பிளஸ் 2க்குப் பிறகு - 15: ஊர் சுற்றவும் ஒரு படிப்பு!

பிளஸ் 2க்குப் பிறகு - 15: ஊர் சுற்றவும் ஒரு படிப்பு!
Updated on
2 min read

‘ஊர் சுத்தாம ஒழுங்காப் படி...’ சில வீடுகளில் விளையாட்டுப் பிள்ளைகளை, பெரியவர்கள் இப்படியும் கண்டிப்பதுண்டு. ஆனால், ஊரைச் சுற்றுவதே பணியாகக் கொண்ட சுவாரசிய படிப்புகளும் இருக்கின்றன. அப்படி சுற்றுலாத் துறையை குறிவைத்து உயர்கல்வி பெறுவோருக்கு நல்ல எதிர்காலமும் காத்திருக்கிறது.

பட்டப்படிப்பில் இருந்தே சுற்றுலாத் துறையை தேர்வு செய்ய விரும்புவோர், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் உரிய மதிப்பெண் தகுதிகளுடன், பி.எஸ்சி., ஹாஸ்பிடாலிடி அண்ட் டூரிசம் படிக்கலாம். தொடர்ந்து இதே பிரிவில் முதுநிலையாக எம்.எஸ்சி., பட்டமும் பெறலாம்.

பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள்: பிளஸ் 2 தகுதியுடன் பட்டப்படிப்புக்கு மாற்றாக ஓராண்டு பட்டயப் படிப்புகளை, பல்வேறு முன்னணி தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வழங்குகின்றன. உதாரணத்துக்கு kuoniacademy.co.in போன்றவை சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் தொடர்பான பல்வேறு படிப்புகளை தொலைதூரக் கல்வியாகவும் வழங்குகின்றன.

சுற்றுலாத்துறையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான பல்வேறு படிப்புகளை படித்தவர்களுக்கு பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. NCHM JEE என்ற நுழைவுத் தேர்வின் மூலம், நாட்டின் முதன்மையான ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு, வளாக நேர்காணல் வாயிலாக இளம் வயதிலேயே அதிக சம்பளத்துடன் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

முதுநிலைப் படிப்புகள்: இது தவிர பட்டப்படிப்பு தகுதியோடு சுற்றுலாத் துறைக்கு என்றே இருக்கும், முதுநிலை படிப்பான எம்பிஏ-விலும் சேரலாம். சுற்றுலாத் துறையின் பெரும் நிறுவனங்களில் இம்மாதிரி எம்பிஏ - டூரிசம் அண்ட் ஹாஸ்பிடாலிடி முடித்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். நொய்டா, குவாலியர், புவனேஸ்வர் மற்றும் நெல்லூரில் செயல்படும் இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் (www.iittm.ac.in) வாயிலாக இதில் சேரலாம்.

சுற்றுலாத் துறையில் மேலும் ஆர்வம் கொண்டவர்கள், இந்த எம்பிஏ படிப்புக்கு மாற்றாக எம்டிஏ (Master of Tourism Administration) எனப்படும் சுற்றுலா நிர்வாகம் தொடர்பான முதுநிலை படிப்பையும் பெறலாம். பரவலான வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த முதுநிலை படிப்பு கிடைக்கிறது.

பட்டப்படிப்புடன் சான்றிதழ் / பட்டயம்: சுற்றுலாத் துறையில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலாத் துறை தொடர்பான சான்றிதழ் அல்லது டிப்ளமா படிப்பினை நேரடியாகவோ, தொலைநிலையிலோ முடித்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். எனவே பிளஸ் 2 முடித்து எந்த பட்டப்படிப்பை படித்தவர்களும் சுற்றுலாத்துறை சார்ந்த டிப்ளமா படிப்பு ஒன்றையும் முடித்து அத்துறையில் கால் பதிக்கலாம்.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தகுதியுடன் PGDM எனப்படும் சுற்றுலாத்துறை முதுநிலை பட்டயப் படிப்பை, மேற்கண்ட IITTM நிறுவனங்களிலும், ஹைதராபாத்தில் செயல்படும் NITHM (http://nithm.ac.in/) மற்றும் கேரளாவில் செயல்படும் KITTS நிறுவனங்களிலும் (http://www.kittsedu.org/) சேர்ந்து பயிலலாம்.

இப்போதிருந்தே தயாராகலாம்: செய்யும் பணியில் சவால் மற்றும் புதிய அனுபவங்களையும் விரும்புவோர் சுற்றுலாத் துறையில் சேர்ந்து சாதிக்க முடியும். சுற்றுலாத் துறையில் பிரகாசிக்க விரும்புவோர், புதிய மனிதர்களுடனான சந்திப்பு, அவர்களை கையாளுதல், விரைந்து செயலாற்றுதல், அடிப்படையான கணினி, அரசியல், புவியியல், சமூகம் மற்றும் வரலாற்று அறிவு ஆகியவற்றையும் வளர்த்துக் கொண்டால் தொடர்ந்து சாதிக்கலாம். எனவே சுற்றுலாத்துறை சார்ந்த உயர்கல்வியில் நாட்டமுடைய மாணவர்கள், அது தொடர்பான இதர தகுதிகளையும் இப்போதிருந்தே வளர்த்துக்கொள்ளலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in