

மனிதர்களில் பலருக்கும் பல வகைகளில் மூக்குகள் இருக்கும். சீனர்கள், ஜப்பானியர்களுக்கு கொஞ்சம் சப்பையாக இருக்கும். இந்தியர்களுக்கு பொதுவாக கூர்மையாக இருக்கும். இந்தியர்களில் வடமேற்கு மாகாணங்களில் இருப்போர்க்கு கொஞ்சம் வேறுபாடு தெரியும். ஆனால், இந்த மூக்கின் அமைப்பு ஒருவர் வாழ்க்கையின் சாதனைக்கு சவால்களை ஏற்படுத்துமா? ஆம் ஏற்படுத்தியது.
உலகம் பெரும்பகுதியைக் கடந்து தென் அமெரிக்காவை அடைய உள்ள கப்பலில் ஊதியம் இல்லாமல் பணியாற்ற விஞ்ஞானி ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கப்பலின் தலைவருக்கு ஒரு ஆசான் இருந்தார். அவர் மூக்கு அமைப்புகளின் மேல் நம்பிக்கை கொண்டவர். அதாவது இப்படிப்பட்ட மூக்கு இருப்பவர்கள் வேலைக்கு ஆவார்கள். இப்படிப்பட்டவர்கள் வேலைக்கு ஆகமாட்டார்கள். இப்படியாக குறி கூறுபவர்.
மூக்கு சிக்கலை தீர்த்தவர்: அவரது கருத்துப்படி இந்த விஞ்ஞானி இந்த வேலைக்கு ஆகமாட்டார் என்று கூறிவிட்டார். இதனால் வீட்டில் அனுமதி கிடைத்தும் இந்த விஞ்ஞானியின் பயணம் உறுதிசெய்ய இயலாததாக மாறியது. ஆனாலும் அந்த விஞ்ஞானியின் செயல்பாடும் ஈடுபாடும் கப்பல் தலைவரின் முடிவை மாற்றியது.
அந்த விஞ்ஞானி ஐந்து ஆண்டுகள் கப்பல் பயணமும் மேற்கொண்டார். தனது ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகளையும் பெற்றார். யார் அந்த விஞ்ஞானி? ஆம் சார்லஸ் டார்வின்தான். அந்த கப்பலின் தலைவராக விளங்கியவர் பிட்ஸ்ராய். அவரது ஆசானின் பெயர் லாவர்டர்.
பரிணாமக் கொள்கையின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் (1809 - 1882) இங்கிலாந்து நாட்டின் ஷுருஸ்பரி நகரில் பிறந்தார். இவரது பரம்பரையில் அனைவருமே மெத்தப் படித்தவர்கள். அவருடைய தாத்தா ஒரு இயற்கை விஞ்ஞானி. அவருடைய தந்தை ஒரு மருத்துவர்.
உள்ளூரில் படிப்பைத் தொடங்கிய டார்வின் வழக்கம்போல பள்ளியில் நல்ல பெயர் எடுக்கவில்லை. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் மீன் பிடித்தல், சிப்பி சேகரித்தல், மரம் ஏறுதல், பறவை முட்டைகளை சேகரித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
கண்டதை படித்தவர்: அன்றைய நாட்களில் மருத்துவர்களை நாடி மக்கள் வரமாட்டார்கள். மக்கள் மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிப்பர். மருத்துவர்கள்தான் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்வர். டார்வினுடைய தந்தை கொஞ்சம் உடல் பருமனானவர்.
எனவே ஒவ்வொரு வீடுகளின் படியேறி அவரால் மருத்துவம் செய்ய இயலாது. அதுவும் மாடிவீடுகள் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால் அவருக்குத் துணையாக டார்வின் செல்வார். அவ்வாறு டார்வின் உடன் சென்று நோயாளிகளின் நோய்கள் குறித்த அறிகுறிகளை அப்பாவிடம் வந்து விளக்குவார்.
இதனை அடிப்படையாக வைத்து அவரது தந்தை மருந்துகளைப் பரிந்துரைப்பார். இதனால் அவரை மருத்துவராக்கும் முயற்சியில் அவரது தந்தை ஈடுபட்டார். எடின்பரோ பல்கலையில் டார்வினின் சகோதரரும் ஏற்கெனவே பயின்றுவந்தார். இவரையும் அங்கேயே மருத்துவம் பயில சேர்த்தனர். ஆனால் அங்கு நடத்தப்பட்ட பாடங்களில் வேதியியல் தவிர வேறு எதுவும் டார்வினுக்குப் பிடிக்கவில்லை. மருத்துவம் தவிர்த்த மற்ற உயிரியல் பாடங்களில் ஆர்வம் கொண்டு அந்த துறை சார்ந்த அறிவினைப் பெற முனைந்தார்.
இதனிடையே இவரது தந்தைக்கு விஷயம் எப்படியோ எட்டியது. எனவே டார்வினை பாதிரியாராக்க முடிவு செய்தார். எனவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்க ஏற்பாடு செய்தனர். அங்கும் இறையியல் தவிர அனைத்துத் துறைகளிலும் டார்வின் ஆர்வம் காட்டினார். இப்படிப்பட்ட தொடர் கற்றலின் விளைவினாலேயே உயிரியல்,வேதியியல் மண்ணியல், பாறையியல், பறவையியல் என பல்வேறு துறைகள் சார்ந்த அறிவின் பெட்டகமாக பரிணமிக்கத் தொடங்கினார் சார்லஸ் டார்வின்.
இது போன்ற அனைத்துத் துறைகளின் பங்களிப்பில்லாமல் அவரால் உயிரினங்களின் பரிணாமக்கொள்கையை உருவாக்கியிருக்க இயலாது. எல்லாவற்றுக்கும் மேல் அந்த நாட்களிலேயே உலகம் முழுவதும் பயணிக்கமுன்வந்ததும் அவரது சாதனைக்கு உதவியது. சரி எப்படியெல்லாம் ஆய்வு செய்தார்? அடுத்த பகுதியில் பார்ப்போம்.
- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com