

ராணுவத்துக்காக அதிகம் செலவழிக்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாதுகாப்புத்துறை தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்துடன் இந்தியாவின் இரு மாநிலங்களில் ‘பாதுகாப்பு தொழில்துறை தடங்கள்' (Defence Industrial Corridors) உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்கள் உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகும்.
இந்த தொழில்துறைத் தடங்களில், ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களோடு, புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஏதுவாக கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதின்படி, பாதுகாப்புதுறை உற்பத்தி நிறுவனங்கள் ஒருசேரதொகுதியாக இயங்குவது பல நன்மைகளை தொழில் நிறுவனங்களுக்கும் தேசத்திற்கும் உண்டாக்கும்.
பாதுகாப்பு தளவாடஉற்பத்தியில் ஈடுபடும் குறு-சிறு-பெருதொழில்கூடங்களில் பெரிய அளவிலான நேரடி வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ‘தொழில் தடம்' ஏற்படுத்தும். கூடவே,போக்குவரத்து, வீட்டுவசதி, விடுதி, உணவகங்கள், பராமரிப்பு என பல துறைகளில் மறைமுக வேலைவாய்ப்புகள் பெருகும்.
தமிழ்நாடு தொழில் தடம்: ஒரே நகரமாக இல்லாமல் பல நகரங்களின் தொகுப்பாக இருப்பதால் ‘தொழில் தடம்' (Industrial Corridor) என அழைக்கப்படுகிறது. என்னென்ன நகரங்கள் இந்தத் தடத்தில் இடம்பெற்றிருக்கின்றன? சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஓசூர் ஆகிய பெரு-சிறு நகரங்களின் கூட்டிணைப்பே தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை தடம்!.
இந்த நகரங்களை மையம் கொண்டு பாதுகாப்புத்துறை சார்ந்த தளவாட உற்பத்தி பெருகும். கூடவே, சார்பு தொழில்துறை (Allied Industries) நிறுவனங்களும் வளர்ச்சியடையும். அடுத்த 5 ஆண்டுகளில் தொழில் தடத்தின் பரிமாணங்கள் வெளியே தெரியும். இந்தியாவில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த அரிய வாய்ப்பை தற்போதைய பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தொழில்துறை தடத்தில், பாதுகாப்புத் தளவாடங்களோடு விண்வெளி தளவாடங்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
வேலை வாய்ப்புகள்: பொறியியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் பல மடங்கு பெருகும். இயந்திரவியல், உலோகவியல், மின்னணுவியல், விமானவியல், விண்வெளி, வேதியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிட்டும்.
இது தவிர மேலாண்மை, வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் நிர்வாக பணிகளில் வாய்ப்புகளைப் பெறலாம். மென்பொருள், ஆளில்லா விமானங்கள், மெய் நிகர் தொழில்நுட்பங்கள், சிறிய செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துறைகளில் பட்டம்/பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்புகள் உண்டு.
மாணவ மாணவிகள் தமது சொந்த மாநிலத்திலேயே உருவாகிவரும் எதிர்கால வேலைவாய்ப்புகளை மனதில் கொண்டு பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள். தடம் பதிக்கப்போகும் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் தடம், பல எதிர்கால சாதனையாளர்களை உருவாக்கி, தேசப் பாதுகாப்பில் தன்னிறைவை கட்டமைக்கட்டும்!
(தொடரும்)
கட்டுரையாளர், ‘இந்தியா 75 : போர்முனை முதல் ஏர்முனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com