

அகல், ஹெட்போன்ஸ் அணிந்து Savanna Karmue என்ற யூடியூப் சேனலில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். மகளைத் தேடி வந்த அம்மா, ஹெட்போன்ஸை தன் தலையில் மாட்டினார். சிறுமி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
“என் பெயர் சவன்னா. எல்லாரும் ஆரோக்கியமான இதயத்தோட வாழணும். நம்ம உடம்பு முழுசும் ரத்தம் சுத்துவதுக்கு இதயம்தான் உதவி செய்யுது. உடம்பு ஆரோக்கியமா இருந்து, இதயத்தில நிறைய சோகங்கள் இருந்துச்சுன்னா, நிச்சயமா நம்மால ஆரோக்கியமா வாழ முடியாது.
அதனால, இதயத்த பராமரிப்பது எப்படின்னு, அடுத்தடுத்த காணொலியில சொல்லப் போறேன். மறக்காம, பாருங்க” என்றாள் அந்த சிறுமி. காணொலி பார்த்துக் கொண்டே, “யாருடா இந்த பாப்பா?” என்று அம்மா கேட்டார். அகல் பதில் சொன்னாள்.
கனவின் ஆரம்பம்! - பிப்ரவரி 14-ல், அன்பான இதயம் குறித்து உலகம் பேசுகிறது. அதே நாளில், 2006-ம் ஆண்டு அமெரிக்கா வில் சவன்னா பிறந்தாள். 6 வயதில், ஒருநாள் தனது ஆசிரியையைப் பார்க்க அம்மாவுடன் மருத்துவமனைக்குச் சென்றாள். ஆசிரியைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் இருந்த கருவி கள், அது செயல்படும் விதம், மருத்துவர்களின் பணி அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்தாள். மருத்து வர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டாள். வளர்ந்ததும் இதய சிகிச்சை நிபுணராக வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.
வீட்டுக்கு வந்ததும் இணையத்தில் தேடினாள். அமெரிக்காவில் மூன்றில் ஒரு குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை வாசித்தாள். தினமும் ஏறக்குறைய 2000 பேர் இதய நோயினால் இறப்பதை அறிந்தாள். குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதும், இதய நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்பதைக் கண்டாள். குழந்தைகள் உடல் பருமனைக் குறைக்கவும், இதய நலனுடன் வாழவும் என்ன செய்யலாம் என யோசித்தாள்.
2017-ல் அமெரிக்காவில் 2 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உடல் பருமனுடன் இருந்தனர். இதை, 2031-க்குள் பாதியாக குறைக்க வேண்டும். இதன் வழியாக, இதய நோய் பாதிப்பையும் குறைக்க வேண்டும் என்று தனக்கு தானே இலக்கு நிர்ணயித்தாள். பெற்றோரின் உதவியுடன், Happy Heart Advice எனும் காணொலி நிகழ்ச்சியைத் தொடங்கினாள். அப்போது, அவளுக்கு வயது 8.
மகிழ்ச்சியான இதயம்: உடல் பருமனுக்குக் காரணமான மற்றும் உடல் நலனுக்குத் தேவையான உணவுகள், இதயத்தின் செயல்பாடுகள், உடற்பயிற்சிகள் குறித்து குழந்தை மொழியில் பேசத் தொடங்கினாள். இதயத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விவரித்தாள். 11 வயதில், நண்பர்களுடன் சேர்ந்து ‘மகிழ்ச்சியான இதயம்’ (Happy Heart Program) என்றொரு நிகழ்ச்சியைத் தொடங்கினாள்.
அதில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப் பாகவும் வாழ வேண்டியதன் அவசியத்தையும், சத்தான உணவின் முக்கியத்தவத்தையும் சிறுவர்களே சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர். கரோனா ஊரடங்கின்போது, மெய்நிகர் வழியாகவும் நடத்தினார்கள்.
சவன்னா, தான் சேகரித்த தகவல்களை ஒருங்கிணைத்து, Happy Heart Advices எனும் புத்தகம் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படி பாடத்திட்டம் தயாரித்துள்ளார். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இவரது புத்தகம் சென்று சேர்ந் திருக்கிறது. குழந்தைகள் மனநலத்துடனும் நல்ல பழக்க வழக்கங்களுடனும் வாழ, ‘சவன்னாவுடன் மனநல திங்கள்’ (Mental Mondays with Savanna) எனும் பாட்காஸ்ட் (podcast) தொடங்கியுள்ளார்.
குழந்தைகளின் உடல் பருமன் தொடர்பாக அமெரிக்காவில் நடந்த தேசிய கருத்தரங்கில் முதன்மை பேச்சாளராக சவன்னாவை அழைத்தார்கள். மிகச் சிறிய வயதில், சவன்னா செய்யும் பெரும்பணி குறித்து, அமெரிக்காவின் இதய நலன் தொடர்பான அமைப்பு பாராட்டியுள்ளது. மேலும், கலிபோர்னியாவில், மாலை நேர பள்ளிகள் வழியாக, எண்ணற்ற குழந்தைகளிடம் இவரது புத்தகத்தைக் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்; தொடர்பு: sumajeyaseelan@gmail.com