நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 27: தூங்கும்போது எப்படி பணம் சம்பாதிப்பது?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 27: தூங்கும்போது எப்படி பணம் சம்பாதிப்பது?
Updated on
2 min read

“நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்க ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரையில் வேலை செய்து கொண்டே இருப்பீர்கள்" ‍என்கிறார் முதலீட்டாளர்களின் குரு வாரன் பஃபெட். வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை உரிய முறையில் முதலீடு செய்தால், நாம் தூங்கி கொண்டிருந்தாலும் அந்த பணம் உங்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கும்.

நீங்கள் ஓய்வெடுத்தாலும் பணம் வந்துக்கொண்டே இருக்கும். பணத்தை உங்களுக்காக வேலை செய்ய; லாபத்தை சம்பாதித்து தர; சரியான வழியை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் கோடீஸ்வரன்!

பணத்தை சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். உண்டியலில் சேமிக்கும் பணம் ஒரு போதும் வளராது. வங்கியில் சேமித்தால் 5%-க்கும் குறைவான வட்டி கிடைக்கும். தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு, வருங்கால பொது வைப்பு, அஞ்சலக திட்டங்கள் ஆகியவற்றில் சேமித்தால் அதிகபட்சம் 8% வரை வட்டி கிடைக்கும்.

சேமித்தால் மட்டும் போதாது: தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்து, சேமித்தாலும் 10%-க்கும் மேல் வட்டி கிடைப்பது சந்தேகம்தான். நாட்டின் பணவீக்கம் சில்லறை விலையில் 7%-ஐ கடந்து விட்டது. மொத்த விலையில் 10%-வும் கடந்து போய் கொண்டிருக்கிறது. பண வீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், எதிர்க்கால திட்டங்களுக்கு வங்கி சேமிப்பை மட்டும் கொண்டிருந்தால் உங்களுக்கு இழப்பே மிஞ்சும்.

நம்முடைய பணத்தின் மதிப்பை அதிகரிப்பதற்கு தடையாக இருப்பது பண வீக்கம். எனவே பண வீக்க‌த்தை வீழ்த்தக் கூடிய முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களுக்காக வேலை செய்து, அதற்கு வட்டியை பெருக்க வேண்டும். அந்த வட்டி, குட்டி போட்டு முதலீட்டை பன்மடங்காக அதிகரிக்க‌ வேண்டும். இத்தகைய முதலீட்டை எப்போதும் ஒரே இடத்தில் குவிக்கக் கூடாது. பங்கு சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள் உட்பட பன்முகங்கள் கொண்ட முதலீடாக மாற்ற‌ வேண்டும்.

கூட்டு வட்டியின் முக்கியத்துவம்: பண‌த்தை பெருக்குவதற்கான பிரம்மசூத்திரம் கூட்டு வட்டியில்தான் இருக்கிறது. நாம் முதலீடு செய்யும் முதலுக்கு முதலில்வட்டி. பின்னர் அந்த வட்டிக்கும் ஆண்டுதோறும் வட்டி கிடைப்பதுதான் கூட்டு வட்டி. நீண்ட கால முதலீட்டில் இந்த கூட்டு வட்டி பெரிய அளவிலான பலனை தரும். நல்லதொரு பரஸ்பர நிதியில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்து வந்தால் 35 ஆண்டு காலத்தில் அது கோடி ரூபாய்க்கும் அதிகமாக மாறி இருக்கும்.

இத்தகைய பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போது வட்டியை எடுத்து செலவிட கூடாது. ஆரம்ப முதலீட்டின் மூலம் சம்பாதித்த வட்டியை மீண்டும் அதே திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களின் பணம் பெருகும். அதை மீண்டும் முதலீடு செய்யும்போது உங்களின் பணம் கூடுதல் வருமானத்தை சம்பாதிக்கும். இதனை தொடர்ந்து செய்தால் மலை உச்சியில் துளியாக புறப்பட்ட பனித்துளி, உருண்டு அடிவாரத்தை அடையும்போது பெரிய பந்தாக மாறி இருக்கும். இதனையே "ஸ்னோ பால் விளைவு'' என முதலீட்டு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முதலீட்டின் கூறுகள்: முதலீட்டில் குறுகிய கால, இடைக் கால, நீண்ட கால திட்டங்கள் இருக்கின்றன. எந்த முதலீடாக இருந்தாலும் அதனை தொடங்குவதற்கு முன்பு உறுதியான குறிக்கோள் இருக்க வேண்டும். எதற்காக பணம் தேவை? எப்போது தேவை? என தெளிவாக திட்டமிட வேண்டும். குழந்தையின் படிப்பு, திருமணம், ஓய்வு காலம் ஆகியவற்றுக்காக திட்டமிட வேண்டும்.

பங்கு சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரம் ஆகியவற்றில் வயதுக்கு ஏற்றவாறு முதலீட்டு விகிதாசாரத்தை வடிவமைக்க வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க ரிஸ்க்கான முதலீடுகளை தவிர்க்க வேண்டும். குறுகிய கால முதலீட்டில் பணத்தின் பாதுகாப்பு தன்மை மிகவும் முக்கியம். பணத்தை இழக்காமல் இருப்பதற்கான திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் பணம் வளரும் விகிதம் மிகவும் அதிகமாக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை.

இடைக்கால முதலீட்டிலும் பணத்தின் பாதுகாப்புப்புத்தன்மையும், வளரும் விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும். பணத்தை இழக்கும் அபாயமும் குறைவாக இருத்தல் அவசியம். நீண்ட கால முதலீட்டில் பணத்தின் வளரும் விகிதம் மிகவும் முக்கியம். பணத்தை இழக்கும் அபாயத்தை நீங்கள் விரும்பவில்லை என்றால் பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளை தவிர்க்க வேண்டும்.‌

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in