சைபர் புத்தர் சொல்கிறேன் - 29: சைபர் ஸ்டாக்கிங் எனும் மன நோய்

சைபர் புத்தர் சொல்கிறேன் - 29: சைபர் ஸ்டாக்கிங் எனும் மன நோய்
Updated on
1 min read

ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் அவரை பின்தொடர்வது, அவரின் நடமாட்டத்தை உளவுபார்ப்பது, அவர் செல்லுமிடமெல்லாம் சென்று அச்சுறுத்துவது ஆகியன ஸ்டாக்கிங் எனப்படுகிறது. இதையே டிஜிட்டல் உதவியுடன், சமூக வலைத்தளங்கள், செயலிகள் உதவியுடன் செய்தால் அது சைபர் ஸ்டாக்கிங்.

இது ஒரு மனநோய். ஆனால், இந்நோய் உள்ளவர்கள் தனிமை விரும்பிகள், கொஞ்சம் பழக கடினமாக இருப்பார்களா என்றால் இல்லை. பார்க்கப் பழக மிக சாதாரணமாக தெரியும் நபர்கள் கூட இத்தகைய மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

உங்களை பின்தொடர்வது யார்? - உங்களில் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவுகள், ஸ்டேடஸ், புகைப்படங்கள் பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள். அத்தகைய சமயத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை பகிரவில்லை என்றாலும் கூட உங்கள் புகைப்படங்கள் மூலமாகவும் உங்களை அறியாமல் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

உங்கள் பள்ளி சீருடை, நீங்கள் செல்பி எடுத்த இடத்தில் பின்னணியில் உள்ள கடை, அதன் அலைபேசி எண், முகவர் எனப் பல தகவல்கள் மிக எளிதாகக் கணித்துவிட முடியும். ஒரு மாணவி ஒரு புகைப்படம் பகிர்கிறார், அவரை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் ஸ்டாக்கர் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்கிறார்.

பின்னணியில் ஒரு ஜூஸ் கடை, அதன் பெயர்ப்பலகை உள்ளது. அந்த ஜூஸ் கடையின் பெயரைக் கூகுளில் தேடுகிறார், துல்லியமாக மேப் லொக்கேஷனுடன், எந்த தெரு எனத் தகவல் தெரிகிறது. அந்த ஸ்டாக்கர் அந்த ஜூஸ் கடைக்குச் சென்று கண்காணிக்க தொடங்குகிறார். இப்படி சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்த மாணவியை நெருங்கிவிட்டார்.

இத்தகைய சைபர் ஸ்டாக்கிங் செய்பவர்கள் பல காரணங்களுக்காக ஒருவரைபின்தொடரலாம். காதல் ஒரு முக்கிய காரணம் என்றாலும், ஸ்டாகிங் செய்பவர்கள் மனநிலை பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அவர்கள் உங்களை பாதுகாப்பதாக நினைத்து மிக அதீதமாக ஏதாவது ஆபத்தான செயலில் இறங்கிவிட வாய்ப்புள்ளது.

சந்தேகத்துக்கு இடமின்றி பெண்களே அதிகமாக ஸ்டாக் செய்யபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைபர் வருகைக்குப் பின் சைபர் ஸ்டாகிங் அதிகமாகி உள்ளது. சைபர் வெளியில் உள்ள பல கருவிகள் ஸ்டாகிங் செய்வதை மிக எளிதாக்கி உள்ளது. சாதாரணமாக ஸ்டாகிங் செய்பவர்கள் தங்களுக்கு தெரிந்தபெண்ணையோ அல்லது மிக பிரபலமானவர்களையோ தொந்தரவு செய்வார்கள். ஆனால்,இணையம் பலரின் தகவல்களை சமூகவலைத்தள உதவியுடன் வெளிப்படுத்திவிடுவதால் ஸ்டாகிங் மிக எளிதாகிவிட்டது.

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in