டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 29: வீட்டில் சுவிட்சை ஆன் செய்ய தெரியும்தானே!
இன்று எலக்ட்ரானிக்ஸ் மிகவும் எளிதாகி விட்டது. அது தெரியாமல் மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் என்றாலே கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் உள்ள மின்விளக்கு ஸ்விட்ச்சை ஆன் அல்லது ஆஃப் செய்ய தெரிந்திருந்தாலே உங்களால் இன்றைய எலக்ட்ரானிக்ஸை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். இப்போது இதனை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
இப்போது நீங்கள் ஆபரேட்டரிடம் ஸ்விட்ச்சை ஆன் செய்ய சொன்னால் அவர் ஸ்விட்ச்சை ஆன் செய்வார். மின்விளக்கு ஒளிரும். இங்கு ஒரு சிக்கல்தான் உள்ளது. உங்களால் நேரடியாக ஸ்விட்ச்சை கட்டுப்படுத்த இயலாது. அதுவே உங்களால் ஒரு மின்விளக்கு ஒளிர்கிறதா? இல்லையா? என்று பார்க்க முடிந்தால் விஷயம் சுலபம்.
மேலே உள்ள படத்தில் இரண்டு ஸ்விட்சுகளும் இரண்டு மின்விளக்குகளும் உள்ளன. “A” ஸ்விட்சு “B” மின்விளக்கையும், “S” ஸ்விட்சு “Y” மின்விளக்கையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் “S” ஸ்விட்சைக் கொண்டு “Y” மின்விளக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இது புரிந்தால் நவீன எலக்ட்ரானிக்ஸை கற்பது எளிதாகிறது. நீங்கள் ஆபரேட்டரிடம் கீழ்க்கண்டவாறு கூறினால், உங்களால் “A” ஸ்விட்சைக் கொண்டு “Y” மின்விளக்கை கட்டுப்படுத்த இயலும்.
ஆபரேட்டரிடம் கொடுக்க வேண்டிய கட்டளை:
மின்விளக்கு “B” ஒளிர்ந்தால் ஸ்விட்சு “S”-ஐ ஆன் செய்யவும்.
மின்விளக்கு “B” ஒளிரவில்லை எனில் ஸ்விட்சு “S”-ஐ ஆப் செய்யவும்.
இப்பொழுது அதே படத்தை வேறுமாதிரி வரையலாம். இப்பொழுது நாம் மின்சப்ளை, ஸ்விட்சு “A”, மின்விளக்கு “Y” ஆகியவற்றை படத்திலிருந்து எடுத்துவிட்டால் படம் கீழ்கண்டவாறு இருக்கும்.
மேலே உள்ள படத்தில் “A”, பின்னில் 5V கொடுத்தால் மின்விளக்கு “B” ஒளிரும். ஆகவே ஆபரேட்டர் நமது கட்டளைப்படி ஸ்விட்சு “S”-ஐ ஆன் செய்வார். அதன் காரணமாக “Y” பின்னில் 5V கிடைக்கும். அதேபோல் “A”, பின்னில் 0V கொடுத்தால், மின்விளக்கு “B” ஒளிராது. ஆகவே ஆபரேட்டர் நமது கட்டளைப்படி ஸ்விட்சு “S”-ஐ ஆப் செய்வார், அதன் காரணமாக “Y“ பின்னில் 0V கிடைக்கும்.
இப்பொழுது “A” உள்ளீடு பின்னில் தரும் எலக்ட்ரிக்கல் சிக்னல் 0V அல்லது 5V, “Y” வெளியீடு பின்னை கட்டுப்படுத்துகிறது. இது மிகவும் எளிமையானது.
“A” பின்னில் 5V இருந்தால் “Y” பின்னில் 5V தரவும்.
“A” பின்னில் 0V இருந்தால் “Y” பின்னில் 0V தரவும்.
இங்கு நாம் 0V மற்றும் 5V மட்டும் தருவதால் இதனை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் என்று அழைக்கிறோம். இதுதான் இன்றைய டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸின் அடிப்படை. இதை நன்றாக புரிந்து கொண்டால், இந்த டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் செய்யப் போகும் மாய மந்திரங்களை பற்றி வரும் தொடர்களில் படிக்கும்போது எளிதாக புரியும்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.
