

பரிதியும் வெண்ணிலாவும் சதுரங்கம் விளையாடினார். பரிதி தனது வெண்ணிற அமைச்சரை கொண்டு வெண்ணிலாவின் கருநிறப் போர் வீரர் ஒருவரை வெட்டலாம். அவ்வாறு வெட்ட தனது கையை அமைச்சரை நோக்கிக் கொண்டு சென்ற பரிதி, ஒரு நொடித் தயக்கத்திற்குப் பின் இன்னொரு முனையில் இருந்த குதிரையை நகர்த்தினான்.
இப்பொழுது வெண்ணிலா காயை நகர்த்த வேண்டும். வாய்ப்பிருந்தும் ஏன் இந்தப் போர் வீரரை பரிதி வெட்டவில்லை? என்ற வினா வெண்ணிலாவின் மனத்திற்குள் சுழன்றது. பரிதியின் குதிரை அடுத்து எங்கெல்லாம் நகர்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று முதலில் பார்த்தாள். பின்னர், பரிதி குதிரையை நகர்த்தியதால் அவனது வேறு காய் ஏதேனும் தனது காய் எதையேனும் இப்பொழுது வெட்ட வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தாள்.
இரண்டுக்கும் இப்பொழுது வாய்ப்பில்லை என்று தெரிந்தது. பின்னர் ஏன் நகர்த்தினான் என்று சிந்தித்தவாறு நோட்டமிட்டாள். வெட்டுப்பட இருக்கும் தனது வீரரை நகர்த்தினால் பரிதி எந்தக் காயை நகர்த்துவான், தனது குதிரைகள், யானைகள், அமைச்சர்கள் ஆகியவற்றில் எதனை எங்கு நகர்த்தினால், பரிதி தனது காய்களில் எதனை எங்கு நகர்த்துவான், அதனால் தனது காய் ஏதேனும் வெட்டுப்படுமா என்று ஆராய்ந்தாள். அப்பொழுதுதான் பரிதி குதிரையை ஏன் நகர்த்தி இருக்கிறான் என்பது வெண்ணிலாவிற்குப் புரிந்தது. புன்னகைத்தாள்.
பரிதி ஏன் குதிரையை நகர்த்தினான்? - மீண்டும் இருவரது காய்களையும் நோட்டமிட்டாள். தனது ராணியை அதனிடத்தில் இருந்து வலப்பக்க விளிம்பில் மேலிருந்து கீழாக உள்ள நான்காவது வெள்ளைக் கட்டத்திற்கு நகர்த்தினால் அடுத்தடுத்து எந்தெந்தக் காய்கள் எங்கெங்கு நகர வாய்ப்பிருக்கிறது என்பதைக் கற்பனை செய்து பார்த்தாள்.
அவ்வாறு நகர்த்தினால் தனது இரு போர் வீரர்களை இழந்து பரிதியின் மூன்று போர் வீரர்களையும் ஒரு அமைச்சரையும் ஒரு யானையையும் தன்னால் வெட்ட முடியும் என்று அறிந்தாள். பின்னர் ராணியை நகர்த்தினாள் என்று விவரித்த எழில், இந்நிகழ்வில் வெண்ணிலா என்னவெல்லாம் செய்தாள்? என்று வினவினார்.
பரிதி, தனது குதிரையை நகர்த்தியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊகித்தாள் என்றாள் இளவேனில். தான் இந்தக் காயை இங்கு நகர்த்தினால், பரிதி தனது அந்தக் காயை அங்கு நகர்த்துவான். அதனால் தனது காய் வெட்டப்படலாம் என்று கணித்து முன்னறிந்தாள் என்றான் தேவநேயன்.
தனது ராணியை நகர்த்தினால் அடுத்தடுத்து எந்தெந்தக் காய்கள் எங்கெங்கு நகரும் என்று தனது மனத்திற்குள்ளேயே விளையாட்டைக் கற்பனையாகக் காட்சிப்படுத்திப் பார்த்தாள் என்றாள் மதி. அவ்வாறு நகர்ந்தால் தனக்கும் பரிதிக்கும் ஏற்பட வாய்ப்புள்ள இழப்புகளையும் ஆதாயங்களையும் பகுத்தாய்ந்தாள் என்றாள் தங்கம். தனக்குச் சிறு இழப்பும் பெரிய ஆதாயமும் கிடைக்கும் என்பதை அறிந்து தனது ராணியை நகர்த்த முடிவு செய்தாள் என்றாள் நன்மொழி.
அருமை என்று பாராட்டிய எழில், ஊகித்தல் (Inferring), முன்னறிதல் (Predicting), காட்சிப்படுத்திப் பார்த்தல் (Visualizing), பகுத்தாய்தல் (Analysis), முடிவுசெய்தல் (Concluding) ஆகியனவும் ஆய்வுச் சிந்தனையின் கூறுகள்தான் என்றார்.
ஆக்கச்சிந்தனையின் கூறுகள் இவ்வளவுதானா? இன்னும் இருக்கின்றனவா? என்று வினவினான் முகில். இன்னும் இருக்கின்றன என்று கூறி புன்னகைத்தார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com