

பொதுவாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் நெஞ்செரிச்சல் மற்றும் உணவு எதுக்களித்தல் எனும் தொண்டையில் உணரப்படும் புளிப்பான அமிலச்சுவை ஆகியவற்றை கெர்ட் நோயின் முதல் அறிகுறிகள் எனலாம். அத்துடன் தொடர்ந்து வரும் வாந்தி, ஏப்பம், விக்கல், தொண்டை வலி, வறட்டு இருமல், குரல் கரகரப்பு, விழுங்குவதில் சிரமம் இவை அனைத்துக்கும் மேலாக, தூக்கமின்மையால் அவதி என நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் மற்றவையும்கூட இந்த கெர்ட் நோயின் மற்ற அறிகுறிகள்தான்.
அதிக உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியம் என வயது கூடியவர்களில் மட்டுமே இதுவரை காணப்பட்டு வந்தது கெர்ட் நோய். ஆனால், சமீபகாலமாக பதின்பருவத்தினரிடையேயும் குழந்தைகளிடையேயும் அதிகரித்து வருகிறது. மாறிவரும் நமது வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் இரைப்பை மற்றும் குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள்.
தற்போது குழந்தைகளிடையே காணப்படும் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், அவர்கள் உட்கொள்ளும் அதிகப்படியான காரம் அல்லது மசாலா நிறைந்த உணவுகள், பரீட்சை நேரத்தில் அதிகப்படி பருகும் கேஃபைன் நிறைந்த காபி அல்லது டீ போன்றவற்றுடன் உடற்பயிற்சியின்மையும் சேரும்போது, எளிதாக கெர்ட் நோய் சிறுவயதிலும் ஏற்படுகிறது. ஒரு சோடா குடித்தால் சரியாகிவிடும் என்பதுபோல பார்க்க சாதாரணமாகத் தோன்றும் இந்த நோய் பின்னாளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இன்னும் பெரியது என்று எச்சரிக்கின்றனர்.
உடலுக்குள் இருக்கும் அமிலம்: இரைப்பையின் அமிலம் எதுக்களிப்பானது உள்ளே திரும்பாமல் உணவுக்குழாயிலேயே நாள்பட தேங்கி நிற்கும்போது, உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சி Barrett's Burnout என்று அழைக்கப்படுகிறது. இது பின்னாளில் உணவுக்குழாய் சுருக்கம் (Stricture) அல்லது உணவுக்குழாய் புற்றுநோயாகக் கூட மாறும் அபாயம் உள்ளது. உண்மையில் நம்மிடையே பலருக்கும் மேற்சொன்ன கெர்ட் அறிகுறிகள் எதுவுமின்றியும் இந்த அமிலப் பின்னோட்ட நோய் உணவுக்குழாய் அழற்சியைத் தொடர்ந்து ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, உணவுக்குழாயில் அதிகரிக்கும் அமிலம் மூச்சுக்குழாய்களிலும் ரசாயன பாதிப்பை ஏற்படுத்துவதால் ஆஸ்துமா, அலர்ஜி, நுரையீரல் அழற்சி, நிமோனியா போன்ற சுவாச பாதிப்புகளையும் இது ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆக, வினிதா உட்பட நம் அனைவருக்கும், இந்த கெர்ட் எனும் சாதாரண நோய், ஒரு கெட்ட நோயாக மாறாமலிருக்க நாம் நமது அன்றாட நிகழ்வுகளில் சிறுசிறு மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால் மட்டும் மருந்துகளும் அல்லது மிகத் தேவைப்பட்டால் மட்டும் அறுவை சிகிச்சையும் இதில் பரிந்துரைக்கப்படுகிறது.
எளிய தீர்வு உண்டு: நாம் உட்கொள்ளும் உணவை, குறைந்த அளவு, சிறிய இடைவெளிகளில் உட்கொள்வதும், நார்ச்சத்து மற்றும் நீர்த்தன்மை நிறைந்த இயற்கை உணவுகளை உட்கொள்வதும், இந்த ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டும் உணவுகளான எண்ணெய் பதார்த்தங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மசாலா உணவுகள், காபி, கார்பனேடட் குளிர்பானங்களைத் தவிர்ப்பதும், உணவு உட்கொண்ட உடனேயே உறங்கச் செல்லாமல் இரவு உணவை நேரத்திலேயே முடித்துக் கொள்வதும், எளிய உடற்பயிற்சிகள் செய்வதும், குறைந்தது எட்டு மணிநேரம் உறங்குவதை பழக்கமாக்கிக் கொள்வதும் என வாழ்க்கை முறையில் செய்யும் எளிய மாற்றங்கள் இதில் நிச்சயம் பலனளிக்கும். பிற்காலத்தில் வரக் கூடிய நோய்களையும் தவிர்க்கச் செய்துவிடும் என்பதே உண்மை.
இதையே,
"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு"
அதாவது, உடம்பிற்கு ஒவ்வாத உணவு வகைகளை விலக்கி உண்டோமேயானால், நம் உயிருக்கு நோயால் வரும் துன்பம் இல்லை என்றார் வள்ளுவர். ஆம், சரியான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் உறக்கம் மட்டுமே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான விதைகள்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com