

மருத்துவத் துறையில் பணிபுரிய விரும்புவோருக்கு, மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. துணை மருத்துவப் படிப்புகள் பலவற்றில் சேர்ந்தும், மருத்துவருக்கு நிகராக சேவை புரியலாம். பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவ படிப்புகள் பலவும் இதற்கு உதவுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ‘ஆப்தோமெட்ரி’.
கண் மருத்துவம் சார்ந்த ஆப்தோமெட்ரியில் சேர்ந்து படிப்பது, வேலைவாய்ப்பு மற்றும் வருமான அடிப்படையிலும் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது.
நமது உடல் உறுப்புகளில் அதிக கவனிப்பும், பராமரிப்பும் தேவையானவற்றில் கண்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே போன்று எளிதில் பாதிப்புக்கு ஆளாவதாகவும் கண்கள் உள்ளன. படிப்பது எழுதுவது மட்டுமன்றி, செல்ஃபோன், டிவி, சினிமா என நம் கண்களை எப்படியெல்லாம் படுத்தி எடுக்கிறோம்? இதனால் எழும் பார்வைத் திறன் குறைபாடுகள், அவற்றை ஆராய்வதற்கான பரிசோதனைகள், உடலின் இதர பிரச்சினைகளால் எழும் பார்வைத் திறன் தொந்தரவுகள் என கண்களுக்கான கவனிப்பு மற்றும் பராமரிப்பு அதிகம் தேவையாகிறது
கண்ணுக்கு கண்ணான படிப்பு, பணி: மருத்துவமனைக்கு வரும் நோயாளியின் பார்வைத் திறனை பரிசோதிப்பதில் தவிர்க்க இயலாத மருத்துவப் பணியாளராக, ஒரு ஆப்தோமெட்ரிஸ்ட் உதவுகிறார். இவர் தரும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலே கண் மருத்துவர், நோயாளிக்கான சிகிச்சை முதல் மருந்துகள் வரை பரிந்துரைக்க முடியும். அதே போன்று கண் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்கான கண் பராமரிப்புக்கும் ஆப்தோமெட்ரிஸ்ட் அவசியம்.
இந்த மருத்துவமனை பணிகள் மட்டுமன்றி, சுயமாக கண் பரிசோதனை வழங்குவது, பார்வைத் திறனுக்கான கண் கண்ணாடி கடைகள் நடத்துவது போன்றவற்றிலும் ஆப்தோமெட்ரி முடித்தவர்கள் ஈடுபடுகிறார்கள். பார்வைத்திறன் சார்ந்த கண் கண்ணாடிகள் மட்டுமன்றி மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் குளிர் கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் விற்பனையிலும் ஆப்தோமெட்ரி படித்தவர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.
கண் குறித்தும் அதன் பார்வைத் திறன் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள், பார்வைத் திறன் மேம்பாட்டுக்கான கண் கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள் குறித்து படிக்க ‘ஆப்தோமெட்ரி’ படிப்புகள் உதவுகின்றன. இதில் பட்டம் பெற்றவர் ‘ஆப்தோமெட்ரிஸ்ட்’ அல்லது ‘விழித்திறன் பரிசோதகர்’ எனப்படுவார்.
டிகிரி மற்றும் டிப்ளமா படிப்புகள்: பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள், பிளஸ் 2க்குப் பிறகு B.Sc., optometry மற்றும் B.Optom., என ஆப்தோமெட்ரி பட்டப் படிப்புகளில் சேரலாம். இந்த படிப்பை வழங்கும் முன்னணி கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு வாயிலாகவும் சேர்க்கை மேற்கொள்கின்றன.
வழக்கமான கல்வி நிறுவனங்களுக்கு அப்பால் கண் மருத்துவத்தில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இந்த படிப்புகளை வழங்குகின்றன. சென்னையின் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முதல் சங்கர நேத்ராலயா வரை இதற்கு உதாரணம் ஆகும். எய்ம்ஸ் மருத்துவமனை, பிட்ஸ் பிலானி போன்றவை தேசிய அளவில் பிரபலமானவை. 4 ஆண்டுகள் கொண்ட ஆப்தோமெட்ரி பட்டப்படிப்பில் முதல் 3 ஆண்டுகள் வழக்கமான வளாக படிப்பாகவும், பின்னர் மருத்துவர்களைப் போன்று ஓராண்டு மருத்துவ வளாக பயிற்சியாகவும் அளிக்கப்படுகிறது.
பட்டப்படிப்புகள் மட்டுமின்றி டிப்ளமா படிப்பாகவும் இந்த துணை மருத்துவ படிப்பை பெறலாம். ‘ஆப்டோமெட்ரி’ மற்றும் ’ஆப்தால்மிக் அசிஸ்டண்ட்’ என்ற பெயர்களில் 2 வருட டிப்ளமா படிப்புகளை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகள் வழங்குகின்றன. கண் மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகள் மட்டுமன்றி கண் கண்ணாடிகள் மற்றும் லென்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்கள் சார்பிலும் இந்த டிப்ளமா படிப்புகள், பணி உத்திரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த துறையில் கல்வித் தகுதியுடன் கூடுதல் அனுபவமும் பெற்றோர் மருத்துவருக்கு இணையான ஊதியத்தை பெறலாம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com