

ஆண்டுதோறும் பிப்ரவரி 13, உலக வானொலி தினமாகக் கொண்டாடப்படுகிறது. வானொலியின் முக்கியத்துவம் அறிந்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் இந்த நாளை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தலைப்பு ‘வானொலி மற்றும் அமைதி’ (Radio and Peace). 12 ஆண்டுகளாக இந்த தினம் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அளவில் அமைதிக்கு வானொலி ஆற்றும் பங்கு முக்கியமானது. குறிப்பாக போர் நடந்துவரும் நாடுகளில், மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பது வானொலி மட்டுமே. வானொலியின் முக்கியத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டின் கருப்பொருளாக யுனெஸ்கோ, அமைதிக்கு வானொலி அளித்துவரும் பங்களிப்பை பட்டியலிடுகிறது.
அமைதி புறாவாக... ஈழப் போரின்போதும் சரி, மத்திய கிழக்கு நாடுகளின் போரின்போதும் சரி, இப்பொழுது உக்ரைனில் நடந்து வரும் போரின்போதும் சரி, வானொலி மக்களின் பக்கமாக நின்று உண்மைச் செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்த்துவருகிறது. உலகம் சாட் ஜி.பி.டி. (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு சார் தகவல் தொடர்பு அளவுக்கு சென்றாலும் கள நிலவரங்களை அறிய உதவும் ஒரே சாதனம் வானொலி மட்டுமே.
பெரும்பாலான சமூக ஊடகங்கள் மோதலைத் தூண்டும் வகையான செய்தி களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால், இன்றுவரை பெரும்பாலான தொழில்முறை வானொலி நிலையங்கள் மோதல்களை யும் பதற்றத்தையும் தணிக்கும் விதமாக மட்டுமே செய்திகளை ஒலிபரப்புவதை ஊடகஅறமாக கொண்டு செயலாற்றி வருகின்றன.
நல்லிணக்கம் மற்றும் சுமூக பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதே வானொலியின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது. இதற்கு உதாரணமாக, வீரப்பன் காட்டில் இருந்தபோது, அவர் அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு நாடியது பிபிசி தமிழோசை போன்ற வானொலி ஊடகத்தைதான்.
தொலைதூர நாடுகளிலிருந்து சிற்றலை ஒலிபரப்பின் ஊடாக வானொலிகள் அமைதி புறாவாக செயல்பட்டுள்ளன. சமூகத்தில் பல்வேறு குழுக்களிடையே உரையாடலை வானொலிநிகழ்த்துகிறது. இதற்கும் ஒரு நல்ல உதாரணம் உண்டு. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து ஒலிபரப்பிய வேரித்தாஸ் தமிழ்ப்பணி ஈழ மக்களின் குரலாகவே ஒலித்தது.
(உலா வருவோம்)
- கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: bbcsakthi@gmail.com