உலகம் - நாளை - நாம் - 12: வகை வகையாய்ப் பேசும் வட மாநிலம்

உலகம் - நாளை - நாம் - 12: வகை வகையாய்ப் பேசும் வட மாநிலம்
Updated on
2 min read

உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் உதித்தது உத்தராஞ்சல் மாநிலம். இதன் பிறகு 2007-ல் இதன் பெயர் ‘உத்தர்கண்ட்’ என்று மாறியது. ‘உத்தர்’ என்றால் வடக்கு; ‘கண்ட்’ என்றால் கண்டம் அதாவது பெரிய நிலப் பகுதி. ஆமாம். இந்தியாவின் வடபகுதியில் இருக்கிறது இந்த மாநிலம். உண்மைதான். ஆனால், இதில் ‘பெயர்’ எங்கே இருக்கிறது?

இவ்வாறு, பூகோள இருப்பிடம் சார்ந்து, பெயர் கொண்ட நாடுகள் பல இருக்கின்றன. யோசித்துப் பாருங்களேன்… இமயமலையின் இயற்கை அழகு கொஞ்சும் உத்தர்கண்ட், திபெத் (சீனா), நேபாள நாட்டு எல்லைகளை ஒட்டி உள்ளது. 10 கோடி மக்கள் வாழும் தொன்மையான நிலப்பகுதியான இந்த மாநிலம், 53 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில், மலைகள் 86 சதவீதம், காடுகள் 65 சதவீதம்.

மாநிலத்தின் வட பகுதியில் இமயமலை சிகரங்கள் உள்ளன. இந்தியாவின் இரு பெரும் நதிகளான கங்கை (கங்கோத்ரி), யமுனை (யமுனோத்ரி) ஆகிய இரண்டும் இங்குதான் உற்பத்தி ஆகின்றன. புகழ் பெற்ற இரண்டு புண்ணியத் தலங்கள் சிவத் தலம் கேதார்நாத், வைணவத் தலம் பத்ரிநாத் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளன.

நாட்டின் மிகப் பழமையான ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான நந்தாதேவி பூக்களின் சமவெளி, டேராடூன் நகரின் வன ஆராய்ச்சி நிறுவனம், ஹரித்வார் ராஜாஜி தேசிய பூங்கா ஆகியன இந்த மாநிலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. கார்வால் மலைப் பிரதேசத்தில் ஜான்சரி, போடியா, தாரு, புக்சா, பன்ராவத் என்று மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.

மொழிகளுக்குப் பெயர் பெற்றது: 35000 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் வங்கப் புலிகள், பனிச் சிறுத்தைகள், யானைகள், வானரங்கள் அதிகம் வாழ்கின்றன. மருத்துவ குணம் கொண்ட அரிய வகை தாவரங்கள், உயரமான மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன. உத்தர்கண்ட் மாநிலம் மொழிகளுக்குப் பெயர் பெற்றது.

இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு அதிகாரபூர்வ அலுவல் மொழிகள். இதுவும் அல்லாமல், கார்வாலி, குமோனி, ஜான்சரி ஆகிய பழங்குடி மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இத்துடன் உருது, பஞ்சாபி, பெங்காலி, போஜ்புரி, நேபாளி, ரோங்போ, சாடங்சி, டார்மியா, ரஜி, ரவத், குலுங் ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. வேறு எந்த மாநிலத்தில் இத்தனை மொழிகள் புழக்கத்தில் உள்ளன?

உத்தர்கண்ட் மாநிலத்தில் உக்கிரமான கோடை, கொட்டும் மழை, கடுமையான குளிர் என்று வெவ்வேறு தட்பவெப்ப சூழல்கள் நிலவுகின்றன. இரண்டு தலைநகரங்கள் - கோடையில் பராரிசைன்; குளிர்காலத்தில் டேராடூன். (விரைவில், ஹல்த்வானி – தலைநகர் ஆகலாம்).

காடுகளின் மாநிலம்: சரி… இனி நாம் ஜார்க்கண்ட் செல்வோமா! ‘ஜார்’ என்றால் காடு. புரிந்து இருக்குமே…. ஜார்க்கண்ட் என்றால் காடுகளின் மாநிலம். இதுவும் 2000-ல் தோன்றிய மாநிலம். பிஹார் மாநிலத்தின் தென் பகுதி பிரிக்கப்பட்டு ‘வனாஞ்சல்’ தோன்றியது. பிறகு ‘ஜார்க்கண்ட்’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

தாமோதர், பராகர், சங்க், சுபர்ணரேகா என்று இங்கு பல ஆறுகள் பாய்கின்றன. மாநிலத்தின் வட கிழக்குப் பகுதி வழியே கங்கை நதி செல்கிறது; ஜூன் – அக்டோபர் மாதங்களில் தென்மேற்குப் பருவ காலத்தில், அதிக அளவில் மழை பொழிகிறது; இயற்கை வளம் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கிறது. இருந்தாலும் மாநிலத்தில் பரவலாக வறுமை நிலவுகிறது.

மூன்று கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மக்கள் பேசும் மொழிகள் அதிகம். அலுவல் மொழி இந்தி. ஆனாலும், நாக்புரி, கோர்த்தா, குர்மாலி, மகாகி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகள், பரவலாகப் புழக்கத்தில் உள்ளன. இதனால், அங்கிகா, பெங்காலி, போஜ்புரி, புமிஜ், ஹோ, காரியா, கோர்த்தா, குர்மாலி, மககி, முந்தரி, நாக்புரி, சந்தாலி, உருது ஆகியன, கூடுதல் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஜம்ஷெட்பூர், தன்பாத், பொகாரோ ஸ்டீல் நகரம் உள்ளிட்ட பிரபலமான நகரங்கள் பல கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சி. ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், ராஞ்சி பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வியறிவு வளர்ச்சிக்கு, அதன் மூலம் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கின்றன.

இந்த வாரக் கேள்வி: ராஞ்சி மாகாணத்தில் கெளதம புத்தர் நினைவைப் போற்றும் வகையில் அருவி இருக்கிறது. இது பற்றிய குறிப்பு வரையுங்களேன்…

(வளரும்)

கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in