

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சராசரி மாணவரது உழைப்பால் இந்திய வனப் பணி(ஐஎஸ் எஸ்) கிடைத்துள்ளது. சேலம் நகரை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி எஸ்.சரத்பாபு தற்போது ராஜஸ்தானின் பாலி மாவட்ட வனச்சரக அதிகாரியாக உள்ளார்.
சேலம் தாதாகாப்பட்டியின் ராபர்ட் ராமசாமி நகரை சேர்ந்த தம்பதி ஆர்.சிவராஜ், எஸ்.சுசிலா. அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்த இவருக்கு எஸ்.சுரேந்திரகுமார், எஸ்.சரத்பாபு மற்றும் எஸ்.இளஞ்செழியன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் நடுவரான சரத்பாபு, அருகிலுள்ள வள்ளுவர் கல்வி நிலையம் அரசு உதவிபெறும் பள்ளியில் 5 -ம் வகுப்பு வரை பயின்றார். 6 முதல் 8 வரை கோகுல விலாஸ் நடுநிலைப்பள்ளியில் தொடர்ந்தார். பிறகு பிளஸ்2 வரை சேலம் கோட்டை பகுதியிலுள்ள முனிசிபல் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். மருத்துவம் பயிலவேண்டி, பிளஸ் 2-ல் அறிவியல் பிரிவை தேர்வு செய்தார்.
எட்டும்வரை விடாமுயற்சி: இந்நிலையில், மதுரை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் பிஎஸ்சி மருந்தியல் படித்து 2000-ல்முடித்தார். அதையடுத்து, எம்எஸ்சி., தாவர நோயியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள உத்தராகண்டின் ஜி.பி.பந்த் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்தார்.
முதுநிலை பட்டத்துக்கான நுழைவுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதால் உதவித் தொகையும் கிடைத்தது. தொடர்ந்து முனைவர் பட்டத்துக்கான நுழைவுத்தேர்வு எழுத, டெல்லியிலுள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்(ஐஏஆர்ஐ) பிஎச்.டி.. படிக்கும் வாய்ப்பும் கனிந்தது.
இங்குதான் சரத்பாபுவிற்கு குடிமைப் பணிக்கான யூபிஎஸ்சி தேர்வு அறிமுக மானது. இந்த வளாகத்தில் படித்து வந்த பல துறை மாணவர்கள் யூபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் வழக்கம் உள்ளது. இதனால் ஈர்க் கப்பட்டு சரத்பாபு, 2004-ல் யூபிஎஸ்சி-க்கு முயல ஆரம்பித்தார். 2011 வரை பலமுறை யூபிஎஸ்சி தேர்வு எழுதினார்.
இவற்றில், பிரிலிம்ஸ் எனும் முதல்நிலை மட்டும் எட்டு முறை தாண்டினாலும், மெயின்ஸ் தேர்வில் இரண்டு முறை மட்டுமே வெற்றி கிடைத்தது. எனவே, கடைசி இரண்டு முயற்சியில் ஐஎப்எஸ் தேர்வும் எழுத முடிவு செய்துள்ளார். இந்த இரண்டிற்கும் முதல்நிலை பொதுவானது. இதன் இறுதி முயற்சியில், ஐஎப்எஸ் பெற்ற சரத்பாபு, 2012 பேட்ச்சின் ராஜஸ்தான் மாநில அதிகாரியானார்.
இது குறித்து அதிகாரி சரத்பாபு கூறும்போது, “பள்ளி நாட்களில் சராசரி மாணவராகவே இருந்தேன். 10-ம் வகுப்பில் 500க்கு 295 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன. பிளஸ்2 வரை தமிழ்வழியில் பயின்றதால் பிஎஸ்சியின் ஆங்கிலவழிக் கல்வி என்பது மிகவும் சிரமமாக இருந்தது. என்னைபோல், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறும் பெரும்பாலோருக்கு இந்த சிக்கல் உள்ளது.
எனினும், இப்பிரச்சனையை சில மாதங்கள் கூடுதலாக உழைத்தால் எளிதில் கடந்துவிடலாம் என சீனியர்கள் கூறியது உண்மையாக இருந்தது. உயர்நிலைக் கல்வியிலும் சராசரியாக பயின்றாலும் நுழைவுத் தேர்வுகளிலும், போட்டித்தேர்வுகளிலும் கடும் முயற்சி வெற்றியை தந்தது. இடையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளும், யூபிஎஸ்சியின் சி-சாட் முறை யிலான மாற்றத்தாலும் ஐஎப்எஸ் வெற்றிக்கு தாமதமானது” எனத் தெரிவித்தார்.
படிப்பில் சுமாரென்றாலும் வெல்லலாம்: இதனிடையே, 2007-ல் முனைவர் பட்டத்தை முடித்த சரத்பாபுவிற்கு நாகாலாந் தின் ஸ்கூல் ஆப் அக்ரிகல்சர் சயின்ஸ் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் நிறுவனத் தில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. அடுத்த வருடம், இந்திய உணவுக் கழகத்தின் போட்டித்தேர்வில் வென்று டெல்லி கிளையின் மேலாளரானார்.
பிறகு மீண்டும் போட்டித்தேர்வில் இந்திய வேளாண் ஆய்வுக்கவுன்சிலுக்கு எழுதியவர், வேளாண் விஞ்ஞானி பதவியை 2010-ல் பெற்றார். இப்பணியில், கர்நாடகாவின் விட்டலில் இருந்த போதும் சரத்பாபு தன் யூபிஎஸ்சிக்கான முயற்சியை கைவிடவில்லை.
புதிய மாற்றம்: இவற்றை அதிகாரி சரத்பாபு நினைவு கூருகையில், “சூழலுக்கு ஏற்ற மாதிரி எனது திட்டங்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். ஐஎப்எஸ் பெற்ற பின்பும் ஐஏஎஸ் பெறுவதற்காக ஒருமுறை யூபிஎஸ்சி தேர்வு எழுதினேன். முனைவர் பட்டத்திற்கான ஆய்வின் போது, டெல்லியின் வாஜிராம் பயிற்சி நிலையத்தில் மட்டும் 6 மாத காலம் மாலைநேர வகுப்புகள் சென்று வந்தேன். பள்ளி முதல் சிறந்த மதிப்பெண் பெறுவது மட்டுமே போட்டித்தேர்வுகளில் வெல்ல அடிப்படை அல்ல. இந்த முயற்சியில் எனது சீனியரான சசிகுமார் ஐஎப்எஸ் வழிகாட்டியது மிகவும் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
தனது வனப்பணி பயிற்சிக்கு பின் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்ட உதவி வன அதிகாரியாக இருந்தார். அடுத்து, பதவி உயர்வு பெற்று மாவட்ட வன அதிகாரியாக டுங்கர்பூரிலும் பிறகு கங்காநக ரிலும் பணி செய்தவர், தற்போது பாலியில் பணியாற்றி வருகிறார். படிப்பில் சிறந்தமாணவர்களால்தான் உயரிய போட்டித்தேர் வான யூபிஎஸ்சியை வெல்ல முடியும் எனும் கருத்து தவறானது என நிரூபித்திருக்கிறார் ஐஎப்எஸ் அதிகாரி எஸ்.சரத்பாபு
- கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in