

நம் குரல் எப்படி உருவாகிறது, டிங்கு?
- ஆர். விஜய், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
ஒரு தாளை எடுத்து வேகமாக அசைத்துப் பாருங் கள். ஒலி வருகிறதா? விசிறியை வீசும்போதும் ஒலி வருகிறதா? காற்றின் மீது அழுத்தமான விசையைச் செலுத்தி, அலைகளை ஏற்படுத்துவதன் மூலம் அனைத்து விதமான ஒலிகளும் ஏற்படுகின்றன. நாம் பேசும்போது குரல்வளை நாளங்கள் அதிர்ந்து, காற்றில் அழுத்த அலைகளை உருவாக்குவதால் ஒலி வருகிறது. வாய், நாக்கு, மூக்கு, உதடு அனைத்தும் சேர்ந்து செயல்படும்போது பேச்சு ஒலி உருவாகிறது, விஜய்.
விஷத் தவளைகள் இருக்கின்றனவா, டிங்கு?
– சி. ஸ்டீபன் பால், 5-ம் வகுப்பு, திருவள்ளூர்.
விஷத் தவளைகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவை நம்நாட்டில் இல்லை, ஸ்டீபன். தென்அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே விஷத் தவளைகள் (Poison dart frog) வசிக்கின்றன. கண்கவர் வண்ணங்களுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன.
நீலம், பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களில் கறுப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. மிகவும் சிறியவை. எதிரியைக் கண்டதும் முதுகில் இருந்து விஷத்தைச் சுரக்கின்றன. இது கடுமையான விஷம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை.
என்னிடம் விஷம் இருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவிக்கவே இந்தத் தவளைகளுக்கு கண்கவர் நிறங்கள். 220 வகை விஷத் தவளைகள் இருக்கின்றன.