

ஆசிரியரும் மாணவரும் இணைந்து செயலாற்றும் இடம் வகுப்பறை. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் வெளியேறிவிடுவர். வகுப்பறையும், ஆசிரியரும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் மாணவர்களுக்கு, கிடைத்த அனுபவங்களை வைத்து மாற்றங்களுக்கான முன்னெடுப்பை யோசித்துக் கொண்டிருப்பர்.
வகுப்பறையில் சந்தோசங்களின் சாரலை உருவாக்க புதுப்புது முயற்சிகள் செய்து பார்த்தபோது கண்ட, கண்ணீரும் புன்னகையும் இழையும் உயிர்ப்புள்ள உறவுகள் பூத்து நின்ற தருணங்கள் இப்புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. வகுப்பறையின் நிகழ்வுகளை நாள்தோறும் நினைத்துப் பார்த்து, மாணவர்களின் செயல்களை ஆசிரியரின் எண்ணத்தை அப்படியே பதிவு செய்திருக்கும் நாட் குறிப்புதான் ’கலகலவகுப்பறை’ புத்தகம்.
உறவாடுதல்: வகுப்பறையில் பாடப்புத்தகத்துடன் மட்டுமே பேசாமல், மாணவர்களுடன் நிறைய பேசுகிறார் ஆசிரியர் சிவா. அப்பாவை இழந்த மாணவன் அவ்வப்போது சிவா ஆசிரியரின் சட்டையை பிடித்து இழுத்து பேசுவதை மற்ற ஆசிரியர்கள் பார்த்தால், வினாக்குறியாக புருவங்களை உயர்த்தினாலும், ஆசிரியர் சிவா கனிவுடன் நண்பனாக பழகுகிறார் மாணவனுடன். குழந்தைகள் சார், 'சாப்பிடுங்க' என்று மதிய உணவுவேளையில் ஆசிரியர் வரும்வரை காத்திருந்து உணவை பகிர்ந்து கொள்கின்றனர்.
வாசிப்பு ஆர்வம் கூட்டுதல்: பள்ளியை விட்டு படித்து முடித்து சென்றுவிட்ட மாணவர்களுடன் தற்போதும் தொடர்பில் இருக்கிறார். அதில் திருநங்கையாய் தன்னை உணர்ந்து அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட மாணவனுடனான ஆசிரியரின் சந்திப்பு மாணவ ஆசிரியர் உறவு, வகுப்பறையுடன் முடிந்துவிடக் கூடாதது என்பதை ஆழமாய் புரியவைக்கிறது.
என்சிசி-ல் மாணவர்களுக்கு பயிற்சிஅளிப்பது, கதைப்பெட்டியை பள்ளி முழுவதும் உலாவரச் செய்து மாணவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் கூட்டுவது, ஆண் வேலை - பெண் வேலை கலந்துரையாடல் மூலம் ஆண்-பெண் வேறுபாடு என்ன?எந்த பாடப்பகுதியையும் கலந்துரையாடல் மூலம் ஆழமாய் புரியவைப்பது என ஆசிரியர் சிவாவின் வகுப்பறை செயல்பாடுகள் சாதாரண வகுப்பறையிலிருந்து மாற்று உருவம் பெற்றிருக்கின்றன.
சமத்துவ சிந்தனை: ஆசிரியர் தினம் கொண்டாட வகுப்புத்தலைவன் நிதி கேட்கும்போது மாணவர்களில் ஒருவன், ஆசிரியர்கள் நமக்காககுழந்தைகள் தினம் கொண்டாடுகிறார்களா என்ன? நான் ஏன் நிதி தர வேண்டும் என்று கேட்ட செய்தி ஆசிரியரின் கருத்துக்கு வந்தபோது, கேள்வி கேட்டமாணவனின் தைரியத்தை, நியாயத்தை மனதார பாராட்டுவதோடு, சக ஆசிரியர்களுடன் இணைந்து அந்த வருட குழந்தைகள் தினத்தை பெரிய கொண்டாட் டமாகக் கொண்டாடி, கேள்வி கேட்ட மாணவனின் சமத்துவத்தை சரி என்கிறார்.
