கையருகே கிரீடம் - 29: சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் வேலைவாய்ப்புகள்

கையருகே கிரீடம் - 29: சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் வேலைவாய்ப்புகள்
Updated on
2 min read

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு துறையான, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை (Department of Scientific and Industrial Research) மிக முக்கியமானது. உள்நாட்டு தொழில்நுட்பங்களை வளர்ப்பதிலும், மேம்படுத்துவதிலும் இத்துறை முக்கிய பங்காற்றுகிறது.

தொழில்நுட்பங்களை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டிற்காக, தொழில் நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்வதிலும் இத்துறை குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருக்கிறது. இத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (Council of Scientific and Industrial Research). இது சுருக்கமாக சிஎஸ்ஐஆர் (CSIR) என்று அழைக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி: அறிவியல், தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் முன்னணி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல ஆய்வுக்கூடங்கள் சேர்ந்ததுதான் சிஎஸ்ஐஆர். இதில் 38 தேசிய ஆய்வுக்கூடங்கள், 39 கள மையங்கள், 3 புதுமை வளாகங்கள் உள்ளன.

சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில், தலைவலி மருந்திலிருந்து விமானம்வரை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 4600 விஞ்ஞானிகளும், 8000 தொழில்நுட்பப் பணியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளி இயற்பியல், கடலியல், வேதியியல், மருந்து பொருட்கள், மரபணுவியல், உயிரி தொழில்நுட்பம், நேனோ தொழில்நுட்பம், விமானவியல், சூழலியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகள் செய்து அசத்துகிறது சிஎஸ்ஐஆர்.

சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் ஆய்வுக்கூடங்களில் மூன்று தமிழகத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் சிஎஸ்ஐஆர்: சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute-CLRI), தரமணியில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (Structural Engineering Research Center-SERC), காரைக்குடியிலுள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம் (Central Electro Chemical Research Institute-CECRI) ஆகியவை சிஎஸ்ஐஆர் நிறுவனங்களே.

தோல் தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், தோல் தொழிற்சாலைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதிலும், தோல் தொழில்நுட்பப் பயிற்சிகள் தருவதிலும் இந்திய அளவில் புகழ்பெற்ற நிறுவனம் சிஎல்ஆர்ஐ (CLRI).

பாலங்கள், மின் கோபுரங்கள் உள்ளிட்டவைகளின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்கிறது எஸ்ஈஆர்சி (SERC). நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படாத கட்டமைப்புகளை (Structures) உருவாக்குவதில் கைதேர்ந்தவர்கள் இந்நிறுவன விஞ்ஞானிகள்.

அரிமானத்திலிருந்து உலோகங்களை பாதுகாப்பது, மின் கலன் (Battery) தொழில்நுட்பங்கள், ஆலைக்கழிவுகள் சுத்திகரிப்பு என மின்வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் சிக்ரி (CECRI) விஞ்ஞானிகள். இந்த ஆய்வகத்தின் இயக்குனராக பணியாற்றிய விஞ்ஞானி என்.கலைசெல்வி தற்போது சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் பொது இயக்குனராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்புகள்: சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் விஞ்ஞானியாக பணியாற்ற வாய்ப்புகள் உண்டு. அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பட்டம், பட்டமேற்படிப்பு, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தொழில்நுட்பப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் மற்றும் சார்புப்பணி வாய்ப்புகள் பட்டதாரிகள், பள்ளியிறுதி பயின்றவர்களுக்கு உண்டு.

வேலைவாய்ப்பு குறிந்த அறிவிப்புகள் நாளிதழ்களில் வெளியாகும். சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் வலைதளத்தை csir.res.in/career-opportunities/recruitment அவ்வப்போது ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்.

அறிவியல் ஆய்வில் வாகை சூட வாழ்த்துகள்!

(தொடரும்)

கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்: விஞ்ஞானி ஆகும் வழிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in