

எல்லா மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. மருத்துவத்துறை சார்ந்த படிப்பை முடிக்க வேண்டும்; சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவோருக்கு ஏராளமான துணை மருத்துவப் படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றுக்கு நீட் நுழைவுத் தேர்வு அவசியமில்லை.
மருத்துவர் பணிக்கு இணையான மதிப்பும், பொறுப்பும் இந்த படிப்பு முடித்து பணியில் சேர்பவர்களுக்கும் வாய்க்கும். ஒரு சில துணை மருத்துவப் படிப்புகளை முடித்தால், மருத்துவருக்கு இணையான ஊதியம் கூட பெற முடியும். 6 மாதங்களில் தொடங்கும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள் தொடங்கி 4 ஆண்டுகள் வரையிலான பட்டப்படிப்புகள்வரை பல்வேறு வகையிலான துணை மருத்துவப் படிப்புகள் இருக்கின்றன.
பார்மஸி - பார்மசிஸ்ட்
துணை மருத்துவப் படிப்பு என்றதுமே செவிலியர் மற்றும் மருத்துவமனை உதவி சார்ந்த பணியாளர்களையே பலரும் அறிவார்கள். மருந்தியல் (பார்மஸி) சார்ந்த மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) பணியான பார்மசிஸ்ட் படிப்புகள், பொறியியல் படிப்புக்கு இணையான பணிவாய்ப்பு கொண்டவை. பார்மசிஸ்ட் என்பவர் மருந்துக்கடைகளில் பணிபுரிபவர்/ நிர்வகிப்பவர் மட்டுமல்ல. பல்வேறு உடல்நலத் தேவைக்கான மருந்து உற்பத்தி முதல், ஆராய்ச்சி, விநியோகம், விற்பனை உள்ளிட்ட பல மட்டங்களிலும் பார்மசி படிப்பை முடித்தவர்கள் பணியாற்றுவார்கள்.
வேலை ரொம்ப ஈஸி
இதுதவிர சொந்தமாக மருந்துக்கடை வைக்கலாம். பார்மஸி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு உரிமம் கோர முடியும். மேலும் பெரும் மருந்துக் கடைகளிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றலாம். இந்த வகையில் பெரும் மருத்துவமனைகள் முதல் தங்கள் நிறுவன மருந்துகளை மருத்துவர்களிடம் பரிந்துரை செய்பவர்கள்வரை பல்வேறு நிலையிலான பணிவாய்ப்புகளை பெறலாம். மருந்து நிறுவனம் சொந்தமாகத் தொடங்குவதற்கு இந்தப் படிப்பு தகுதியாக உள்ளது.
அரசுப் பணியிலும் சேரலாம்
பார்மஸியில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், இதர பட்டப்படிப்பு முடித்தவர்களைப் போன்று பல்வேறு அரசுத் துறை பணிகளுக்கு முயலலாம். மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் பார்மசி முடித்தவர்களுக்கு பல்வேறு நிலையிலான பணிவாய்ப்புகள் இருக்கின்றன. அதே போன்று பட்டப்படிப்பு தகுதியோடு குரூப் தேர்வுகளையும் எழுதலாம்.
பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள்
பார்மசி படிப்புகளை பட்டம் மற்றும் பட்டயம்என இருவழிகளில் பெறலாம். டி.பார்ம் (D.Pharm) என்னும் டிப்ளமா படிப்பு 2 ஆண்டு காலபடிப்பாகும். பி.பார்ம் (B.Pharm) என்னும் பட்டப்படிப்பு 4 ஆண்டுகாலப் படிப்பாகும். பிளஸ் 2 படிப்பில் அறிவியல் சார்ந்த பாடங்களை எடுத்து படிப்பவர்கள், பார்மஸ்சி பட்டம் மற்றும் பட்டயம் படிக்கத் தகுதி பெறுகிறார்கள். பிளஸ் 2-ல் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முன்னணி கல்லூரியில் பார்மஸி படிக்க எளிதில் அனுமதி கிடைக்கும்.
எப்போதும் தேவை உண்டு
நவீன வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் புதிய நோய்கள் காரணமாக, மருந்துகளின் தேவையும், கண்டுபிடிப்பும் விரிவடைந்து செல்லும். எனவே இந்த துறைக்கு எப்போதும் தேவை இருக்கும். விருப்பமுள்ள மாணவ மாணவியர், பிளஸ் 2-ல் நல்ல மதிப்பெண் பெறுவதோடு, அடிப்படை அறிவியல் பாடங்களில் ஆர்வமும், ஆங்கிலத்தில் கூடுதல் பயிற்சியும் பெறுவது நல்லது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: subashlenin.s@hindutamil.co.in