மகத்தான மருத்துவர்கள் - 26: அனைவருக்கும் பார்வை, அனைவருக்கும் வெளிச்சம்!

மகத்தான மருத்துவர்கள் - 26: அனைவருக்கும் பார்வை, அனைவருக்கும் வெளிச்சம்!
Updated on
2 min read

அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்ற டாக்டர் வி, அதற்குப் பின் புதியதொரு தொடக்கத்திற்கான விதையை விதைத்தார். 1976-ல் தனது பிரியமான அரவிந்தர் பெயரில் 11 படுக்கை வசதி கொண்ட அரவிந்த் கண் மருத்துவமனையை மதுரையில் தொடங்கினார் டாக்டர் வி. நான்கு உதவி மருத்துவர்களாக தனது சகோதர சகோதரிகளை நியமித்து, ஒரு சில செவிலியர்களுடன் அவர் தொடங்கிய அந்த மருத்துவமனையின் அன்றைய நோக்கம் கண் புரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வையை மீட்டுத் தருவதாகத்தான் இருந்தது.

பத்து நிமிட அறுவைசிகிச்சை, பிறகு பத்து நாட்கள் ஓய்வு. அவ்வளவுதான். அதனால் கண்பார்வையை இழக்க இருந்தஒருவர் வாழ்நாள் முழுதும் வெளிச்சம் பெறுகிறார் என்றால் அதை நாம் செய்யத்தானே வேண்டும்? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட டாக்டர் வி, தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அதற்காகவே செலவிட்டார். பணம் உள்ளவர்களுக்கு செய்யும் சிகிச்சையில் பெற்ற பணத்தை ஏழைகளுக்கு இலவசமாக செய்யத் தொடங்கினார். அப்படி எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வந்த எண்ணற்ற வயோதிகர்களின் பார்வையை இலவசமாக மீட்டுத்தந்து, அவர்கள் வாழ்வாதாரத்தையும் மீட்டுத் தந்தார்.

அரவிந்த் மாடல்: "அனைவருக்கும் பார்வை, அனைவருக்கும் வெளிச்சம். இந்தக் கூரையின் கீழ்எல்லோரும் ஒன்றுதான்" என்ற அவரது இரு தாரக மந்திரங்களைச் சிரமேற்று இன்றும் செயல்பட்டு வரும் அவரது அரவிந்த் கண் மருத்துவமனை, நூற்றுக்கணக்கான கிளைகள் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் துயரை நீக்கி வருகிறது.

இன்றும் உலகளவில் மிக அதிகமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஒரே நிறுவனம் அரவிந்த் மருத்துவமனைதான். அதைவிட தனது கால் பங்கு நோயாளிகளிடம் கட்டணம் வாங்கி முக்கால் பங்கு நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் ‘அரவிந்த் மாடல்' உத்தியை வியந்த அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர்கள் மருத்துவமனை செயல்படும் முறையை ‘Community Ophthalmology' என்று கொண்டாடுகிறது.

அதாவது, தனது வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்திலேயே மற்றவர்களுக்கு இலவச சிகிச்சை செய்கிறது. மறுபுறம் வேறு எங்கும் நிதியுதவி பெறாமல், தனது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தாமே போதிய பயிற்சிகளை அளித்து, அவர்கள் மூலம் வரும் வருமானத்தையே அவர்களுக்கு ஊதியமாக அளிக்கிறது. இதன் மூலம் தமது செயல்கள் மூலமே தன்னிறைவு அடைவதையே ‘அரவிந்த் மாடல்' என்கிறது இந்த ஆய்வு.

அரசு அங்கீகாரம்: "அனைவருக்கும் பார்வை" என்ற சமுதாய நோக்கில், டாக்டர் வி மற்றும் அரவிந்த் குழுமம் அடுத்து எடுத்தது கண் புரை நோய்க்குப் பொருத்தப்படும் லென்ஸ் தயாரிப்பை. ‘ஆரோ லேப்ஸ்' எனும் அரவிந்த் கண் மருத்துவமனையில் தயாரிக்கப்படும் கண் சிகிச்சைக்கான லென்ஸ்களை (Intra ocular lens) துல்லியமாகவும் விலை குறைவாகவும் இருப்பதைக் கவனித்த தமிழக அரசு 1992-ல்அவர்களது தயாரிப்பை அங்கீகாரம் செய்தது. அதுவரை இறக்குமதி செய்து வந்த நமது தேசம், தற்போது அரவிந்த் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கும் ஏழு லட்சம் லென்ஸ்களில் தனது தேவை போக, 60-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

வேர்களை விட்டு விலகாதே - "கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, இந்த கிராமப்புற மக்கள் தான் தூண்டுகோலாக விளங்குகின்றனர். அவர்களுடன் பேசும்போது, அவர்களது மனதிற்கு மிக நெருக்கமானவனாக மாறிவிடுகிறேன் என்றாலும், அவர்களை குணமடையச் செய்யும்போது மனதளவில் நானும் குணமடைகிறேன் என்பதே உண்மை" என்று எப்போதும் கூறி வந்த டாக்டர் வெங்கடசாமி, தனது சமுதாயப் பணிகள் தாண்டி பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

அவரது பல்வேறு பணிகளுக்காக 1973-ல் இந்தியாவின் உயரிய பத்ம விருது, 1985ல் சிகாகோவின் டாக்டர் பட்டம், 1987 ஆம் ஆண்டு ஹெலன் கெல்லர் சர்வதேச பார்வை இழப்பு தடுப்பு விருது என விருதுகளால் அவரது வாழ்க்கை நிறைந்தபோதும், தனது அடுத்த தலைமுறைக்கு அவர் விட்டுச் சென்றது, "சேவையால் நீ எவ்வளவு உயரம் போனாலும், வேர்களை விட்டு விலகாதே" எனும் ஒரே செய்தியைத்தான்.

2006, ஜூலை 7 அன்று உடல்நலக் குறைவால் 88 வயதில் தனது கண்களை மூடினார் பலருக்கும் கண்ணாக, ஒளியாக விளங்கிய டாக்டர் வி எனும் வெங்கடசாமி. அவரது நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி, கூகுள் தனது முகப்பில் 2018-ல் அவரது புகைப்படத்தை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

(மகிமை தொடரும்)

கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in