கையருகே கிரீடம் - 28: ஹோவர்கிராப்ட் விமானியாவது எப்படி?

கையருகே கிரீடம் - 28: ஹோவர்கிராப்ட் விமானியாவது எப்படி?
Updated on
1 min read

நீரிலும் நிலத்திலும் சேற்றிலும் பனிப்படிவுகளிலும் பயணிக்கும் ஒரே வாகனம் ஹோவர்கிராப்ட் (Hover craft). நீரில் படகை விட வேகமாக செல்லக்கூடியது ஹோவர்கிராப்ட். தமிழில் இதை மிதவை வாகனம் எனக் குறிப்பிடலாம்.

மிதவை வாகனத்தின் கீழ்ப்பாகத்தை சுற்றிலும் திரை (Skirt)அமைக்கப்பட்டிருக்கும். என்சினை இயக்கும் போது அழுத்தமேற்றப்பட்ட காற்று மிதவை வாகனத்தின் அடிப்பகுதியில் நிரப்பப்படும். வளிமண்டலக் காற்றை விட சற்று அதிக அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்டிருப்பதால், வாகனம் தரைப்பரப்பிலிருந்து அல்லது நீர்பரப்பிலிருந்து உயர்த்தப்பட்டு மிதக்கும்.

இதனால் இந்த வாகனம் காற்று மெத்தை (Air Cushion Vehicle) வாகனம் என்றும் அழைக்கப்படுகிறது. திரையின் அடிப்பக்க விளிம்பிலிருந்து தொடர்ந்து காற்று வெளியேறும். என்சின் தொடர்ந்து அழுத்தப்பட்ட காற்றை செலுத்துவதால் வாகனம் தொடர்ந்து மிதந்தபடியிருக்கும்.

சரி, மிதக்கும் வாகனத்தை எப்படி முன்னோக்கி நகர்த்துவது? அதற்காக மிதவை வாகனத்தின் பின்புறத்தில் ராட்சச விசிறிகள் இருக்கும். இந்த விசிறிகள் காற்றை பின்னோக்கி வீசுவதால், வாகனம் முன்னோக்கி நகரும். இடவலம் திருப்புவது எப்படி? விசிறிகளுக்கு பின்னால் சுக்கான்(Rudder) பொருத்தப்பட்டிருக்கும். இதன்அலகுகளை (Blades) இடவலமாக திருப்பலாம். சுக்கானின் இயக்கத்தினால் மிதவை வாகனத்தை இடவலமாக திருப்பலாம்.

விமானியாவது எப்படி? - இந்தியாவில் கடலோரக்காவல் படை, ‘ஹோவர்கிராப்ட்' வாகனங்களின் மூலம் கடலோரப் பகுதிகளில்சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கிறது. ஹோவர்கிராப்ட் விமானிவதற்கு ‘இந்திய கடலோரக் காவல்படை’யில் (Indian Coast Guard) சேர வேண்டும்.

கல்வித்தகுதி - பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்து பின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள், உதவி கமாண்டன்ட் (Assistant Commandant) ஆக கடலோரக் காவல்படையில் சேரத்தகுதியானவர்கள். இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 20 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.

தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு, முதனிலைத் தேர்வு, இறுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை என நான்கு நிலைகளில் நடைபெறும் தேர்வில் வெற்றிப்பெறுவர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி: கேரளாவின் எழிமலா பகுதியிலுள்ள இந்தியக் கடற்ப்படை பயிற்சிப்பள்ளியில் (Indian Naval Academy) 22 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஹோவர்கிராப்ட் பயிற்சி கடலோரக்காவல் படையில் வழங்கப்படும்.

இந்தத் தேர்வை இந்தியக் கடலோரக்காவல்படை நடத்துகிறது. ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு joinindiancoastguard.cdac.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

ஹோவர்கிராப்ட் எனும் மிதவை வாகனம் இயக்கி நாட்டின் கடலோரப்பகுதிகளை காவல் செய்ய வாழ்த்துகள்!

(தொடரும்)

கட்டுரையாளர், ‘போர்ப்பறவைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in