

ஒரு போர் நடந்தால், ஒரு நாடு பிரிந்து மக்கள் அகதிகள் ஆனால், ஒரு கொள்ளை நோய் ஊரெங்கும் பரவினால் என்ன நடக்கும், எத்தனை உயிர்கள் போகும், என்பதைப் பற்றி நாம் எத்தனையோ வரலாறுகள் படித்திருப்போம். ஆனால், எப்போதோ நடந்த இந்த நிகழ்வுகளால் இன்றுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மையில் நடந்தது.
1971-ம் ஆண்டு நிகழ்ந்த வங்கதேச போர் மற்றும் பிரிவினையில், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மேற்கு வங்கத்திற்குக் குடிபெயர்ந்தனர். அப்போது பரவிய காலரா நோயால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து வீழ்ந்தனர். அவர்களைக் காத்த ஆபத்பாந்தவர் டாக்டர் திலீப் மஹாலனபிஸ். இவர் பிறந்தது 1934 ஆண்டு நவம்பர் 12 அன்று ஒன்றிணைந்த இந்தியாவிலிருந்த வங்காள மாகாணத்தின் கிஷோர்-கஞ்ச் மாவட்டத்தில். ஆரம்பப் பள்ளியை முடித்ததுமே கொல்கத்தாவுக்கு குடும்பம் குடிபெயர, அங்கேயே படிப்பைத் தொடர்ந்த திலீப் 1958-ம் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.
குழந்தைகளைப் பிடிக்கும் என்பதால் படித்து முடித்தவுடன் ஒரு குழந்தை நல மருத்துவராக திலீப் பணியைத் தொடங்கினார். அன்றிருந்த மருத்துவத்தில் குழந்தைகள் மருத்துவத்தின் போதாமையை நன்குணர்ந்தார். அதனால் மருத்துவராகப் பணியாற்றுவதைவிட, மருத்துவ ஆராய்ச்சியில் தனது பணியைத் தொடர முடிவு செய்தார். அதற்கு இந்தியாவைக் காட்டிலும், இங்கிலாந்து சிறந்த இடம் என்பதால் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்று, அங்கு என்.ஹெச்.எஸ்.-ல் (National Health Services) சேர்ந்தார்.
ராணி மருத்துவமனையில் பணி: இங்கிலாந்தின் மிகவும் பிரசித்தி பெற்ற எடின்பரோ மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் குழந்தைகள் தொடர்பாக ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தார். குறிப்பாக வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று மற்றும் தொற்றா நோய்களைப் பற்றியும், அவை உண்டாக்கும் பாதிப்புகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் அந்தக் கட்டுரைகளில் முன்வைத்தார். இதன் மூலம் சிறப்புப் பட்டங்களைப் பெற்றார். அதன் பிறகு இங்கிலாந்து அரசின் அழைப்பை ஏற்று இங்கிலாந்தின் ராணி எலிசபெத் மருத்துவமனையில் 1966-ம் ஆண்டு பொறுப்பு மருத்துவரானார்.
அங்கேயே சில காலம் தொடர்ந்து திறம்படப் பணியாற்றினார். உண்மையில் அந்தப் பொறுப்பை முதன்முதலாக வகித்த இந்தியர் என்ற பெருமையுடன் நாடு திரும்பிய திலீப் மஹாலனபிஸ்க்கு, நமது நாடு அவர் நினைத்த வண்ணம் பணிகளைச் செய்ய அனுமதிக்கவில்லை.
தாய்நாடு திரும்பிய திலீப் அவரது ஆராய்ச்சிகளைத் தொடர விரும்ப, அவர் பணிபுரிந்த மருத்துவக் கல்லூரியோ நிதிநிலைகளைக் காரணம் காட்டி அதற்கு இடமளிக்கவில்லை. அதனால், தனது ஆராய்ச்சிகளைத் தொடரவேண்டி, அந்த சமயத்தில் கொல்கத்தாவில் செயலாற்றி வந்த அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கிளையில் முழு நேர மருத்துவராக இணைந்தார் திலீப். ஆனால் அவருக்கு வேறு ஒரு சோதனை காத்திருந்தது.
தாய்நாட்டில் காத்திருந்த சோதனை: 1971 -ம் ஆண்டு நிகழ்ந்த வங்கதேச போர் மற்றும் பிரிவினையில், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மேற்கு வங்கத்தை நோக்கிக் குடியேற, ஏற்கெனவே பரவ ஆரம்பித்திருந்த காலரா நெரிசல் நிறைந்த சுகாதாரமற்ற அந்தச் சூழ்நிலையில் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. தொடர் வாந்திபேதியால் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி அதன் காரணமாக கொத்துக்கொத்தாக உயிரிழப்புகளையும் உண்டாக்கியது இந்தக் கொள்ளை நோய்.
குறிப்பாக சுகாதாரமில்லாத உணவு மற்றும் நீரின் மூலமாகப் பரவும் விப்ரியோ காலரே எனும் பாக்டீரியாவால் இந்த கொடிய நோய் பரவுகிறது. இதற்கு ஒரே உடனடி நிவாரணம் சலைன் வாட்டர் எனப்படும் பாட்டிலில் இருந்து ரத்தக்குழாய்களுக்கு ட்யூப் மூலம் செலுத்தும் திரவம்தான். இவை அனைத்தையும் திலீப் அறிந்திருந்தாலும் அதை அனைவருக்கும் அளிக்க முடியாத நிலையில் அரசாங்கம் அப்போது இருந்தது.
திடீரென்று நிகழ்ந்த போர் மற்றும் பிரிவினை, குடிபெயர்ந்த அகதிகள், ஊரெங்கும் பரவிய கொள்ளை நோய் என அனைத்தும் ஒருசேரத் தாக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது அன்றைய அரசாங்கம். அப்போது அங்கிருந்த அனைத்து மருத்துவர்களையும் பொது மருத்துவம் பார்ப்பதை நிறுத்திவிட்டு அகதி முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. அப்படி, தனது ஆராய்ச்சிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு தனது இரு உதவியாளர்களுடன் மேற்கு வங்கத்தின் பங்கான் கிராமத்தில் அகதிகள் முகாமுக்கு மருத்துவராகச் சென்றார் டாக்டர் திலீப் அங்கிருந்த நிலையைப் பார்த்து கலங்கிப் போனார்.
(டாக்டர் திலீப் மகிமை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com