

இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடாவை ஒட்டி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தால் என்னென்ன மாநிலங்கள் வரும்? தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா. வேறே ஒரு மாநிலம் இருக்கு... அதுதான் ஒடிசா.
‘ஒரிசா...’ ஆமாம். அதுதான் இப்பொ ஒடிசான்னு பேரு மாத்தி இருக்கு. சரித்திரத்துல கலிங்கப் போர்னு படிக்கிறோம் இல்லையா. இன்றைய ஒடிசா மாநிலத்தின் எல்லையை ஒட்டி இருக்குற பகுதிதான் ‘கலிங்கம்’. மகாபாரதம் இதிகாசத்தில் புனையப்பட்ட இடமும், மாமன்னர் அசோகர், போரில் வென்று பின்னர் பெளத்த மதத் துறவியாக மாறிய தலமும் இதுதான்.
பெயர் வந்ததெப்படி?
திருப்பதி மலையில ராஜேந்திர சோழன் பதிச்ச, 11-ம் நூற்றாண்டுக் கல்வெட்டுல ‘ஒட்டா விசாயா’ என்று இருப்பதாய் சொல்லப்படுகிறது. இதுவே மருவி பின்னாளில், புகழ்பெற்ற பூரி ஆலயத்தில் உள்ள 15-ம் நூற்றாண்டுக் காலக் கல்வெட்டில் ‘ஒரிசா’ ஆனது. 1936 ஏப்ரல் 1 அன்று, பிஹார் மாநிலம் பிரிக்கப்பட்டு ‘ஒரிசா’ உருவானது. அதனால், ஏப்ரல் முதல் தேதியை ‘ஒடிசா’ நாளாக் கொண்டாடறாங்க.
நமது நாட்டின் சுமார் 5% பரப்பளவு உள்ள ஒடிசா, வடக்கே சுபர்ணரேகா நதி முதல் தெற்கே ருஷிகல்யா நதிவரை 450 கி.மீ. நீளக் கடற்கரை கொண்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதியில் சில்லிகா ஏரி மற்றும் புத்தபலங்கா, பைடாராணி, ப்ராஹ்மணி, மகாநதி ஆகிய ஆறுகளும் உள்ளன. பூரி – பத்ரக் இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி புயல் சின்னம் ஏற்படுகிறது.
மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு மலைகளால் ஆனது. இவற்றினூடே ஆறுகள் பாய்ந்து விளை நிலங்களை உருவாக்கி வளம் சேர்க்கின்றன. கோரபுட் மாவட்டத்தில் உள்ள டியோமாலி இந்த மாநிலத்தின் உயரமான மலைப் பகுதியாகும். மேலும் சிங்காராம், கோலிகோடா, யெந்த்ரிகா உள்ளிட்ட சிகரங்களும் உள்ளன.
வனமும் வனவிலங்குகளும்
ஒடிசாவில் 49000 ச.கி.மீ., அளவுக்குக் காடுகள் பரந்து உள்ளன. மொத்த பரப்பளவில் 30 சதவீதத்துக்கு மேல் அடர்த்தியான வனப் பகுதி ஆகும். மூங்கில் காடுகள், மாங்க்ரோவ் காடுகளும் மிகுந்துள்ளன. அரிய வகை விலங்குகள், உயிரினங்கள், மயூர்பன்ச் மாவட்டத்தில், நந்தகனம் உயிரியல் பூங்காவில் உள்ளன. சிம்ப்லிபால் தேசியப் பூங்காவில் புலிகள் சரணாலயம் உள்ளது. குரைக்கும் மான், வங்கப் புலி, இந்தியக் காளை, யானை, சிறுத்தை, காட்டுப் பூனை மற்றும் ராஜ நாகம் உள்ளிட்ட 60 வகை பாம்புகள், 300-க்கும் மேற்பட்ட வகை பறவைகள், இரவாடி டால்பின்கள் உள்ளிட்டவை இங்கே வசிக்கின்றன. அருகே ராம்தீர்த்தா என்கிற இடத்தில் முதலைப் பூங்கா; புவனேஸ்வர் அருகே சந்தகா யானைகள் சரணாலயம்; கேந்த்ரபாரா மாவட்டத்தில் பிடர்கானிகா தேசியப் பூங்கா உள்ளது.
மகாநதி சமவெளியில் உள்ள சில்லிகா ஏரி, 1105 கி.மீ., பரப்பில் கிழக்குக் கடற்கரையில் விரிந்துள்ளது. 35 கி.மீ. நீள கால்வாய் இதனைக் கடலுடன் இணைக்கிறது. நீண்ட தூரத்தில் இருந்து பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
இந்தியாவின் நிலக்கரியில் 20 சதவீதம், இரும்புத் தாதுவில் 25 சதவீதம், பாக்சைட் இருப்பில் 33 சதவீதம் கணிசமான அளவில் க்ரோமைட் ஒடிசாவில் கிடைக்கிறது. அதனால் ஜெர்மனியுடன் இணைந்து ரூர்க்கேலா இரும்பு ஆலை உருவானது.
கிழக்குக் கடற்கரை ரயில்வே தலைமை அலுவலகம் புவனேஸ்வர் நகரில் உள்ளது. முக்கிய துறைமுகங்கள் பாரதீப் மற்றும் தமாரா, கோபால்பூர், சுபர்ணரேகா, அஸ்தரங்கா, சாந்திபூர், சூடாமணி, பாலு.
செம்மொழி அந்தஸ்து
நான்கு கோடி மக்கள் வசிக்கிறார்கள். அம்மாநிலத்தின் மக்களின் 80 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களால் ஒடியா மொழி பேசப்படுகிறது. இது ஒடிசாவின் அலுவல் மொழி மட்டுமல்ல; இந்திய அரசால் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்டதும் ஆகும்.
உச்சரிப்பில் வேறுபாடுகளுடன் ஒடியா மொழி, சாம்பல்புரி, கட்டாக்கி, பாலேஸ்வரி, கங்சாமி, தேசியா, கலஹாண்டியா, ஃபுல்பானி என்று பல வகைகள் உண்டு. மேற்கு தெற்கு ஒடியாவில் வசிக்கும் பூர்வக்குடிகள், முண்டா உள்ளிட்ட சாந்தாலி, குவி, முண்டரி, ஹோ மொழிகள் பேசுகின்றனர்.
பூரி ஜகனாதர் கோயில் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கிருந்து 35 கி.மீ. தொலைவில், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் கோனார்க் சூரியக் கோயில் உள்ளது.
இந்த வாரக் கேள்வி:
நம்முடைய தேசிய கீதத்தில் ஒரியா எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
(வளரும்)
கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com