

போரினால் படுகாயம் அடைந்த வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள், ஊரெங்கும் பரவிய கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள் அனைவரையும் மீட்க மேற்கு வங்கத்தின் பங்கான் கிராமத்தில் அகதிகள் முகாமுக்கு டாக்டர் திலீப் சென்றார்.
முதல் நாள் டாக்டர் திலீப்பும் உடன் சென்ற மருத்துவர்களும் உள்ளே நுழைந்தபோது இரண்டே இரண்டு அறை கொண்ட அந்த சிறிய மருத்துவமனையில் இருக்க கொள்ளாமல் காலராவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகள் தவித்து கொண்டிருந்தனர்.
அதிலும் நிறைய குழந்தைகள் வேறு. படுக்கை வசதியின்றி அவர்கள் எடுத்த வாந்தி மற்றும் வயிற்றுபோக்கின் மீதே அவர்கள் தரையெங்கும் விழுந்து கிடந்ததைப் பார்த்து பதறிப்போனார் திலீப். அதன்மீது நடந்துதான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
நீரிழப்பால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உடனடித் தேவை சலைன் என்பதால் இயன்றவரை வேகமாக அவர்கள் நரம்புகளில் சலைன் ஏற்றினார். இருந்த சலைன் பாட்டில்களும் முதல் 48 மணிநேரத்திலேயே தீர்ந்துபோக அவர் கண் முன்னேயே சிறு உயிர்கள் இறப்பதை கண்டு வேதனையுற்றார்.
நீரிழப்பைக் குறைக்க உதவும் நரம்பு வழியாக ஏற்றப்படும் சலைன் பாட்டில்கள் அந்தக் காலங்களில் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதுவும் அவை இப்போது போலன்றி, கனமான கண்ணாடி பாட்டில்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு, கனமான பெட்டிகளில் வரும்.
விலையுயர்ந்த அந்த சலைன்களும் முகாமில் தீர்ந்துபோன நிலையில், சில உயிர்கள் கண்முன்னே இறப்பதையும் கண்டு இனியும் சும்மா வேடிக்கை பார்க்க முடியாது என்று அதற்கான தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்தார் திலீப்.
உயிர்காத்த உப்பு: ஏற்கெனவே கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் ஹேம்நாத் சேட்டர்ஜி மற்றும் ஆப்பிரிக்க நாட்டின் டாக்டர் பாரூவா, காலரா நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைவான அளவில் உப்புக்கரைசலைப் பயன்படுத்தி அது ஓரளவு நல்ல பலன்களைத் தந்தது என்று குறிப்பிட்ட விஷயத்தை படித்திருந்தார் திலீப். ஆகவே தனது ஆராய்ச்சியின்போது ஓஆர்எஸ் முன்மாதிரிகளை முயன்றதை இப்போது செயல்படுத்திப் பார்க்க முடிவு செய்தார்.
4 டீஸ்பூன் சமையல் உப்பு, 3 டீஸ்பூன் சோடா உப்பு மற்றும் 20 டீஸ்பூன் குளுகோஸ் ஆகிய மூன்றும் சிறு பொட்டலங்களாக பிரித்துக் கட்டி வைத்துக் கொண்டு. அவற்றை கொதித்து ஆறிய தண்ணீரில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்துப் பார்த்தார்.
நீரிழப்பைக் குறைக்க அது உதவியதுடன் நோயாளிகளுக்கு உடனடி பலனும் கிடைத்தது. அந்தத் தகவலை அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கும் கூறி, அதனைப் பயன்படுத்த அறிவுறுத்த "டாக்கா உப்புக்கரைசல்" என்று அந்த ஃபார்முலாவை மற்ற மருத்துவமனைகளும் பயன்படுத்தத் தொடங்கின.
ஏழைகளின் அமுதம்: டாக்டர் திலீப்பின் நம்பிக்கை வீண் போகவில்லை. பங்கானில் அதுவரை 30 சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை டாக்கா உப்புக்கரைசல் சட்டென்று பத்து மடங்காகக் குறைத்தது. பங்கானில் இரு வாரங்களிலேயே காலரா மற்றும் பிற வயிற்றுப்போக்குகளின் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்ததைக் கண்டு, அந்த உப்புக்கரைசலை மாநிலமெங்கும் பயன்படுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் டாக்டர் திலீப்.
ஒரு கட்டத்தில் பெரிய பீப்பாய்களில் சுத்தமான தண்ணீர் கலந்த டாக்கா உப்புக்கரைசல் நிறைக்கப்பட்டன. பீப்பாயின் கீழே சிறிய குழாய் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் நீர்த்தன்மை குறைந்து அதிக தாகத்துடன் இருந்த அத்தனை காலரா நோயாளிகளுக்கும் அது தொடர்ந்து வழங்கப்பட்டது.
வாய்வழியாக வழங்கப்படும் அந்த 'ஓரல் சலைன்' உயிர்களை நிச்சயம் காக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளித்ததுடன், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வானொலி வாயிலாக தொடர்ந்து, டாக்கா உப்பு எனும் ஓரல் சலைனின் பயன்பாடுகள் குறித்து அகதிகள் மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் பரப்பப்பட்டன.
ஒரு லிட்டர் தண்ணீரில் அதில் 22 கிராம் குளுகோஸ், 3.5 கிராம் சோடியம் குளோரைடு மற்றும் 2.5 கிராம் சோடியம் பைகார்பனேட் அவ்வளவுதான். இந்த எளிய உப்புக்கலவை எண்ணற்ற மக்களின் உயிர்களை காத்த அமிர்தமாக (Magic Elixir) மாறியது. இதுதான் பிற்பாடு ஓஆர்எஸ் என மாறி இன்றுவரை லட்சக்கணக்கான உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கிறது.
(டாக்டர் திலீப் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com