

கரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. சரிவர சாப்பிடாத, வேலைக்குச் சென்ற, குடும்பத்தினர் அல்லது உறவினரை இழந்த, வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். இயல்பான விளையாட்டுகள் ஏதும் அவர்களிடம் இல்லை.
ஆசிரியர் சிவா, இறுக்கமான சூழலை உடைப்பதற்காக மாணவர்களுக்கு கதைகள் சொன்னார். பயனேதும் இல்லை. மறுநாள், “உங்கள் மனதில் உள்ளதை ஓவியமாக வரையுங்கள்” என்றார்.
ஆர்வமாக வரைந்தார்கள். “ஓவியத்தை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்” என்றார். சொன்னார்கள். ஒவ்வோர் ஓவியமும் மாணவர்களின் கரோனா கால துயரத்தையும், மறுபுறம் எதிர்காலம் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விவரித்தது. மாணவர்கள் முகத்தில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது. Art Therapy குறித்து ஆசிரியர் கூடுதலாக வாசிக்கத் தொடங்கினார். அப்போது, முகமது அல் ஜோன்டே பற்றியும் வாசித்தார்.
அகதியாக்கிய போர்: சிரியா நாட்டில் 2001-ல் பிறந்தார் முகமது. அம்மா கணித ஆசிரியராக இருந்ததால் கணிதத்தின் மீது ஆர்வம் உண்டானது. திரைப்படங்கள், புத்தகங்கள் வழியாக ஆங்கிலமும், புகைப்படக்கலையும் கற்றார்.
திடீரென சிரியாவில் உள்நாட்டு கலவரம் மூண்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் முகமதுவின் ஊருக்கு மக்கள் அகதிகளாக வந்தார்கள். குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். உதவி செய்ய தொண்டு நிறுவனங்களும் வந்தன.
அக்குழுவினரை முகமது சந்தித்து தன்னாலான உதவிகளைச் செய்தார். சில மாதங்களில், உள்நாட்டுக் கலவரம் முகமதுவின் ஊரிலும் பரவியது. அம்மாவை இரண்டுமுறை கைது செய்தார்கள். உயிருக்கும் அச்சுறுத்தல் நிலவியது. எனவே, சிரியாவை விட்டு அகதிகளாக லெபனான் சென்றார்கள். புலம்பெயர்ந்த லட்சக்கணக்கானவர்களை அங்கே கண்டார்கள்.
அகதிகளாக வந்தவர்களுக்கு லெபனானில் வேலை கிடைக்கவில்லை. குடும்பத்துக்காக, தந்தை மட்டும் படகேறி கிரேக்கம் வழியாக ஸ்வீடன் சென்றார். அம்மா, சகோதரியுடன் வறுமையிலும் தனிமையிலும் நாட்களைக் கடத்தினார் முகமது. சாப்பாட்டுக்கே வழியில்லை. மனதெல்லாம் போரின் வடு. பள்ளிக்கூடம் செல்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனாலும், துயரத்தை வெற்றிகொள்ளும் தீரம் முகமதுவிடம் இருந்தது.
கல்வியெனும் விடிவெள்ளி:
சிரியாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அகதிகளாக இருக்கிறார்கள். போர் நிற்குமா என்பது தெரியாது. போருக்குப் பின்னால் உள்ள அரசியலில் கவனம் செலுத்த விரும்பவில்லை. தான் வாழும் பகுதியை நல்ல நிலைக்கு முன்னேற்ற என்ன செய்யலாம் என்று முகமது யோசித்தார். 12 வயதில் மாணவர்களுக்காக ஒரு கொட்டகையில் பள்ளிக்கூடம் தொடங்கினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். குடும்பத்தை, நண்பர்களை இழந்தவர்கள். தாங்கள் ஓடி விளையாடிய ஊர், வீடு, நண்பர்கள் மற்றும் பள்ளிக்கூடத்தைப் பிரிந்தவர்கள். பலரின் தாயும் தந்தையும் ஆளுக்கொரு நாட்டில் இருக்கிறார்கள். ஆழ்மனதில் குடிகொண்டுள்ள பேரதிர்ச்சியை இறக்கி வைக்க குழந்தைகளுக்கு வழியில்லை. பேசினாலும், எல்லாராலும் சொல்ல இயலவில்லை.
முகமது யோசித்தார். செயல்முறை கருத்தமர்வுகள் நடத்தினார். புகைப்படக்கலை (Photography) மற்றும் ஓவியம் கற்றுக் கொடுத்தார். “உங்களின் அன்றாட நிகழ்வுகளை படம் எடுத்து வையுங்கள்” என்று ஊக்கமூட்டினார். குழந்தைகள் தங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, துயரங்களை ஓவியங்களாக வரைந்தார்கள். மனதுக்குள் அமிழ்ந்திருந்த துயர அனுபவங்களைப் படங்களாகப் பகிர்ந்து மனம் இலகுவானார்கள்.
முகமது தொடங்கிய பள்ளியில் தற்போது 200 மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். முகமதுவுக்கு, 2017-ம் ஆண்டு, சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது கிடைத்தது.
“அகதியான குழந்தைகள், ஆற்றல் மிக்கவர்கள். எதையும் தாங்கும் வல்லமை உடையவர்கள். அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. படிப்பைத் தொடரவே விரும்புகிறார்கள். தங்கள் எதிர்காலத்துக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது கல்வி உரிமைக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன்” என்கிறார் முகமது.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com