை போட்டியில் பங்கேற்றாள். ‘தனது தம்பியின் பார்வையில் உலகம்’ என்பதை மையமாக வைத்து, Baby Brother Wonders என்ற தலைப்பில் எழுதினாள். இரண்டாம் பரிசு கிடைத்தது. புத்தகமாகவும் வெளியானது.
2014-ல், மிச்சிகன் மாகாணத்தில் குடிநீர் மாசுபாடு பிரச்சினையானது. இதை அறிந்த கீதாஞ்சலி, தண்ணீரை பரிசோதிக்கும் கருவி கண்டுபிடிக்கப் போவதாக வீட்டில் சொன்னாள். கண்டுபிடித்தாள். ‘டெத்தீஸ்’ (Tethys) என்று பெயரிட்டாள். அப்போது அவளுக்கு வயது 10. டெத்தீஸ் என்பது, சுத்தமான தண்ணீருக்கு பாதுகாவலரான கிரேக்க கடவுளின் பெயர். இக்கருவியைக் கையாளுவது எளிது. மாசு குறித்த தகவலை விரைவாகவும், துல்லியமாகவும் புளூடூத் வழியாக திறன்பேசியில் அறிந்து கொள்ள முடியும். கீதாஞ்சலி சென்னை வந்தாள். தனியார் ஏற்பாட்டில், TEDx அரங்கில் தன் கண்டுபிடிப்பு குறித்து பேசினாள்.
இணையக் கேலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ‘Kindly’ செயலியை உருவாக்கினாள். கூகுள் குரோம் உடன் இணைத்தாள். மாணவர்கள் தட்டச்சு செய்யும்போதே, இணையக் கேலி தொடர்பான வார்த்தை வந்தால், செயற்கை நுண்ணறிவு சுட்டிக் காட்டும். வார்த்தையை மாற்றுவதா அப்படியே தொடர்வதா என்பதை மாணவர்கள் முடிவு செய்யலாம்.
கற்றதை கற்பித்தல்
டைம் இதழ் பேட்டியில், “இளம் வயது பெண், கண்டுபிடிப்பாளராக இருப்பது உற்சாகம் தருகிறது. ஏதாவதொரு வழியில் இது உங்களைப் பாதிக்கிறதா? ஏனென்றால், சில பெண்கள்தான் அறிவியல் துறையைத் தேர்வு செய்கிறார்கள்” என்று நிரூபர் கேட்டார்.
“அறிவியலாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பலரும் நினைப்பதுபோல நான் இல்லை. பாலினம், வயது, நிறம் சார்ந்து அவரவருக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தைப் பார்க்கவே விசித்திரமாக உள்ளது. எனது இலக்கு வேறு. நான் கண்டுபிடிப்பதுடன், மற்றவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களையும் கண்டுபிடிக்க வைக்க வேண்டும்” என்றாள்.
கண்டுபிடிப்பாளர்களுக்காக கருத்தரங்குகள் (Innovation Sessions) நடத்துகிறாள். “கவனித்தல், யோசித்தல், தேடி வாசித்தல், உருவாக்குதல், தெரியப் படுத்துதல்” என்பதாக தன்னுடைய செயல்முறையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறாள். மாணவர் களுக்கு எங்கே தொடங்க வேண்டும் என்பதுதான் தெரியவில்லை.
கற்றுக்கொடுத்துவிட்டால், சிக்கல்களைச் சரிசெய்யும் புதிய சிந்தனையுடன் வருவார்கள் என்கிறாள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70, 000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தம் கருத்தை விதைத்திருக்கிறாள்.
எல்லாவற்றையும் உங்களால் மாற்ற இயலாது. எதில் பேரார்வம் உள்ளதோ அதைத் தேர்ந்தெடுங்கள். உங்களை நீங்களே அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள் என்கிறாள். பரதம், பாடல், நீச்சல், பியானோ இசைத்தல் கீதாஞ்சலியின் பொழுதுபோக்குகள்.
2017-ல், அமெரிக்காவின் முதல் இளம் விஞ்ஞானி எனும் பாராட்டு கீதாஞ்சலிக்கு கிடைத்தது.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
தொடர்பு: sumajeyaseelan@gmail.com