

“என்னங்கப்பா யோசனையெல்லாம் பலமா இருக்குபோல!” கேட்டுக்கொண்டே வந்தான் நிழன். “மதுரையில, அன்னை தெரசா சகோதரிகள் நடத்துற ஆதரவற்றோர் இல்லாம் இருக்கு. நான் கல்லூரில படிக்கையில ஒவ்வொரு மாசமும் நண்பர்களோட அங்க போவேன்.
வாய் பேசல, காது கேக்கல, கால் கை ஊனம்னு குடும்பத்தால கைவிடப்பட்ட பலபேரு அங்க இருந்தாங்க. அவங்களோட பேசிட்டு இருப்போம். ஆதரவில்லாத குழந்தைகளோட விளையாடுவோம். மதியம் சாப்பாடு பரிமாறுவோம். இந்த பத்திரிகையில, ஓரியன் ஜீன் பற்றி படிச்சதும் பழைய ஞாபகங்கள் வந்திருச்சு” சொல்லிக்கொண்டே மகனிடம் பத்திரிகையை கொடுத்தார் அப்பா.
சமூகத்தை அறிதல்: அமெரிக்காவில் 2010-ல் ஓரியன் பிறந்தான். சுறுசுறுப்போடு வளர்ந்தான். பள்ளிக்கூடம் முடிந்ததும் அம்மாவுடன் தொலைக்காட்சியில் செய்திகளை விரும் பிப் பார்த்தான். தன்னைச் சுற்றி நாட்டில் நடப்பதை ஓரளவு அறிந்தான்.
அந்நேரம், அமெரிக்காவிலும் கரோனா பரவத் தொடங்கியது. ஊரடங்கு காலத்தில் ஊர்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. பலரும் வேலை இழந்தார்கள். தங்குவதற்கு வீடுகள் இல்லாமல், சாப்பிட உணவு கிடைக்காமல், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் பலரும் துயருற்றார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்லாமா என்று ஓரியன் யோசித்தான்.
ஓரியனை அழைத்த ஆசிரியர், “தேசிய அளவில் பேச்சுப் போட்டி இருக்கிறது. பேசுகிறாயா?” என்று கேட்டார். வெற்றி பெற்றால் இந்த பணத்தை வைத்து உதவி செய்யலாமே! என்று நினைத்தான் ஓரியன். நன்றாகத் தயாரித்து சிறப்பாகப் பேசினான். வெற்றி பெற்றான். பரிசு பணத்தை சரியான முறையில் பயன்படுத்த, இரக்கச் செயல்களுக்கான பயணம் (Race to Kindness) என்றோர் அமைப்பை ஏற்படுத்தினான்.
பலரையும் சந்தித்தான். “இரக்கச் செயல்கள் செய்ய வேண்டும் என்பது நம்முடைய தேர்வுதான். யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நாம் இரக்கத்துடன் செயல்பட்டு மற்றவர்களுக்கும் உத்வேதகத்தைக் கொடுக்க முடியும். அடுத்தவர்களைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது எவ்வளது எளிதானதோ, அக்கறையோடு இருப்பதும் அவ்வளது எளிதானது” என்றான். பலரின் உதவியுடன், பசியோடு இருந்தவர்களைத் தேடிச் சென்று ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் கொடுத்தான். 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் கொடுத்தான்.
புத்தக பூமி வேண்டும்: நிறைய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான். அவன் காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கப் போகும்வரை புத்தகமும் கையுமாகவே திரிவான். “நீயும் என்னுடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை வாசி” என நண்பர்களை ஊக்கப்படுத்துவான். அன்றாடச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கவும், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம் மற்றும் அதுவரை அறியாத ஒன்றை அறியவும் புத்தக வாசிப்பு உதவும் என்று சொல்வான். அதிலிருந்தே புதிய திட்டத்தை உருவாக்கினான்.
தொலை தூரத்தில் வாழும் குழந்தைகளால் நகரத்துக்குச் சென்று புத்தகம் வாங்க முடிவதில்லை. எனவே, இப்பகுதிகள் புத்தகப் பாலைவனம்போல இருக் கின்றன. குறைந்தபட்சம், இந்த பாலைவன பரப்பளவைக் குறைக்க வேண்டும் என நினைத்தான். தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்டான். இவ்வாறாக, 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை வாய்ப்பில்லாத மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தான்.
A kids book about leadership எனும் புத்தகம் எழுதியிருக்கிறான். “ஒரு பிரச்சினையைப் பார்க்கிறீர்கள் என்றால் அதை நீங்களே சரி செய்யுங்கள்” என்று சொல்லும், ஓரியனுக்கு, “2021-ம் ஆண்டின் சிறந்த குழந்தை” விருது வழங்கியது டைம் பத்திரிகை. அப்போது, ஓரியனுக்கு வயது 11.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com