நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 29: பங்குச்சந்தை எப்படி செயல்படுகிறது?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 29: பங்குச்சந்தை எப்படி செயல்படுகிறது?
Updated on
2 min read

பங்குச்சந்தை, 1990-க்கு முன்புவரை சூதாட்டம் போல பார்க்கப்பட்டது. இதை பணமழை கொட்டும் இடம் என்பார்கள். இங்கு கடுகளவு முதலீடு செய்தால் திடீரென மலையளவுக்கு பணம் வரும். மலையளவு பணம் போட்டால் கை சொடுக்கும் நேரத்தில் காணாமல் போய்விடும் என்பார்கள்.

இவ்வளவு ரிஸ்க் நிறைந்த பங்குச்சந்தையின் மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2000-க்கு முன்புவரை சில ஆயிரங்களாக இருந்த பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, இப்போது 10 கோடியை கடந்திருக்கிறது. 2014-க்கு பிறகு பங்குச்சந்தையில் புழங்குவோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் வங்கி சேமிப்பு, தங்கம், நிலம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் லாபத்தைவிட அதிகளவில் லாபம் கிடைக்கும். பணவீக்கத்தை வெற்றிகரமாக வீழ்த்தக் கூடிய அளவுக்கு லாபம் வரும்.லாபம் கிடைக்காத சூழலும் இருக்கிறது.

ஆனால் நீண்ட கால முதலீட்டில் பெரும்பாலும் அதிக லாபம் கிடைத்திருப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் 12 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் கிடைக்கும். இந்த அளவுக்கு லாபம் தரும் வேறு முதலீட்டு திட்டங்கள் இல்லை என்பதாலே, புத்திசாலிகள் பங்குச்சந்தை நோக்கி செல்கிறார்கள்.

பங்குச்சந்தை என்றால் என்ன? - பொதுவாக, பொருட்களை விற்கும்/வாங்கும் இடத்தை சந்தை என்கிறோம். அதுபோலதான், ஒரு நிறுவனத்தின் பங்குகளை (பண பொருட்களை) விற்கும்/வாங்கும் இடத்தை பங்குச்சந்தை (Share Market/Stock Market) என்கிறார்கள்.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தை சென்னையில் நடத்திவரும் முதலாளி, தனது நிறுவனத்தை தமிழ்நாடு முழுவ‌தும் விரிவுப்படுத்த திட்டமிடுகிறார். அதற்கு அவருக்கு ரூ.1 கோடி தேவைப்படுகிறது.

இந்த ரூ.1 கோடியை வங்கியில் கடனாக வாங்கினால் மாதந்தோறும் பல லட்ச ரூபாய் வட்டியாக செலுத்த வேண்டும். ரூ.1 கோடியை செலுத்தும் அளவுக்கு நிறுவனம் வளரும்வரை வட்டி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இது மிகவும் சிரமமான காரியம். இதை தவிர்க்க அந்த முதலாளி 1 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்கள் மூலம் சேகரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நிறுவனத்தின் சொத்துக்களையும், அதில் இருந்து வரக் கூடிய லாபத்தையும் அந்த முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கடன், முதலீடு ஆகிய இரண்டின் மூலமாக நிதியை திரட்டினால் அதற்கு முதலாளி பணம் செலுத்த வேண்டி வரும்.

எனவே அந்த முதலாளி தனது நிறுவனத்தின் பங்குகளை (Share/Stock) பங்குச்சந்தை மூலமாக 100 ரூபாய் அளவுக்கு சிறு சிறு பாகமாக பிரித்து பொதுமக்களிடம் அதனை விற்று நிதி திரட்டுகிறார். இவ்வாறு திரட்டுவதால் அவருக்கு வட்டி கடன் தொல்லையும் இல்லை, லாபத்தை பகிர்ந்து அளிக்கவும் தேவையில்லை.

அதேவேளையில் நிறுவனத்தின் மதிப்பு உயர உயர, 100 ரூபாய் மதிப்புள்ள அந்த பங்குகளின் மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். அவ்வாறு மதிப்பு உயரும்போது விற்றால், அதை வாங்கியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கண்காணிக்கும் அரசு அமைப்பு: பங்குச்சந்தையில் போலி நிறுவனங்கள் நுழைந்து மக்களிடம் பணம் வசூலிப்பதைத் தடுக்க மத்திய அரசு ‘செபி' (SEBI) என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறது. நம்முடைய நாட்டில் பங்குச்சந்தைகள், நிதிச்சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டு அமைப்பு மும்பையில் உள்ளது.

தன‌து நிறுவனத்துக்கு நிதி திரட்ட விரும்பும் முதலாளிகள் தங்களது நிறுவனம் தொடர்பான அனைத்து விபரங்களையும் (DHRB) இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India) முதலில் தாக்கல் செய்ய‌ வேண்டும். அதனை செபி முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே, நல்ல நம்பகமான நிறுவனம் என தெரியவந்த பிறகே அதன் பங்குகளை விற்க அனுமதி அளிக்கும்.

(தொடரும்)

இரா.வினோத்

கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in