

இந்தியாவில் அரசியல் அதிகாரமிக்க மாநிலம் உத்தரப் பிரதேசம். மக்கள்தொகை 20 கோடி இம்மாநிலத்தில் மட்டும் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த ஒப்பீடு நமக்கு உதவலாம்: தமிழக மக்கள் தொகை 7 கோடி; நாடாளுமன்றத் தொகுதிகள் 39.
நேபாள நாட்டுடன் சர்வதேச எல்லை கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு, வடக்கே இமயமலை, கங்கை சமவெளி; தெற்கே விந்திய மலைப் பகுதி உள்ளன. கங்கை, யமுனை, சரயு உள்ளிட்ட பல ஆறுகள் இந்த மாநிலத்தை வளமாக வைத்துள்ளன. இதனால், மாநிலத்தின் மொத்த நிலப் பரப்பில் 82% விவசாயத்துக்கு உகந்த பகுதியாக இருக்கிறது.
கங்கையை ஒட்டிய வாரனாசி, அயோத்தி, மதுரா உள்ளிட்ட புண்ணியத் தலங்கள், உத்திரப் பிரதேசத்தின் உன்னத அடையாளங்களாகத் திகழ்கின்றன. இத்துடன், உலக அதிசயம் தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா, முஸ்லிம் பல்கலைக்கழகம் கொண்ட அலிகார் உள்ளிட்ட பல இடங்கள் உத்திர பிரதேசத்தை, நாட்டின் மிகப் பிரபலமான மாநிலமாக வைத்துள்ளன.
‘லூ’ எனும் வெப்பக்காற்று: மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், வெள்ளம், வறட்சி என இரண்டும் ஏற்படும். மத்திய, மேற்குப் பகுதிகள், நல்ல நீர்ப்பாசன வசதி கொண்டவை. மத்திய கங்கை சமவெளி, மேல் கங்கை சமவெளி, மத்திய பீடபூமியில், வன விலங்குகளைப் பாதுகாக்கிற அடர்ந்த காடுகள் உள்ளன.
பருவ காலங்கள் நம்மில் இருந்து சற்றே மாறுபடுகின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பனிக்காலம்; மார்ச் முதல் மே மாதம் வரை கோடை; ஜூன் தொடங்கி செப்டம்பர்வரை மழைக்காலம். கோடையின் போது, ‘லூ’ எனும் வறண்ட வெப்பக் காற்று, மாநிலம் முழுதும் வீசுகிறது. கோடையைத் தொடர்ந்து வருகிற தென்மேற்குப் பருவ காலத்தில் அதிகம் மழை பொழிகிறது. வடகிழக்குப் பருவ மழையும் ஓரளவுக்கு கைகொடுக்கிறது. ஓர் ஆண்டுக்கான மழைப் பொழிவு சுமாராக, மேற்குப்பகுதியில் 84 செ.மீ., விந்திய மலைப் பகுதியில் 10 – 120 செ.மீ. சில ஆண்டுகளில் 170 செ. மீ. வரை கூட மழை பொழிகிறது.
உபியில் இயற்கை வளங்கள் அபரிமிதமாகப் பரவி உள்ளன. மொத்த வனப் பகுதி சுமார் 16500 ச.கி.மீ. இது, மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 7% ஆகும். மருத்துவத் தாவரங்கள், ஊர்வன, மீன்கள், நண்டுகள் ஆகியன மிகுந்து காணப்படுகின்றன.
கங்கை நதியின் டால்ஃபின்: பகிரா சரணாலயம், தேசிய சம்பல் சரணாலயம், சந்திர பிரபா சரணாலயம், ஹஸ்தினாபூர் சரணாலயம், கைமூர் சரணாலயம், பிரசித்தி பெற்ற ஓக்லா சரணாலயம் என்று பல சரணாலயங்கள் உள்ளன. கங்கை சமவெளிச் சிங்கம், டெராய் நீர்யானை, கங்கை நதியின் டால்ஃபின் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் தற்போது ஆபத்தின் விளிம்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இவற்றைப் பாதுகாக்க, பராமரிக்க, இவற்றின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய மக்கள் தொகையில் 16%-க்கு மேல் வாழும் உபியில், மக்கள் அடர்த்தியும் மிக அதிகம். தேசிய அளவில் மக்கள் தொகைப் பெருக்கம் ஆண்டுக்கு 17.6% என்றால் உபியில் 20%வரை உள்ளது. நகர மக்கள் தொகை 4.4 கோடிக்கு மேல் உள்ளதால், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முனிசிபல் நகரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
நமது நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் 19% உபியில் இருந்து வருகிறது. கோதுமை முக்கிய பயிர். மேற்கு பகுதியில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுவதால் சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
சுற்றுலாவில் முதலிடம்: சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் உபிக்கே முதலிடம். பிரமாண்டமான திருவிழாக்கள், பல்வகை நினைவுச் சின்னங்கள், தொன்மையான வழிபாட்டுத் தலங்கள், இயற்கை அழகு பொங்கும் ஆற்றோரங்கள், மலை முகடுகள் என்று பல அம்சங்கள் நிரம்பி உள்ளதால், ஆண்டு தோறும்7 கோடிக்கு மேலான சுற்றுலாப் பயணிகள் உபிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
கங்கை நதிக்கரையில் நடைபெறும் அலகாபாத் நகரில் மகா மேளாவுக்கு லட்சக்கணக்கானோர் திரள்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. ஒரு கோடிக்கு மேல் மக்கள் வந்து குவிகின்றனர். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் விழாக்களில் இதுவும் ஒன்று. மேலும், சார்நாத் அசோகர் ஸ்தூபி உள்ளிட்ட புத்த மதத் தூண்கள், விகாரங்களும் இங்கு மிகுந்துள்ளன.
இந்த வாரக் கேள்வி: ஹரித்வார் எதற்குப் பெயர் பெற்றது?
(வளரும்)
கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com