நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 28: சரியான படிப்பினால் முதல் முயற்சியில் ஐஎஸ்எஸ் அதிகாரி ஆனவர்

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 28: சரியான படிப்பினால் முதல் முயற்சியில் ஐஎஸ்எஸ் அதிகாரி ஆனவர்
Updated on
3 min read

தனது தாய்மொழியான மலையாளத்தில் 10-ம் வகுப்புவரை பயின்று, மத்திய அரசின் குடிமைப்பணியான ஐஎஸ்எஸ் எனும் இந்திய புள்ளியியல் பணியை 2011-ல் பெற்றுள்ளார் ரெம்யா.பி. நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதிப் பிரிவில் இணை இயக்குநரான இவர், தன் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

குடும்பத்தின் தலைமகளான ரெம்யாவின் தந்தை ரமேஷ் பாபு கேரள பல்கலைக்கழகத்தில் அலுவலக அதிகாரியாகவும், தாய் கீதா குமாரி அரசு மருத்துவ ஆய்வாளராகவும் பணியாற்றிவர்கள். கோழிக்கோடை சேர்ந்த ரெம்யாவிற்கு இரண்டு தங்கைகள் உள்ளனர்.

மலையாளவழிக் கல்வியில் கோழிக்கோடின் லிட்டில் பிளவர் நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை பயின்றார் ரெம்யா. பின்னர் 8 முதல் 10 வகுப்பை, ஜி.வி.எச்.எஸ். பள்ளியில் முடித்தார். பிளஸ் 2-வை கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் பரூக் காலேஜின் பரூக் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார்.

பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை: பி.எஸ்சி., புள்ளியியல் பட்டப்படிப்பை பரூக் கல்லூரியிலேயே 2007-ல் பெற்றார். இதே பாடப்பிரிவில் முதுநிலையை 2009-ல் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கல்லூரியில் முடித்தார். பிறகு ஆய்வுத்துறையில் பணியாற்ற வேண்டி சிஎஸ்ஐஆர் (தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்) நடத்திய நெட் தேர்வை எழுத விரும்பினார்.

இதனிடையில் திருவனந்தபுரத்தின் கேரளா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் முடித்தார். இதன் பிறகே மத்திய அரசின் குடிமைப்பணி பற்றி கேள்விப்பட்டார். தான் படித்த புள்ளியியல் பாடத்திலேயே எழுதி, புள்ளியியல் அதிகாரியாகலாம் என அவருக்கு தெரிந்துள்ளது. இதை முதன்முறையாக முயன்றவருக்கு 2010 -ல் வெற்றி கிடைத்துள்ளது.

இது குறித்த நினைவுகளை ஐஎஸ்எஸ் அதிகாரியான ரெம்யா தெரிவிக்கையில், “எனது பள்ளிக் காலத்தில் பலரும் தாய்மொழிக் கல்வியில் 10-ம்வகுப்புவரை பயில்வது வழக்கமாக இருந்தது. பிறகு ஆங்கிலத்தில் தொடரும் கல்வியில் தொடக்கத்தில் ஏற்படும் சிரமம் ஏற்பட்டது. காலப்போக்கில் அதை சமாளிப்பது எனக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

பள்ளி வகுப்புகளில் தொடர்ந்து முதல் மாணவியாக நான் இருந்தது முக்கிய காரணம். இதுபோல், அடிப்படைக் கல்வியில் செலுத்திய உழைப்பால் எனக்கு ஐஎஸ்எஸ் பெறுவது எளிதானது” எனத் தெரிவித்தார்.

குடிமைப்பணி தேர்வில் ஐஎஸ்எஸ் மற்றும் இந்திய பொருளாதாரப் பணி எனும் ஐஇஎஸ் பெற அதே பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். இரண்டு பணிகளுக்கும் குறைந்தபட்சக் கல்வி தகுதி முதுநிலை என்றிருந்தது. தற்போது, ஐஎஸ்எஸ் பணிக்கான தேர்விற்கு இளநிலையே போதுமானது என மாற்றப்பட்டுவிட்டது. குடிமைப்பணிக்காக ரெம்யா எந்த விதமானப் பயிற்சிக்கும் செல்லவில்லை. அதற்கு முன்பு தான் முயன்ற சிஎஸ்ஐஆர் நெட் தேர்விற்கு மட்டும் தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

பெண்களுக்கு பொருத்தமான வேலை: இவ்வாறு ஐஎஸ்எஸ் அதிகாரியான ரெம்யா கூறும்போது, “நெட் தேர்விற்கான பயிற்சியின்போதுதான் எனக்கு யூபிஎஸ்சி அறிமுகமானது. இப்பணியில் இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

ஆகையால், நெட் தேர்வை எழுதி கேரளாவிலேயே பணியாற்ற விரும்பினேன். இதனிடையே, கேரளாவின் வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக 8 மாத காலம் பணியாற்றினேன். அப்போது, ஐஎஸ்எஸ் தேர்வை அதிகம் விரும்பியதால் அதை எழுதினேன். இது, பெண்களுக்கு மிகவும் பொருத்தமான பணி என்பதால் அதை மிகவும் விரும்பி பணியாற்றுகிறேன்.’ எனத் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 22 வகைப் பணிகளுக்கான யூபிஎஸ்சியில் உள்ளது போல் மூன்று வகை தேர்வு இதில் இல்லை. மெயின்ஸ் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டு மட்டுமே ஐஎஸ்எஸ் மற்றும் ஐஇஎஸ் எனும் இந்திய பொருளாதாரப் பணியில் உண்டு. அதிகாரி ரெம்யாவிற்கு, தன் சக பேட்ச்சான ஐஇஎஸ் அதிகாரியான ஜி.அருண் என்பவருடன் ஜுன் 2014 -ல் மணமானது. இவர்களுக்கு விதார்த், ரேவந்த் ஆகிய இருமகன்கள் உள்ளனர்.

ரெம்யாவிற்கு டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவின் தேசிய புள்ளியியல் அகாடமியில் ஒன்றரை வருடம் பயிற்சி அளிக்கப்பட்டது. மீதம் உள்ள ஆறு மாத காலப் பயிற்சி திருநெல்வேலியின் மத்திய புள்ளியியல் அமைச்சக அலுவலகக் கிளை அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

இப்பதவி வகிப்பவர்கள் வேளாண்மை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டும். பயிற்சிக்கு பின் திருநெல்வேலி அலுவலகத்தில் முதல் பணியாக உதவி இயக்குநரானார். இதே பதவியில்சண்டிகரின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் பணியாற்றினார்.

பிறகு மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் கிளைகளான ஜம்முமற்றும் சென்னையில் துணை இயக்குநராகப் பணி செய்துள்ளார். இவர்போல், புள்ளியியல் அதிகாரிகள் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் குறிப்பிட்ட அளவில் பணியாற்றுகின்றனர். தற்போது, நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதிக்கான பிரிவில் இணை இயக்குநராக உள்ளார்.

ரெம்யாவை போன்ற அதிகாரிகள் தலைமையில் திரட்டப்படும் புள்ளிவிவரங்களை கணக்கிட்ட பிறகே மத்திய அரசு, நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அளவுகள் மற்றும் ஜி.டி.பி உள்ளிட்ட பலவற்றையும் நிர்ணயிக்கிறது. இதனால், அதிகாரி ரெம்யாவின் பணி அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

- கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in