உலகம் - நாளை - நாம் - 13: அழகிய டீஸ்டா நதி பாயும் நிலம்

உலகம் - நாளை - நாம் - 13: அழகிய டீஸ்டா நதி பாயும் நிலம்
Updated on
2 min read

மொழி, கலை, பண்பாடு, சிந்தனை, செயல்பாடுகளில் தமிழ்நாட்டுக்கு இணையான பெருமை கொண்டவை இரண்டு மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா? மகாராஷ்டிரம், மேற்கு வங்கம்.

சென்னையில் இருந்து 1600 கி.மீ. தொலைவில் உள்ள கொல்கத்தாவைத் தலைமையாகக் கொண்டது மேற்கு வங்கம். மிகப் பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்களைத் தந்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தர், ரவிந்தீரநாத் தாகூர் இப்படி இன்னும் நிறைய பேரு இங்கே இருந்து வந்தவங்கதான். இந்த மாநிலத்தை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம் வாங்க.

மற்றொரு பழம்பெரும் மாநிலம்: தமிழ்நாட்டை போலவே வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது மேற்கு வங்கம். என்ன பொருள்? இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. வடக்கே நேபாளம், பூடான். (வட) கிழக்கே வங்கதேசம் என்று மூன்று நாடுகள். அசாம், சிக்கிம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா என்று ஐந்து மாநிலங்கள் இதனை சுற்றி உள்ளன. தற்போது 10 கோடி மக்கள் வசிக்கும் இந்த மாநிலம், காலத்தால் மிகப் பழமையானது. இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கிடைத்தன என்றால் பாருங்களேன்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்கர்கள் வங்கம் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்பு வங்க மன்னன் போரிட்டு வென்ற பகுதியே ஸ்ரீலங்கா; அப்போதே அயல் நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலான மக்கள் பேசும் மொழி வங்காள மொழி (பெங்காலி).

இத்துடன், ஒடியா, சந்தாலி, பஞ்சாபி, உருது, நேபாளி மற்றும் ஆதி மொழிகளான கம்தாபுரி, ராஜ்பன்சி, குர்மாலி, குருக் உள்ளிட்ட மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. இதில் இருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? மேற்கு வங்கத்தில், பூர்வகுடிகள் உட்பட, பல மொழிகள் பேசும் பல இன மக்கள் வாழ்கிறார்கள்.

மிகப் பிரபலமான டார்ஜிலிங், சண்டக்பு சிகரம் உள்ளிட்டவை இந்த மாநிலத்தில், கிழக்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளன. உயர்ந்த மலைகளுக்கும் சமவெளிகளுக்கும் இடையே டெராய் மண்டலம் உள்ளது. இதற்குத் தெற்கே, மாங்க்ரோவ் காடுகள் கொண்ட கங்கா டெல்டா உள்ளது. நம்முடைய காவிரி டெல்டா போலவே கங்கா டெல்டா, மாநிலத்துக்கு வளம் சேர்க்கின்றது.

தாமோதர் பள்ளத்தாக்கின் மடி: பத்மா என்கிற பெயரில் கங்கை நதி வங்கதேச நாட்டுக்குள் பாய்கிறது. மற்றொரு கிளை, பகீரதி மற்றும் ஹூக்ளி என்கிற பெயர்களுடன் மேற்கு வங்கத்தில் பயணிக்கிறது. மாநிலத்தின் வடக்கு மலைப் பகுதியில் டீஸ்டா, டோர்ஸா, ஜல்தாகா, மகாநந்தா ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் டீஸ்டா நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக இந்தியா – வங்கதேசம் இடையே சுமுகமற்ற சூழல் நிலவுகிறது. பிரச்சினையைத் தீர்க்க, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேற்குப் பீடபூமிப் பகுதியில் உள்ளது தாமோதர் ஆறு. நமக்கு நன்கு பரிச்சயமான தாமோதர் பள்ளத்தாக்கு இங்குதான் உள்ளது. மேற்கு வங்கத்தின் தட்ப வெப்ப நிலை ஏறத்தாழ நம்மைப் போன்றதேதான். டார்ஜிலிங், கூச் பிகார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பொழிவு மிக அதிகம். இதேபோன்று, சில இடங்களில் கோடைக்கால வெப்பமும் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு, நம்மை விட சற்றே அதிகம்.

வனப்பகுதி 16000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு, ராயல் டைகர் உட்பட பல அரிய வகை விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மிகுந்து உள்ளன.

இந்த வாரக் கேள்வி: ‘ராயல் டைகர்’ – குறிப்பு வரைக.

(வளரும்)

கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in