

‘‘ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தவங்க வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்… அங்கே வந்த காக்கா ஒன்னு…” இப்படித் தொடங்கும் ’பாட்டி வடை சுட்ட கதை’யை எல்லோருமே கேட்டிருப்போம். இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இந்தக் கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது எப்படி?
நமக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குக் கதைகள் கேட்பதுதான். இரவு நேரத்தில்கதை கேட்டுக் கொண்டே தூங்கியிருப்போம். கதைகள் என்றாலே பழங்காலத்தில் சொல்லப்பட்டவை என்று பலரும் நினைக்கின்றனர். அப்படியென்றால், அந்தக் கதைகள் எங்கிருந்து வந்தன?
பாட்டி வடை சுட்ட கதையை எனக்குச் சொன்னது என் பாட்டி. அவருக்கு அவரின் பாட்டியோ தாத்தாவோ சொல்லியிருக்கலாம். இப்படித்தான் பல தலைமுறைகள் தாண்டியும் அந்தக் கதை சொல்லப்படுகிறது. ஆனாலும், ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவர்தானே முதன்முதலாகச் சொல்லியிருப்பார்? அவரின் யோசனையில் உதித்த கதைதானே இது?
அவரால் மட்டும் எப்படி ஒரு கதையை உருவாக்க முடிந்தது? அவர் தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்திருப்பார். தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கியதே அக்கதை.
அந்தக் கல் எங்கிருந்து வந்தது?
அப்படி என்றால், அவரைப் போல நாமும்புதிய கதைகளை உருவாக்கலாமே என்ற எண்ணம் வருகிறதா? ஆனாலும், சிலருக்கு என்னால் கதை எழுத முடியுமா என்ற சந்தேகம் இன்னும் இருக்கும். அந்தச் சந்தேகம்தான் புதிய கதைகளை உருவாக்கப் போகிறது. எப்படித் தெரியுமா?
’கொடைக்கானல் அருகே சாலையின் குறுக்கே பெரிய கல் ஒன்று உருண்டு வந்தது’ என்று செய்தித்தாளில் படிக்கிறீர்கள். பல செய்திகளில் இதுவும் ஒன்று என மற்றவர்கள் கடந்து விடுவார்கள். நீங்களோ, ‘அந்தக் கல் எங்கிருந்து வந்திருக்கும், அந்த ஊருக்கு அருகில் மலை இருக்கிறதா, அந்தக் கல் உருண்டு வரும்போது குறுக்கே விலங்குகள் அடிபட்டதா, இப்போது அந்தக் கல் எங்கேஇருக்கிறது போன்ற கேள்விகளை எழுப்புவீர்கள். அந்தக் கல்லைப் பற்றித் தெரிந்து கொண்டு, அழகான கதையாக எழுதுவீர்கள்.
பெரிய கல் ஒன்று மலை உச்சியில் பல ஆண்டுக் காலமாக இருந்ததாம். கன மழை பெய்தபோதும், வேகமான புயல் வீசியபோதும் அந்தக் கல் நகரவே இல்லையாம். ஏன் தெரியுமா?
செய்தி கதையானது! - அத்தனை உயரத்தில் இருந்து அந்த ஊரைப் பார்ப்பதற்கு அந்தக் கல்லுக்குப் பிடிக்குமாம். யார் யார் என்ன செய்கிறார்கள் பிள்ளைகள் எங்கே விளையாடுகிறார்கள் என்று வேடிக்கைப் பார்ப்பது என்றால் அவ்வளவு பிடிக்குமாம். ஒருநாள், கீழே உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அதன் அருகில்தான் சிறுவர்கள் விளையாடும் மைதானம் இருக்கிறது. ஒருநாள் ஒரு சிறுவன் அந்தப் பள்ளத்தில் விழுந்து விட்டான். நல்லவேளை அவனைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால், அந்தப் பள்ளத்தை யாரும் மூடவே இல்லை. அதனால், அந்தக் கல் தானாகவே மெது மெதுவாக உருண்டு வந்து சாலையில் உள்ள அந்தப் பள்ளத்தில் விழுந்து மூடியது. இனிமேல் பிள்ளைகள் பயமின்றி விளையாடலாம்.
ஒரு செய்தி அழகான கதையாக மாறிவிட்டது அல்லவா? நம்மாலும் கதை எழுதலாம் என்ற நம்பிக்கை வருகிறதா? நீங்கள் கதாசிரியராக மாறுவதற்கு இந்தத் தொடர் நிச்சயம் உதவும். என்ன தயாரா?
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு:vishnupuramsaravanan@gmail.com