

பள்ளிக் காலங்களில் சாரணர் இயக்கத்தில் இருந்தது, கிராமவாசி டி.ரேவதிக்கு குடிமைப்பணியில் ஒன்றான ஐசிஏஎஸ் பெற உதவியாக இருந்துள்ளது. தற்போது இவர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் கண்ட்ரோலர் ஆப் அக்கவுண்ட்ஸ் பணியாற்றி வருகிறார்.
பெரியகுளம் தாலுகாவைச் சேர்ந்த லட்சுமிபுர கிராம விவசாயத் தம்பதி தனசேகரன், லதா. இவர்களுக்கு டி.பிரசன்னா,டி.ரேவதி என இரண்டு குழந்தைகள். இவர்களில், அண்ணன் பிரசன்னா, ஐடி பொறியாளராகி லண்டனில் பணியாற்றுகிறார். இளையவரான ரேவதி, குடிமைப்பணி தேர்வில் வென்று ஐசிஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வரை படித்தார் ரேவதி. எப்போதுமே முதல் ரேங்க் மாணவியாகவே இருந்துள்ளார். இதனால், பள்ளியில் செல்ல மாணவி என்றானவர், 10, 12 வகுப்புகளில் தேனி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
பூகம்பத்தினால் உண்டான ஈடுபாடு
இது குறித்து அதிகாரி ரேவதி கூறுகையில், “தாம் அதிகம் படிக்கவில்லை என்பதால், எங்களை பெற்றோர் நன்றாகப் படிக்க வைக்க விரும்பினர். வகுப்புகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டது மட்டுமே முதல் ரேங்க் பெற உதவியது. மற்றபடி, கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்வது எனக்கு வழக்கம். அப்படித்தான் பள்ளி சாரணர் இயக்கத்தில் இணைந்து அதன் தலைமை மாணவியாக இருந்தேன். அப்போது குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக பொதுமக்களிடம் பல்வேறு உதவிகேட்டு நேரில் சென்றோம். பொதுமக்களுடன் நேரடியாகப் பேச கிடைத்த அந்த அனுபவம்தான் எனக்கு குடிமைப்பணி தேர்வு எழுத அடித்தளமிட்டது.
விநாடி வினா, மேடைப்பேச்சு போட்டி, கட்டூரைப்போட்டி ஆகியவற்றிலும் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன். எங்களுடைய பள்ளியில் நடத்தப்படும் விழாக்களுக்கு ஆட்சியர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது எங்களது பள்ளி முதல்வர் ஜெயந்தி மனோகரனுக்கு வழக்கம். அப்படி எங்களது பள்ளிக்கு வந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த முக்கியத்துவமும் என்னை குடிமைப்பணி தேர்வு எழுத தூண்டியது” எனத் தெரிவித்தார்.
பி.இ. சிவில் பொறியியல் பட்டப்படிப்பை கோயம்புத்தூரின் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2009-ல் ரேவதி முடித்தார். இதையடுத்து, முதல் முறையாக 2010-ல்மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதியுள்ளார். முதல் நிலை தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாமல் போனது. அதன் பின் குடிமைப்பணி தேர்வை நுட்பமாகப் புரிந்து கொண்டார் ரேவதி. இதன் பலனாக, இரண்டாவதாக 2011-ல் எழுதிய தேர்வில் இந்திய சிவில் அக்கவுண்ட்ஸ் பணி கிடைத்தது. இதில் அவர் மத்திய துறையின் கீழ் 2012 பேட்ச்சின் ஐசிஏஎஸ் அதிகாரியாகி விட்டார்.
தோழி மூலமாக கிடைத்த வழிகாட்டல்
இது குறித்து ஐசிஏஎஸ் அதிகாரி ரேவதி கூறும்போது, “கல்லூரி வகுப்பு தோழியான சண்முகப்பிரியாவின் தந்தை ஒரு ஐஇஎஸ் அதிகாரியாக இருந்தார். தன்னை போல தனது மகளும் குடிமைப்பணி தேர்வு எழுத விரும்பி அவர் கொடுத்த நூல்களும் வழிகாட்டுதல்களும் எனக்கு மிகவும் உதவின . இதன் காரணமாக நான் பி.இ .முடித்து எந்த வேலைக்கும் செல்லாமல், குடிமைப்பணி தேர்வை எழுத முடிவு செய்தேன். இதற்காக, எனது குடும்பத்தாரும் ஒத்துழைப்பும் வழிகாட்டலும் நல்கினர். குறிப்பாக
வரலாற்று துறை பள்ளி ஆசிரியரான தவமணி மற்றும் ராஜலட்சுமி, தாவரவியல் துறை ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தினர்.
விருப்பப்பாடமாக பொது நிர்வாகம், சமூகவியல் ஆகியவற்றை எடுத்தவர், சென்னையில் தனியார் பயிற்சி நிலையம் ஒன்றில் சேர்ந்து பயின்றார். அப்போது, குடிமைப்பணி தேர்விற்கான பாடநூல்கள் கிடைப்பது அரிதான காலம். இதனால், டெல்லிக்கு சென்று தங்கி படித்த ரேவதிக்கு இரண்டாவது முயற்சியில் வெற்றி கிட்டியது. இவருக்கு கிடைத்த ஐசிஏஎஸ் பணியானது, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 22 வகைப் பணிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. ஏதோ ஒரு இளநிலை பட்டப்படிப்பு மட்டுமேஇத்தேர்விற்கானத் தகுதி. ஐசிஏஎஸ் பணியில் மாநிலப் பிரிவுகள் கிடையாது. பணியில்அமர்ந்தபின் கட்டிடப் பொறியாளர் வினோத்குமாருடன் 2013-ல் திருமணமானது. இவர்களுக்கு ராஜ் தேஜா, ஐத்ரேயன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஐசிஏஎஸ் அதிகாரிகள், தலைநகரான டெல்லியில் உள்ள அமைச்சகங்களின் தலைமையகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அதன் பிராந்திய, கிளை அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். ஐசிஏஎஸ் பணிக்கான 10 மாதப் பயிற்சி, ஹரியாணாவின் பரீதாபாத்தில் உள்ள அருண்ஜேட்லி தேசிய நிதி நிர்வாக நிறுவனத்தில் கிடைத்தது. இது, டெல்லியில் உள்ள தேசிய கணக்கு மற்றும் நிதி நிறுவனத்திலும், மத்திய கல்வி அமைச்சகத்திலும் தொடர்ந்தன.
ஆரம்பத்தில் மின்சாரத்துறை அமைச்சகத்திலும் அடுத்து சிபிஐசியில் உதவி கண்ட்ரோலர் ஆப் அக்கவுண்ட்ஸ் என தனது பணியை தொடர்ந்தார். துணை கண்ட்ரோலர் ஆப் அக்கவுன்ஸ் பணியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும், துணை நிதி ஆலோசகராக கருப்புப்பூனை படையான என்எஸ்ஜி எனும் தேசிய பாதுகாப்பு படையிலும் பதவி வகித்தார். தற்போது வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையில் கண்ட்ரோலர் ஆப் அக்கவுண்ட்ஸ் பணியில் உள்ளார்.
அதிகாரி ரேவதியின் ஐசிஏஎஸ் பணியில் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு இல்லை எனினும், அவர் ஏற்றிருக்கும் பொறுப்பு அனைத்து அமைச்சகங்களின் முக்கிய அங்கமாகும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: shanmugam.m@hindutamil.co.in