

ஆய்வுச்சிந்தனையின் கூறுகளான வரிசைப்படுத்தல் (Sequencing), பிரித்தறிதல் (Distinguishing), பகுத்தல் (Classifying), அடையாளம் கண்டு நினைவுகூர்தல் (Recognising and Recalling), ஊகித்தல் (Inferring), முன்னறிதல் (Predicting), காட்சிப்படுத்திப் பார்த்தல் (Visualizing), பகுத்தாய்தல் (Analysis), முடிவுசெய்தல் (Concluding), மதிப்பிடுதல் (Evaluating) தொகுத்தாராய்தல் (Synthesis) ஆகியவை ஒருவருடைய அன்றாட வாழ்வில் பயன்படுகின்றனவா? என்று அருட்செல்வி வினவினாள். ஆம் என்றார் ஆசிரியர் எழில்.
சமையலறையில்கூட இருக்கிறதா? என்றுவியப்போடு வினவினான் சுடர். ஆம்! சமையலறையில் ஆய்வுச்சிந்தனை எவ்வாறு எல்லாம் வெளிப்படுகிறது என நீங்களே யோசித்து சொல்லுங்களேன் என்று மாணவர்களைத் தூண்டினார் எழில்.
காலையில் அடுப்பில் தீப்பற்றவைத்தல் தொடங்கி இரவில் அதனைத் துடைத்தல் வரையில் உள்ள சமையல் வேலைகள் அனைத்தும் ‘இதற்கு அடுத்து இது’ என ஒரு வரிசையில் மேற்கொள்ளப்படுகின்றன என்றான் அழகன். அடுக்கில் வெவ்வேறு பொடிகள் உள்ள குடுவைகளிலிருந்து, தேவையான பொடியுள்ள குடுவை மட்டும் பிரித்தறிந்து எடுக்கப்படுகிறது என்றாள் நன்மொழி.
சாம்பார் எனும் ஆராய்ச்சி
காய், கனி, கீரை, அரிசி, பருப்பு, பொடிகள், பாத்திரங்கள் என அங்குள்ள அனைத்தும் பகுத்துவைக்கப்பட்டு இருக்கின்றன என்றாள் தங்கம். ஒரு பொருள் வழக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் இல்லையென்றால் அது வேறு எங்கே இருக்கக் கூடும் என்று ஊகித்து அறியப்படுகிறது என்றான் சாமுவேல். ஒருவேளை அப்பொருள் அங்கே இல்லையென்றால், கடந்தமுறை அப்பொருள் எப்பொழுது எடுக்கப்பட்டு எங்கெங்கு கொண்டுசெல்லப்பட்டது என்பது காட்சிப்படுத்திப் பார்த்துத் தேடப்படுகிறது என்றாள் பாத்திமா.
சமையலுக்குத் தேவையான பொருள்கள் உரிய அளவில் தொகுத்தாராய்ந்து சமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பருப்பு, காய்கள், புளி, உப்பு, சாம்பார் பொடி ஆகிய வெவ்வேறு பொருள்கள் உரிய அளவில் தொகுத்தாராய்ந்து சாம்பார் செய்யப்படுகிறது என்றாள் மதி.
நிறம்..சுவை..திடம்
சமைக்கும் உணவின் நிறம் மாறுவதையும் அதிலிருந்து எழும் மணத்தையும் கொண்டே அந்த உணவு வெந்துவிட்டதா என அடையாளம் காணப்படுகிறது. அதன் பக்குவம் நினைவுகூரப்படுகிறது என்றான் தேவநேயன்.
வெந்த உணவைச் சிறிது உண்டுபார்த்து அதில் இருக்கவேண்டிய வெவ்வேறு சுவைகள் சரியான அளவில் இருக்கின்றனவா எனப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்றாள் இளவேனில்.
அவற்றுள் ஏதேனும் ஒரு சுவை கூடியோ குறைந்தோ இருந்தால், எப்பொருளை அதனோடு சேர்த்தால் அச்சுவை மாறும் என்பதை முன்னறிந்து கணிக்கப்படுகிறது என்றான் காதர்.
சமைக்கப்படும் உணவில் ஒரு துளியைஎடுத்துப் பதம்பார்த்து அது உரிய பக்குவத்திற்கு வந்துவிட்டதா என மதிப்பிடுகிறது என்றாள் மணிமேகலை. சாப்பிடுபவரின் விருப்பம், சாப்பிடும் அளவு ஆகியவற்றிற்கேற்ப சமைத்த உணவுகளில் எதனை, யாருக்கு, எவ்வளவு பரிமாற வேண்டும் என முடிவுசெய்யப்படுகிறது என்றான் கண்மணி.
அருமை, அருமை. ஆய்வுச்சிந்தனையத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எழில் பாராட்டினார். ஆய்வுச்சிந்தனையை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? என்று வினவினான் அருளினியன்.
ஆப்பிள் மரம் ஒன்று இருந்தது. அதனடியில் பலரும் பல வேளைகளில் வந்து அமர்ந்தார்கள். அவர்களின் தலையில் ஆப்பிள்கள் விழுந்தன. அவர்கள் அதனை எடுத்து உண்டார்கள். ஒருநாள் அதனடியில் நியூட்டன் வந்தமர்ந்தார். அவரின் தலையிலும் ஓர் ஆப்பிள் விழுந்தது. அதனைக் கையிலெடுத்த அவர், அங்கு என்ன நடக்கிறது என்று கவனித்தார். பழுத்த ஆப்பிள்கள் அம்மரத்திலிருந்து விழுகின்றன என்று புரிந்தது. ஏன் அவை விழுகின்றன என்று ஆராய்ந்தார். எனவே, என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என வினவுவதே ஆய்வுச்சிந்தனைக்கான திறவுகோல் என்று விளக்கினார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com