அறிவியல்ஸ்கோப் - 28: எளிமையான மனிதரின் வலிமையான கொள்கை

அறிவியல்ஸ்கோப் - 28: எளிமையான மனிதரின் வலிமையான கொள்கை
Updated on
2 min read

ஒருநாள் டார்வின் தனக்கு பழக்கமான கிராமமொன்றுக்குச் சென்றார். அங்கு அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் இவரிடம் வேடிக்கை செய்ய நினைத்தனர். வேண்டுமென்றே பல்வேறு பூச்சிகளின் பாகங்களை ஒரு காகிதத்தில் ஒட்டி இவரிடம் காண்பித்தனர். நீங்கள்தான் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கின்றீரே இந்த பூச்சியின் பெயர் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று கேட்டனர்.

அடடா இது ஒரு அருமையான பூச்சியாயிற்றே. இதனை நீங்கள் பிடித்தபோது ரீங்காரம் (ஹம்) செய்ததா? வேடிக்கை செய்த சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ஆமாம் என்றனர். அப்படியென்றால் இது ஹம்பக் (பக் என்றால் பூச்சி) என்றாராம். அந்த அளவுக்கு இவர் சிறுவர்களையும் மதித்தார்.

இரு அற்புத மனிதர்கள்: பட்டியல் போடமுடியாத அளவுக்கு டார்வின் வாழ்க்கையில் பல்வேறு அறிவியலாளர்களும் உதவினர். எடின்பரோ பல்கலையில் மருத்துவத்தில் சேர்த்தாலும், கேம்பிரிட்ஜ் பல்கலையில் இறையியல் முடித்தாலும் கடைசியில் தனது மகன் மருத்துவராகவும் ஆகாமல், மதகுருவாகவும் ஆகாமல் வீணாகிவிட்டார் என டார்வின் தந்தை வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஹேன்ஸ்லோ என்பவர் பீகில் கப்பல் பயண வாய்ப்பை டார்வினுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். ஐந்தாண்டுகள் நீடித்த அந்த கப்பல் பயணத்தில் அவர் கற்றது ஏராளம்.

இந்த பயணத்தோடு சேர்த்து 20 ஆண்டுகால உழைப்பில் “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலை எழுதியிருந்தார். இதே நேரம் மலாயாவில் இருந்த ஆல்பிரெட் வாலஸ் என்பவர் இவர் கண்டறிந்த அதேபோன்றதொரு கோட்பாட்டை இவருக்குஅனுப்பி கருத்து கேட்டார். எப்படி இருந்திருக்கும் டார்வினுக்கு! மிகவும் வேதனையடைந்தார்.

“நான் கண்டறிந்த இந்த கோட்பாட்டை வாலஸ் அவர்களிடமிருந்து அற்பமாக கற்றேன் என்று நினைக்கப்படுவதைவிட எனது நூலை நான் எரித்துவிடுவதே மேல்” என்ற நிலைக்கு வருந்தினார். இதனை அறிந்த வாலஸ், டார்வின் எவ்வளவு பெரிய மேதை அதைஅவர் ஒருவரே கண்டறிந்ததாக இருக்கட்டும் என்ற பெருந்தன்மையான முடிவுக்கு வந்தார். இறுதியில் இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பாக இது வெளியானது. அந்த விதத்தில் இருவரும் மகிழ்ந்தனர்.

குரங்கிலிருந்து வந்தாய்! - இவ்வாறு கண்டறிந்த பிறகும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அவ்வளவு எளிதில் ஏற்கப்படவில்லை. கடவுள் விண்ணைப் படைத்தார், மண்ணைப் படைத்தார், உயிரினங்களைப் படைத்தார், மனிதனைப் படைத்தார் என்று புனிதநூல்கள் கூறிக் கொண்டிருந்தன.

ஆனால், மனிதர் உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு முந்தையை மூதாதையரிடமிருந்து பரிணமிக்கின்றன என்றார் டார்வின். ஒவ்வொரு உயிரினமும் அடுத்த உயிரினங்களைச் சார்ந்திருக்கும் அதே நேரம் அவர்களுக்குள் உணவு, வாழ்விடம் உள்ளிட்டவற்றுக்காக ஏற்படும் போட்டிகளில் வலிமையானதே நீடித்து நிலைத்திருக்கும் என்ற கோட்பாட்டை எவ்வாறு மதவாதிகள் ஏற்பர்.

இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்தன. பத்திரிகைகளில் டார்வினது முகத்தை குரங்கின் உடலோடு இணைத்து கார்ட்டூன்கள் வெளியிட்டனர். “நீயும் உனது குடும்பத்தினரும் வேண்டுமென்றால் குரங்குகளிடமிருந்து பரிணமித்தீர்கள் என்று கூறிக் கொள். எங்களை அவ்வாறு கூற உனக்கு உரிமையில்லை” என பலவாறு மிரட்டினர்.

வாழ்நாள் முழுவதும் உழைப்பைத் தவிர ஒன்றையும் அறியாத டார்வின் பலமுறை நோய்வாய்ப்பட்டார். ஒருமுறை கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என்ற நிபந்தனையோடு சொந்த கிராமத்துக்கு மருத்துவர் அனுப்பிவைத்தார். அங்கிருந்தபோதுதான் மண் உருவாக்கத்திலும் அதனைசத்தானதாக மாற்றுவதிலும் மண்புழுக்களின் பங்கை டார்வின் கண்டறிந்தார்.

தனது வாழ்நாளையும் மனைவி மக்களோடு பெரும்பாலும் செலவழிக்கவில்லை. அவரது குழந்தைகளும் பல்வேறு நோய்த்தொற்றால் மரணமடைந்தன. ஆனால், டார்வின் தனது எளிமையான வாழ்வின் மூலம் வலிமையான கொள்கை வழங்கிவிட்டு சென்றார்.

- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in