நானும் கதாசிரியரே! - 2: கதையை சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி?

நானும் கதாசிரியரே! - 2: கதையை சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி?
Updated on
2 min read

நம்மாலும் கதைகளை உருவாக்க முடியும் என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இப்போது, கதை சொல்வதற்கும் கதை எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை பார்ப்போம். பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா போன்ற உறவினர்களும் கதை சொல்லிகளும் சொல்லும் கதைகளை அப்படியே எழுத முடியுமா?

முதலில் கதை சொல்வது எப்படி என்று பார்க்கலாம். நமக்கு ஒருவர் கதை சொல்கிறார் அவர்தான் கதை சொல்லி. அவர், நம் எதிரில் இருந்து கதை சொல்கிறார். அதனால், கதையை வார்த்தைகளால் மட்டுமே அவர் சொல்வது இல்லை. கைகளை, உடலை அசைத்துச் சொல்லும்போது கதை எளிதாகப் புரியும். அப்படியான கதைகளை கேட்கும்போது நம்மை மறந்து சிரிப்போம்; கைத்தட்டுவோம். அதைக் கவனிக்கும் கதை சொல்லி, இன்னும் சில மாற்றங்களைச் சேர்த்து கதையைச் சுவாரஸ்யப்படுத்துவார்.

கதை சொல்லி என்னவெல்லாம் செய்வார்? - ஒருவேளை ரொம்பவும் அலுப்புத் தரும் கதையை அவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது நமக்கு போர் அடிக்கும். கொட்டாவி விட்டுக்கொண்டே ’எப்போடா இந்தக் கதை முடியும்’ என்பது போல முகத்தை வைத்துக் கொள்வோம். அதைக் கவனிக்கும் கதை சொல்லி, கதையில் திடீரென்று நகைச்சுவை சேர்ப்பார்… விலங்குகள் போலக் கத்துவார்… விமானம் பறப்பதுபோல ’மிமிக்ரி’ செய்வார்… அவற்றைக் கேட்டதும் நமக்கு உற்சாகம் வந்துவிடும். கதையை ஆர்வமாகக் கேட்போம்.

கதைக்கு ஏற்றவாறு வேடம் அணிந்துகொள்ளும் கதை சொல்லிகளும் உண்டு. உதாரணமாக, நாட்டியக் கலைஞராக வேடம் போட்டு வருபவரைப் பார்த்தவுடனே, அந்தக் கதாபாத்திரம் நமக்குப் புரிந்துவிடும். உடை, அலங்காரம் பற்றி விளக்க வேண்டாம். ஆனால், கதை எழுதும்போது அந்த விவரங்களையும் எழுத வேண்டும்.

அடுத்து, கதை கேட்கும்போது சந்தேகம் வந்தால் கேட்கலாம். அதற்கு அவர் சரியான விளக்கம் தந்துவிட்டு கதையைத் தொடர்வார். அதனால், கதையைத் தொடர்ந்து கேட்பதில் குழப்பம் இருக்காது.

மொத்தத்தில் நமக்கு எதிரில் ஒருவர் கதை சொன்னால், சுவாரஸ்யமாக இருக்கும். எந்தக் குழப்பமும் வராது. ஆனால், அந்தக் கதையை அப்படியே நாம் எழுதினால் சில சிக்கல்கள் வரும். ஏனென்றால், அந்தக் கதையைப் படிப்பவர் நம் எதிரில் இருக்க மாட்டார். அதனால், கதையில் எந்தப் பகுதி அவருக்குப் பிடிக்கும்… இந்த வார்த்தைகளுக்கு அவருக்கு அர்த்தம் தெரியுமா… இந்தக் கதை அவருக்கு போர் அடிக்குதா…. போன்ற எந்த விஷயமும் நமக்குத் தெரியாது.

கதை சொல்லும்போது, ‘வேகமாக வந்த புலி அந்தப் பக்கம் பாய்ந்து சென்றது’ என்று கையைக் காட்டிச் சொல்லிவிடலாம். கதை எழுதும்போது எந்தத் திசையில் இருந்து வந்து எந்தத் திசையை நோக்கிச் சென்றது என்று தெளிவாக எழுத வேண்டும். திசைகளைச் சொன்னால் குழப்பம் வரும் என்றால் வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதலாம்.

நாம் கேட்ட கதையை, எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்றால் கட்டாயம் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், கதை முழுமையாக எல்லோருக்கும் புரியும். அவை என்னென்ன என்பதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

வீட்டு பாடம் கதை: தாகமாக இருந்த காகம் ஒரு பானையைப் பார்த்தது. பானையின் அடிப்பகுதியில் கொஞ்சம் நீர் இருந்தது. அதன் உள்ளே கற்களைப் போட, போட நீர் மேலே வந்தது குடித்துத் தாகம் தணிந்தது காகம். இந்தக் கதையைக் காகம் போல வேடம் அணிந்து சொல்லிப் பாருங்கள்.

கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in