

நாம் கேட்கும் கதையை அப்படியே எழுத்தாக மாற்றும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். முதலில், கதையின் கரு எது என்று தெளிவாகக் குறித்துக்கொள்ள வேண்டும். கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள் எவை என்று புரிந்துகொள்ள வேண்டும். கதை எங்குத் தொடங்குகிறது, அது எப்படிச் செல்கிறது, அதன் முடிவு என்ன என்பதில் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும்.
கதை சொன்னவர் சுவாரஸ்யத்திற்காக சில விஷயங்களைச் சேர்த்திருப்பார். அவை கதையின் கருவுக்கு தொடர்பு இல்லை என்றால் அவற்றைக் கழித்து விடலாம். உதாரணத்திற்கு ஒரு கதையைப் பார்ப்போம்.
கழுகின் பசி: 'காட்டுல இருந்த ஒரு கழுகு பசியோடு பறந்துட்டு இருந்துச்சு. வெயில் அதிகமாக அதிகமாக கழுகு சோர்ந்து போயிடுச்சு. கழுகைப் பார்த்த வேட்டைக் காரன் ஒருத்தன், அம்பு எய்து கொல்லப் பார்த்தான். சின்னப் பாறை கிட்ட முயல் ஒன்னு இருந்தத பார்த்துச்சு கழுகு. அதைப் பிடிக்கிறதுக்குத் தாழ்வாகப் பறந்துச்சு அது.
அந்தப் பாறை பக்கத்துல இருந்த புதரில்தான் வேட்டைக்காரன் ஒளிஞ்சிருந்தான். கழுகு கீழே வந்து முயலைக் கொத்தப் போகுது… வேட்டைக்காரன் அம்பு விட்டுட்டான். திடீர்னு முயல் ஜம்ப் பண்ணுது. அதுக்காக கழுகு டக்குனு திரும்புது. அந்த இடைவெளியில அம்பு கழுகு மேல படல. அதைப் புரிஞ்சிட்ட கழுகு உயிர் பிழைச்சா போதும்னு வேகமாக உயரமா பறந்துபோயிடுச்சு.’
இந்தக் கதை சொல்லும்போது கழுகு எப்படியெல்லாம் பறந்தது என்று கதைசொல்லி நடித்துக் காட்டுவார். கழுகைப் பார்த்த வேட்டைக்காரன் மகிழ்ச்சியில் சத்தம் போட்டதைச் சொல்லிக் காட்டுவார். அணில் எப்படி ஜம்ப் பண்ணியது என்று குதித்துக் காட்டுவார். அதற்கு என ஒரு சத்தம் கொடுப்பார். இதெல்லாம் கதையின் சுவாரஸ்யத்துக்காக சொல்லப்பட்டவை. அவற்றை நாம் எழுத வேண்டாம்.
சைகையில் சொன்னதை எழுத்தில்: கதை சொல்பவர் தனது கைகளை தலை மீது வைத்துக்கொண்டு ‘கழுகு இவ்வளவு தாழ்வாக பறந்தது’ என்று சொல்வார். அதுநமக்குப் புரிந்துவிடும். ஆனால், எழுதும்போது ‘மண்ணிலிருந்து ஆறடி உயரத்திற்கு கழுகு இறங்கி பறந்தது’ என்று எழுத வேண்டும்.
அடுத்தது, கதை சொல்பவர், ‘அந்த நேரத்தில் அணில் இப்படிச் செய்தது’ என்று குதித்துக் காட்டுவார். நாம் எழுதும்போது, ‘ஆற்றில் மீன்கள் துள்ளுமே… அதுபோல அணில் சட்டென்று துள்ளுவதுபோல ஜம்ப் பண்ணியது’ என்று எழுதலாம். அதாவது சைகையில் சொன்னதையும் நாம் அழகாக எழுத்தில் கொண்டு வர வேண்டும்.
கதை சொல்பவர் வேட்டைக்காரன்போல உடை அணிந்திருந்தால், பார்த்தவுடனே புரிந்துவிடும். ஆனால், நாம் கதையாக எழுதும்போது அவரின் உடையின் விவரம், கையில் வைத்திருக்கும் வில் பற்றி எல்லாம் எழுத வேண்டும். சில நேரம், ‘கழுகு பறந்துகொண்டிருக்கும்போது… என்று தொடங்கி, இந்தக் கதைக்குத் தொடர்பே இல்லாமல் ஏதாவது சொல்லியிருப்பார். அவற்றைக் கவனமாகக் கழித்துவிட வேண்டும்.
சரி, கழுகின் பசியை இன்னும் அழகான கதையாக எப்படி எழுதலாம் என்பதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.
வீட்டு பாடம் கதை: குல்லா வியாபாரி மரத்தின் கீழே தூங்கி ஓய்வெடுக்கிறார். மரத்தில் இருந்த குரங்குகள் குல்லாக்களை எடுத்துக்கொள்கின்றன. கண் விழித்த வியாபாரிக்கு அதிர்ச்சி. அவர் செய்வதையே திரும்பச் செய்கின்றன குரங்குகள். அவர் தன் குல்லாவை கீழே போட குரங்குகளும் அவை வைத்திருந்த குல்லாக்களைக் கீழே போடுகின்றன. இந்தக் கதை சுவாரஸ்யமாக எப்படிச் சொல்வது… அழகாக எப்படி எழுதுவது என்று முயற்சி செய்து பாருங்கள்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com