குழந்தைகள் தினத்தில் ஆசிரியர்கள் இணைந்து நடிக்கும் நாடகத்தில் நரியாக நடிக்கிறார் ஆசிரியர் சிவா. ஒரு குழந்தையின் மனதில் ஆசிரியர் நரியாகவே பதிந்துபோனதால், குழந்தை ஏய் நரீ...என்று அழைப்பதும், ஆசிரியர் சிரிப்பதும் சாதாரணமாகிப்போனது.
ஆசிரிய கலந்துரையாடல்: பள்ளியில், வகுப்பறையில் சக ஆசிரியசெயல்பாடுகளாலோ, மாணவர்களின் பிடிவாதத்தாலோ மனம் தடுமாறிடும்போதெல்லாம், மீண்டும் வகுப்பில் உத்வேகத்துடன் செயலாற்ற ’ரான் கிளார்க் ஸ்டோரி’ (The Ron Clark Story) எனும் ஆசிரியர் திரைப்படமே தனக்கு நிவாரணி என்கிறார் ஆசிரியர் சிவா. நூற்றுக்கணக்கான ஆசிரியத் திரைப்படங்களைப் பட்டியலிடும் ஆசிரியர், இத்திரைப்படங்கள் வகுப்பறை கையாளலுக்கு ஆசிரியர்களுக்கு யோச னைகளை அள்ளித் தரும் அமுதசுரபி என்கிறார்.
திரைப்படத்தை கற்பித்தலுக்கு பயன்படுத்தும் உத்தியை சிறப்பாகச் செய்கிறார் வகுப்பறைக்குள். மாணவர்கள் உச்சரிப்பு சரியாக இல்லையே என்று கவலைப்பட்டு, புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனம், பட்டுக்கோட்டையாரின் பாடல்களைப் பாடுவது என செயல்பாட்டை வடிவமைப்பது, பாடங்களை நாடகம் மற்றும் கலந்துரையாடல் முறையில் வடிவமைப்பது, தவறு செய்யும் மாணவர்களை எந்தக் காரணம் கொண்டும் அடிக்கக்கூடாது, அவர்களிடம் அவர்களுக்கு எது சரியென புரியும்வரை பேச வேண்டும், குழந்தைகளோடு அதிகமாக உரையாடு வதும், உறவாடுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தானே அவர்களுக்குதானே ஊதியமும் அதிகமாக இருக்க வேண்டும் என தன் மனதின் எண்ணங்களை எல்லாம் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.
கோமாளிகளாய் ஆசிரியர்கள்: வகுப்பறை ஒரு பயிற்சிக்கூடம். சமுதாயத்தில் சென்று வாழ தகுதிப் படுத்திக்கொள்ளும் இடம் வகுப்பறை. மாணவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி, உயர்ந்த செயல்களைப் பாராட்டி அவர்களை சமுதாயத்துக்கு தகுந்த வர்களாக மாற்றுவதே ஆசிரியர்களின் தலையாய பணி.
ஆனால், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் செயல்பாடுகள் பற்றி அந்த வகுப்பின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து பேசுகிறோமா? பிறகு எப்படிமாற்றம் கிடைக்கும்? என்ற சிவாஆசிரியரின் ஆற்றாமையே கலகலவகுப் பறை அமைப்பாக உருப்பெற்று, ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் குழுவாக, மாற்றம் விரும்பும் ஆசிரியர்களுக்கான ஊக்கியாக விளங்குகிறது.
ஆசிரியர் தன் பணியில் சிறந்து விளங்க உதவும் குறிப்பு பெட்டகமாக இப்புத்தகம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் உதவும்.
- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்; தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com