

கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் வழியாக நாடுகளுக்கு இடையில் அமைதி நிலவ செயலாற்றி வரும் சர்வதேச அமைப்பு யுனெஸ்கோ. இதற்கென தனித்த அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யுத்தங்கள் மனித மனங்களில் இருந்துதான் உதிப்பதால் அமைதிக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மனித மனங்களில் கட்டமைப்பதே இதன் முகவுரையாகும். எனவே, மனிதர்கள் வானொலி எனும் ஊடகத்தின் துணை கொண்டு அமைதியைக் கட்டமைக்க வேண்டும் என்கிறது யுனெஸ்கோ.
ஆனால், தனி மனிதர்கள் சுயாதீனமாக வானொலி நடத்த இந்தியாவில் அனுமதி இல்லை. சமுதாய வானொலி மற்றும் பொதுத் சேவை வானொலிகளின் ஊடாக இந்த சேவையைச் செய்ய நமது அரசு அனுமதிக்கிறது. மோதல் தடுப்பு மற்றும் அமைதியை கட்டியெழுப்புவதில் வானொலியின் பங்கு முக்கியமானது.
வானொலி ஒரு முக்கியமான போர் வீரராக பேரிடர் காலத்தில் செயல்படுகிறது. பராமரிப்பு மற்றும் அமைதிக்கான மாற்றத்தின் இன்றியமையாத கருவியாக இது இருக்கிறது. அத்தியாவசிய சேவைகளை வழங்குவதும், மக்களின் கவலைக்குரிய பிரச்சினைகளை முன்வைப்பதுவும், அதிகாரிகள் மற்றும் குடிமக்களிடையே ஒரு பாலமாக வனொலி செயல்படுகிறது.
அமைதிக்கான வானொலி: தொழில்முறை வானொலியானது குறிப்பிட்ட வானொலி நிகழ்ச்சிகள் மூலம் வன்முறை வெடிக்கும் முன் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில் கலவரம் அல்லது இயற்கை பேரிடர் நிகழ்ந்துவிட்டால் புறச்சூழல் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தை குறைத்தல்.
வதந்திகள் பரவ விடாமல் உண்மையான கள நிலவரத்தை உடனுக்குடன் தெரிவித்தல். வெறுப்பு, பழிவாங்கும் உணர்ச்சி அல்லது ஆயுதம் ஏந்துவதற்கான தூண்டுதல் கலவரக்காரர்கள் மூலமாக மக்கள் மனதில் ஊன்றி விடாமல் தடுக்க வானொலியின் நிகழ்ச்சிகள் உதவுகின்றன.
தொழில்முறை சுயாதீன வானொலி ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது மற்றும் நிலையான அமைதிக்கான அடித்தளத்தை வழங்குகிறது. எனவே அடிக்கடி மோதல் ஏற்படும் இடங்களை அறிந்து, அங்கு சமாதானத்தைக் கட்டியெழுப்பும் உத்திகளில் வானொலி சேர்க்கப்பட வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது.(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com