

"தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பார்கள். அது ஒற்றைத் தலைவலிக்கு மிகவும் பொருந்தும். அத்தகைய ஒற்றைத் தலைவலி பாதிப்பு சிலருக்கு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை வரக் கூடும். நான்கைந்து மணிநேரம் முதல் நாள் கணக்கில் கூட நீடிக்கும் இந்த வலி சம்மட்டியால் யாரோ அடிப்பதைபோல மிக அழுத்தமான, தாங்க முடியாததாக உணரப்படுகிறது. அதீத தலைவலியுடன் வாந்தி அல்லது குமட்டலும் சோர்வும் இதில் காணப்படுகிறது.
இன்னும் முக்கியமாக, இந்த வலி ஒளி மற்றும் ஒலிக்கு அதிகரிக்கும் ஒரு வலியாகவும் (photophobia & phonophobia), சில வாசனைகளால் அதிகரிக்கும் ஒன்றாகவும் (osmophobia), சமயங்களில் பணிச்சுமையாலும், உடற்பயிற்சிகளாலும், ஏன் தலையை சிறிது அசைப்பதாலும் கூட அதிகரிக்கும் ஒன்றாக வெளிப்படுகிறது. அமைதியான இருட்டான இடங்களை இவர்கள் தேடுவதும் இதனால்தான்.
இரண்டு வகை ஒற்றைத் தலைவலி என்று பெயர்தானே தவிர சிலருக்கு இது இருபக்கங்களிலும் உணரப்படும் வலியாகவும், கழுத்து அல்லது வயிற்று வலியாகவும் உணரப்படுகிறது. அத்துடன் பார்வைக் கோளாறு, கண்ணீர் அல்லது கண் சிவப்பு, தலைச்சுற்றல், பதற்றநிலை, தசைகளில் வலுவின்மை, தோல் உணர்வின்மை, பேச்சுக் குளறல், கவனமின்மை, உற்சாகமின்மையும் ஏற்படக் கூடும். பசியின்மை, செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் இதில் தோன்றக் கூடும். அதிலும் பெரும்பான்மையினரில் மாதவிடாயை ஒட்டி menstrual migraine-னாக இது வெளிப்படுகிறது.
ஹார்மோன்கள் அளவில் ஏற்படக்கூடிய பெரும் ஏற்றத்தாழ்வுகளால் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும் குறைவான சோடியம் ப்ரோட்டான் எக்ஸ்சேஞ்சர் NHE1 அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டிற்கு காரணம். இதில் ஹேப்பி ஹார்மோன் என அழைக்கப்படும் செரடோனின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதும் சில நேரம் வலிக்கு காரணமாகலாம். இந்தத் தலைவலியிலும் இரண்டு வகை உள்ளது.
இவர்களில் 15-25 சதவீதத்தினருக்கு தலைச்சுற்றல், கண் இருட்டுதல் போன்ற ‘aura' எனப்படும் முன் அறிகுறிகள் தோன்றிய சில நிமிடங்களில் தலைவலி ஏற்படுவதை classic migraine என்பர். அறிகுறியே இல்லாமல் ஏற்படும் தலைவலியை common migraine என்கின்றனர். வரும் வகையில் தான் வித்தியாசம் உள்ளதே தவிர இந்த இரண்டுக்குமே சிகிச்சை ஒன்றுதான். வந்தபிறகு சிகிச்சை மேற்கொள்வதைக் காட்டிலும் வராமல் தடுப்பதுதான் இதில் சிறந்தது.
இஞ்சி டீ உதவும்: உணவை சரியான இடைவெளிகளில் உட்கொள்ளாமல் இருப்பது, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் பற்றாக்குறை, மன அழுத்தம், தூக்கமின்மை, அதீத வெளிச்சம் அல்லது ஒலி, சில வாசனை திரவியங்கள், சில உணவுகள் குறிப்பாக கேஃபைன் நிறைந்த கார்பனேட்டட் பானங்கள், காபி, டீ, சாக்லெட், சீஸ் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றை தவிர்த்தல் முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக பலனளிக்கும்.
இதுதவிர கருத்தடை மாத்திரை உள்ளிட்ட சில மருந்துகள், மாதவிடாய் பிரச்சினைகள் ஆகியன ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்பவை. அடுத்து உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகிய வாழ்க்கை முறை சார்ந்தவற்றை முறையாகக் கடைபிடிப்பதும், அத்துடன் வீட்டு வைத்தியங்களான மசாஜ், நீராவி பிடித்தல், இஞ்சி டீ ஆகியன உதவும் என்பதால் இவற்றையும் ஏற்பது நல்லது.
ஆனால், மஞ்சுவைப் போல மைக்ரெய்ன் தலைவலியால் நாள்பட அவதிப்படுபவர்களின் உடனிருக்கும் பெற்றோரும், மற்றவர்களும் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னதான் பொதுவாக வலியை மூளை உணராது என்றாலும், உண்மையில் இவர்களின் மூளை மற்றும் நரம்பியல் மண்டலம் அதிக உணர்திறனுடன் (sensitive) இருப்பதால்தான் தலைவலி மற்றும் மற்ற அறிகுறிகள் தொடர்ந்து ஏற்படுகிறது.
ஆகையால் இவர்கள் சொல்வதை நம்பாமல் சிகிச்சையைத் தவிர்ப்பதும், தள்ளிப்போடுவதும் பதின்பருவத்தில் கற்றல் குறைபாடுகளை ஏற்படுத்துவதுடன் பிற்காலத்தில் மனநோயாக மாறும் ஆபத்தும் இதில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்த மைக்ரெய்ன் தலைவலி ஏற்படும்போது ரத்த நாளங்கள் விரிவடைவதாலும், நரம்பியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக செரடோனின் அதிகம் சுரப்பதால் ஏற்படுவதால் சிகிச்சையும் அதை ஒட்டியே அமையும். ஒற்றைத் தலைவலியை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும் தலைவலியின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சைகளும் குறிப்பாக தலைவலிக்கான பொதுவான பாரசிட்டமால் மற்றும் ரத்த நாளங்களைக் குறுகச் செய்யும் எர்காட்டமைன் மருந்துகளும், செரடோனின் அளவைக் குறைக்கும் ட்ரிப்ட்டன்களும், anti CGRP சிகிச்சைகளும், இவற்றுடன் வைட்டமின்களும் நன்கு பலனளிக்கும்.
ஆகையால், மருத்துவரின் பரிந்துரையுடன் இவற்றை முறையாக உட்கொள்வது இங்கு அவசியமாகிறது. எல்லாவற்றைவிடவும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் யாரையும் ஒற்றையாக விட்டுவிடாமல் மற்றவர்களும் அவர்களுக்கு உற்ற துணையாக நிற்பது அவசியம்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com