

பிளஸ் 2 முடித்து பொறியியல் கல்லூரி செல்பவர்களில், பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு குறித்து முன்னதாக ஒரு கட்டுரையில் பார்த்தோம். அதற்கடுத்த நிலையில் இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் இஞ்சினியரிங் (Electronics and Communication Engineering -ECE) பாடப்பிரிவு குறித்தும் அறிந்து கொள்வோம்.
சில ஆண்டுகள் முன்புவரை முதலிடத்தில் இசிஇ பாடமே இருந்து வந்தது. ஐடி துறையின் எழுச்சி காரணமாக தற்போது சற்று பின் தள்ளி இரண்டாமிடம் வகிக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் போலன்றி, சுமார் 30 ஆண்டு காலமாக இசிஇ படிப்புக்கான தேவை நீடித்து வருகிறது. ஐடி துறையிலும் கம்ப்யூட்டர் பிரிவுகளுக்கு இணையாக, இசிஇ முடித்தவர்களும் அதிகம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு அப்பாற்பட்ட பரந்த வேலைவாய்ப்புகளும் இசிஇ முடித்தவர்களுக்கு காத்திருக்கின்றன. எனவே பொறியியல் உயர்கல்வியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக இசிஇ படிப்பை தேர்வு செய்யலாம்.
இசிஇ படிப்புக்கான எதிர்காலம்: அன்றாட வாழ்க்கையிலும், வீட்டு உபயோகப் பொருட்களில் தொடங்கி ஸ்மார்ட் உபகரணங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதிலும் 5 ஜி, 6 ஜி என அடுத்தடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு சேவைகள், அவற்றையொட்டிய இணையம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் பெருக்கம் ஆகியவை இசிஇ படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதையே காட்டுகிறது. இவை தொடர்பாக இயல்பிலேயே ஆர்வம் உள்ளவர்களும், கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த எதிர்காலத்தை தீர்மானிக்க விரும்பும் மாணவ மாணவியரும் தாராளமாக இசிஇ பாடத்தை தேர்ந்தெடுக்கலாம்.
கைகொடுக்கும் இசிஇ: பிளஸ் 2 முடித்ததும், அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வில் பங்கேற்று விரும்பிய கல்லூரிகளில் இசிஇ படிப்பை தேர்வு செய்யலாம். முன்னணி கல்லூரிகளில் போட்டி அதிகம் என்பதால், சற்று அதிகம் மதிப்பெண் பெறுவதன் மூலமே அந்த இடங்களை குறிவைக்க முடியும்.
முன்னணி கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவுகளை எதிர்பார்த்து, அவை கிட்டாதவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வு பரிசீலனையில் இசிஇ படிப்பைத் தேர்வு செய்யலாம். பின்னர் விருப்ப பாடங்கள் தொடங்கி முதுநிலை படிப்பு வரை தாங்கள் எதிர்பார்த்த கம்ப்யூட்டர் துறையை தீர்மானித்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர் போன்றே எலெக்ட்ரானிக்ஸ் உடன் பிணைந்திருக்கும் இதர துறைகளையும் இவ்வாறே தேர்வு செய்யலாம்.
ஹார்ட்வேர் படிப்பில் கவனம்: உயர்கல்வியாக கிடைக்கும் பாடங்கள் மட்டுமன்றி, அப்போதைக்கு அவசியமான கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் படிப்புகளை தனியாக படிப்பதும் நம்மை தனித்துக்காட்ட உதவும். இசிஇ மாணவர்கள் அடிப்படையான கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்புகளுடன், ஹார்ட்வேர் துறையில் நிபுணத்துவம் பெறுவது வேலை வாய்ப்புக்கு அதிகம் உதவும்.
ஆனால் கம்ப்யூட்டர் பிரிவுக்கான புரோகிராமிங் மற்றும் கோடிங் பாடங்கள் போல, இசிஇ பிரிவு பாடங்களில் சர்க்யூட் பாடங்கள் புரிந்து கொள்ள சற்று கனமாக இருக்கும். ஆர்வமும் விடாமுயற்சியும் கொண்டிருந்தால் அந்த பாடங்களிலும் எளிதில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
இப்போதிருந்தே தயாராவோம்: பள்ளியில் படிக்கும் காலம்தொட்டே செய்திகள் மற்றும் கட்டுரைகளில் இடம்பெறும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சார்ந்தவற்றை அறிந்துகொள்வதும், அவை தொடர்பாக இணையத்திலும், யூட்யூப் வீடியோக்களிலும் எளிமையானவற்றை தெரிந்துகொள்வதும், பின்னாளைய உயர்கல்விக்கு ஆயத்தமாக உதவும்.
இப்படி தேடும்போது எழும் கேள்விகளை எல்லாம் குறித்து வைத்துக்கொள்வதும், பின்னர் அவற்றுக்கு விடை காண முற்படுவதும், எந்த துறையானாலும் படிப்பிலும், பணிவாய்ப்பிலும் ஜொலிக்க உதவும்.
- கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com