

ஊடகங்களில் ஒலி ஊடகத்திற்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. இந்த ஊடகத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பணியை செய்து கொண்டே எந்த நிகழ்ச்சியையும் கேட்க முடியும்.
அரசு வானொலி, தனியார் துறை பண்பலை வானொலி, சமுதாய வானொலி, வெளிநாட்டுச் சிற்றலை வானொலி, சமயம் சார்ந்த வானொலி என வானொலிகள் பல வகைப்படும்.
இவை அனைத்தும் முறையே பண்பலை, மத்திய அலை, சிற்றலை, டிஜிட்டல் வானொலி, செயற்கைக்கோள் வானொலி, இணைய வானொலி, கைப்பேசி ஊடாக உள்ள செயலி வானொலி என பல்வேறு வகைகளில் ஒலிபரப்புகளைச் செய்து வருகின்றன.
சமுதாய வானொலி என்றால் என்ன? - சமூக வானொலி என்பது வணிக மற்றும் பொதுச் சேவை ஒலிபரப்பிலிருந்து வேறுபட்டது. சமுதாய வானொலி நிலையங்கள் பொது மக்களுக்கு சேவை செய்கின்றன. உள்ளூர் மற்றும் குறிப்பிட்ட நேயர்களுக்குப் பொருத்தமான உள்ளடக்கத்தை அவை ஒலிபரப்புகின்றன, ஆனால், பெரும்பாலும் வெகுஜன-ஊடக ஒலிபரப்பாளர்களால் இவை கவனிக்கப்படுவதில்லை.
சமுதாய வானொலி பொதுவாக லாப நோக்கமற்றவை மற்றும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் சொந்தக் கதைகளைச் சொல்லவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
உலகின் பல பகுதிகளில், சமுதாய வானொலி, சமூகம் மற்றும் தன்னார்வத் துறை, சிவில் சமூகம், ஏஜென்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் சமூக மேம்பாட்டு நோக்கங்களுக்காகக் கூட்டாக இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது. பிரான்ஸ், அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து போன்ற பல நாடுகளில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சமுதாய வானொலி ஒரு தனித்துவமான ஒலிபரப்புத் துறையாக உள்ளது.
இந்தியாவில் சமுதாய வனொலி: இந்தியாவில் சமுதாய வனொலி, கல்விக்காக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இதனை கல்வி நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நடத்துவதற்குத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்குகிறது.
40-க்கும் மேற்பட்ட சமுதாய வானொலிகளை கொண்டு, தேசிய அளவில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களில் ஒருகாலத்தில் இருந்தது. அதில் தற்பொழுது 18 வானொலிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிக சமுதாய வானொலிகளை கொண்ட நகரமாகச் சென்னை உள்ளது. இங்கு அண்ணா எஃப்.எம், எம்.ஓ.பி. எஃப் எம், லயோலா எஃப்.எம். மற்றும் முத்துச்சரம் எஃப்.எம். ஆகியவற்றைக் கூறலாம்.
(சமுதாய வானொலி உலா தொடரும்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com