

நவகோடி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தான். கொஞ்ச காலமாக மழை பெய்யாததால் மனம் வருந்திஎன்ன செய்வது அறியாது திகைத்தான். அவனுக்கோ விவசாயத்தை தவிர வேறு வேலையும் தெரியாது. திடீரென கலப்பையை தூக்கிக்கொண்டு வயலுக்குச் சென்றான். தண்ணீர் இல்லாமல் எப்படி விவசாயம் செய்வான் என்று எல்லோரும் அவனை கேலி செய்தார்கள். வறண்டு போயிருந்த வயலைப் பார்த்து மனம் வறண்டு போனது. வயல் அருகே இருந்த மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு உன்னை நம்பி தான் கலப்பையை தூக்கி இருக்கேன். நீ தான் எங்களை எல்லாம் காப்பாற்றனும். கால்நடை எல்லாம் தண்ணீர் இல்லாமல் மடிந்து போகுது என்று இறைவனை வணங்கி விட்டு மரத்தடியில் படுத்து உறங்கினான்.
அவனை யாரோ தட்டி எழுப்பியது போல் இருந்தது. அதை சட்டை செய்யாமல் திரும்பி படுத்துக் கொண்டான். மறுநாளும் இதே தொடர்ந்தது. கனவில் இறைவன் நவகோடியிடம் கவலைப்படாதே, உங்க ஊருக்கு மழை பெய்ய ஏற்பாடு செய்கிறேன். நீ ஊருக்கு போவதற்குள் ஒரு சாமியாரை பார்ப்பாய், அவர் உதவுவார் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். நவகோடி வீட்டிற்கு விரைந்தார். வழியில் சாமியாரைப் பார்த்தார். மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவரை ஊருக்குள் அழைத்து வந்து கூட்டம் போட்டு நடந்ததை எல்லோரிடமும் சொன்னார். மக்கள் சாமியாரை வணங்கி உபசரித்தனர்.
நான் ஊர் எல்லையை விட்டு போகும் போது மழை பெய்யும் என்றார். மழையும் பெய்தது. உறங்கி கொண்டிருந்த கலப்பைக்கு வேலை வந்தது கண்டு பூஜை செய்து ஊர் மக்கள் விவசாயம் செய்ய புறப்பட்டனர். நவகோடியை கேலி செய்தோம். அவரால் தான் நன்மை கிடைத்தது என்று பாராட்டினர். வருண பகவான் வாரி வாரி மழையைத் தந்ததால், பயிர் விளைச்சலில் லாபம் அடைந்தனர். மழை பெய்ததால் தான் உழவர் கலப்பையை எடுப்பர் என்பதை தான் வள்ளுவர் வான் சிறப்பு அதிகாரத்தில்
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி
வளம் குன்றி கால் குறள்:14
என்கிறார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்