வாழ்ந்து பார்! - 28: யாழினியும் தமிழினியும் என்ன செய்தனர்?

வாழ்ந்து பார்! - 28: யாழினியும் தமிழினியும் என்ன செய்தனர்?
Updated on
2 min read

ஓர் அறையில் யாழினி, தமிழினி, குயிலன் ஆகிய மூவரும் அமர்ந்திருந்தனர். யாழினியிடம் ஹார்மோனியம் இருந்தது. குயிலனின் கையில் குறிப்பேடும், பேனாவும் இருந்தன. தமிழினி ஒரு காட்சியைக் கூறினாள். அதனைக் கூர்ந்து கேட்ட சில நொடிகளுக்குப் பின்னர், யாழினி தனது ஹார்மோனியத்தில் ஓர் இசைக்கோவையை உருவாக்கினாள்.

குயிலன் அதனைக் கேட்டுக் கொண்டே தமிழினி கூறிய காட்சியை தனது மனக்கண்ணில் கற்பனை செய்தார். சில நிமிடங்கள் சிந்தித்தார். பின்னர், ஒரு பாடலை எழுதினார். யாழினி மீண்டும் தனது இசைக்கோவையை இசைத்தாள். அதனோடு சேர்ந்து மூவரும் குயிலனின் பாடலைப் பாடினர். இசைக்கோவையும் பாடலிலுள்ள சில சொற்களும் பொருந்தாமல் இருப்பதாய் யாழினிக்குத் தோன்றியது. அச்சொற்களைச் சுட்டிக்காட்டினாள்.

தமிழினி அப்பாடலில் தனது கொள்கைக்குப் பொருந்தாத வரி ஒன்று இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். தமிழினி கூறிய வரியையும் யாழினி கூறிய சொற்களையும் குயிலன் மாற்றினார். யாழினி மீண்டும் இசைத்தாள். திருத்தப்பட்ட பாடலை மூவரும் சேர்ந்து பாடினர். தமிழினி கூறிய காட்சியோடு இசையும் சொல்லும் இயைந்தன. பாடல் உருவானது. அருமை என்றனர் மூவரும் என்று ஒரு சூழலைக் கூறினார் ஆசிரியர் எழில். இந்த நிகழ்வில் குயிலனின் பாட்டை தமிழினியும் யாழினியும் என்ன செய்தனர்? என்று அடுத்ததாக வினவினார்.

இனிய பாடல் பிறந்தது: யாழினி அந்த பாட்டு தனது இசைக்கோவைக்குப் பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்தாள் என்று அருட்செல்வி விளக்கினாள். தமிழினி தனது கொள்கைக்கு உட்பட்டதாக அப்பாடல் இருக்கிறதா என ஆராய்ந்தார் என்றாள் கண்மணி. அருமை. இசைக்கோவை, கொள்கை என்னும் அளவுகோல்களைக் கொண்டு குயிலனின் பாடலை யாழினியும் தமிழினியும் மதிப்பிட்டனர். இவ்வாறு ஒன்றை ஓர் அளவுகோலைக் கொண்டு எடைபோடுவதை ‘மதிப்பிடுதல்’ (Evaluating) என்பர். ஆய்வுச் சிந்தனையில் இதுவும் ஒரு கூறு என்று விளக்கினார் எழில்.

பாடல் உருவான அடுத்த நாள், அதனைப் பதிவுசெய்வதற்கான ஒத்திகை நடந்தது. 10 பேர் ஆளுக்கொரு இசைக்கருவியோடு இருந்தனர். யாழினி அவர்களுக்கு முன்னால் நின்றிருந்தாள். அருகில் இருந்த கண்ணாடி அறைக்குள் இரு பாடகர்கள் இருந்தனர். அனைவரும் ஆயத்தமானதும் யாழினி தனது கைகளை இடமும் வலமும், மேலும் கீழூம் அசைத்து, இசைக்கருவிகளை இசைப்பதற்கான குறிப்புகளை வழங்கினாள். இசைக் கலைஞர்கள் இசைத்தனர். தபேலா, கிட்டார் ஆகியவற்றின் ஓசை அதிகமாக இருந்தது. அதை குறைக்கும்படி கூறி, மீண்டும் கைகளை அசைத்தாள் யாழினி.

இப்பொழுது பாடகர் இருவரும் குறைந்த ஸ்ருதியில் பாடினர். ஸ்ருதியைக் கூட்டும்படி அவர்களிடம் கூறினாள். இவ்வாறு நான்கிற்கும் மேற்பட்ட முறை இசைக்கவும் பாடவும்செய்து சில இசைக்கருவிகளின் ஒலியளவை சில இடங்களில் கூட்டவும் சில இடங்களில் குறைக்கவும் செய்தாள். இறுதியில் அனைத்து ஒலிகளும் பொருத்தமாய் இயைந்து இனிய பாடல் பிறந்தது என்று விவரித்தார் எழில் இந்த நிகழ்வில் யாழினி என்ன செய்தாள்? என்று தற்போது வினவினார்.

இதற்கு என்ன பெயர்? - வகுப்பில் சிறிதுநேரம் அமைதி நிலவியது.பின்னர், யாழினி என்ன செய்தாள் எனத் தெரிகிறது, ஆனால் அச்செயலுக்கு என்ன பெயர் எனத் தெரியவில்லை என்றான் அருளினியன். என்ன செய்தார் என்பதைக் கூறு; அதற்காக பெயரை பின்னர் காணலாம் என்று ஊக்கப்படுத்தினார் எழில்.வேறுபாடுகளையும் ஒத்திருப்பனவற்றையும் உற்று நோக்கி அவற்றைப் பொருத்தமாக இணைத்தாள் என்றான் அருளினியன்.

முழுமையான ஒன்றின் வெவ்வேறு கூறுகளை ஆராய்ந்து புதிதாகவும் வெவ்வேறு வழிகளிலும் ஒத்திசையச் செய்தார் என்றாள் நன்மொழி. அருமை. ‘தொகுத்தாராய்தல்’ (Synthesis) என்னும் ஆக்கச் சிந்தனையின் மற்றொரு கூறுக்கான வரைவிலக்கணத்தைக் கூறிவிட்டீர்கள் என்று அவர்கள் இருவரையும் பாராட்டினார் எழில்.

(தொடரும்)

- கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in