

வேளாண்மை பொருளாதாரப் பாடப்பிரிவில் முதுநிலை பெற்றதன் மூலம் ஐஇஎஸ் எனும் இந்தியப் பொருளாதாரப் பணி பெற்றுள்ளார் ஜி.அருண். பிளஸ் 2 வரை தமிழ்வழிக் கல்வியிலே பயின்ற இவர் 2012 பேட்ச்சில் ஐஇஎஸ், முதல் முயற்சியிலேயே பெற்று மத்திய சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தின் விவசாயத் தம்பதி ஞானசேகரன், மகேஸ்வரி. இவர்களுக்கு மகள் ஜி.சங்கரி மற்றும் மகன் ஜி.அருண். இவர்களில் அருண், குடிதாங்கியின் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்புவரை படித்தார். பிறகு திருவாரூரில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 6, 7 வகுப்புகள் விடுதியில் தங்கி பயின்றார்.
தமிழ்வழியில் படிப்பு
மீண்டும் பள்ளி மாறியவர், கும்பகோணத்தின் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் 8 முதல் 10 வரை பயின்றார். குடும்பச்சூழல் காரணமாக புதுக்கோட்டையின் மணமேல்குடியின் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். இவை அனைத்திலும் முதல் வகுப்பு மாணவரான அருண், பயின்றது தமிழ்வழிக் கல்வியில் மட்டுமே.
பிஎஸ்சி வேளாண்மை பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் 2008-ல் முடித்தார். 4 வருடப் படிப்பிற்கு பின்னர் பொள்ளாச்சியில் தனியார் நிறுவனத்தின் வேளாண்மை பண்ணையின் விவசாய மேலாளராக சுமார் 6 மாதம் பணியாற்றினார்.
அதன் பிறகு மீண்டும் படிக்கும் ஆர்வம் துளிர்க்க டெல்லி தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் (ஐஏஆர்ஐ) முதுநிலை பயிலும் வாய்ப்பு கிடைத்தது. இதன் நுழைவுத்தேர்வில் அருண் தேசிய அளவில் 4 ஆவது ரேங்க் பெற்றிருந்தார். 2011- ல் முதுநிலை முடித்தார். அருணுக்கு முனைவர் பட்டக்கல்வி சேர்க்கையும் ஐஏஆர்ஐயில் அரசு உதவித்தொகையுடன் கிடைத்தது. இதன் முதல் வருடத்திலேயே அருணுக்கு குடிமைப்பணியின் ஐஇஎஸ் கிடைத்ததால் அதை பாதியிலேயே விட வேண்டியதாயிற்று.
6 மாதம் முயன்றால் ஆங்கிலம் ஈசி
இது குறித்து அதிகாரி அருண் கூறும்போது, “தமிழ்வழிக்கல்விக்கு பின் இளநிலையில் ஆங்கிலவழிக் கல்வி பயில்வது என்னைபோல் முதலிடம் பெற்றவருக்கும் சிரமம்தான். முதல் ஆறு மாதம் கஷ்டப்பட்டுவிட்டால் பிறகு ஆங்கிலத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. பொதுவாக குடிமைப்பணி தேர்வில் வென்றவர்கள் பணியில் இணைந்தபின் தம் பல்கலையில் உரை நிகழ்த்த வருவது வழக்கம். அப்படியொரு நிகழ்ச்சியின் மூலமாகத்தான் குடிமைப்பணி தேர்வு எனக்கு அறிமுகமானது. குறிப்பாக எனது பெற்றோர் அளித்த உற்சாகம் யூபிஎஸ்சியில் வென்று ஐஇஎஸ் குடிமைப்பணி அதிகாரியாக்கியது” எனத் தெரிவித்தார்.
ஐஇஎஸ் எனும் இந்திய பொருளாதாரப் பணிக்கு யூபிஎஸ்சியில் தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. நேரடியாக மெயின்ஸும் பிறகு நேர்முகம் என இரண்டு நிலை தேர்வுகள் மட்டுமே நடைபெறும். இதற்கு குறைந்தபட்ச தகுதியாக பொருளாதாரம் அல்லது அப்பிரிவை சார்ந்த இதர பாடக்கல்விகளில் முதுநிலைப் பட்டம் அவசியம். எனவே, வேளாண்மை பொருளாதார பிரிவில் முதுநிலை முடித்த அருண் 2011-ல் ஐஇஎஸ் தேர்வு எழுதினார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர், 2012 பேட்ச்சின் ஐஇஎஸ் அதிகாரியானார்.
இவரது மனைவி ரென்யா 2011 பேட்ச்சின் ஐஎஸ்எஸ் எனும் இந்திய புள்ளியியல் பணி அதிகாரி. இவர்களுக்கு விதார்த், ரேவந்த் ஆகிய இருமகன்கள் உள்ளனர்.
இது குறித்து அதிகாரி அருண் கூறுகையில், “குடிமைப்பணியை பெறுவது எனது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. எனினும், யூபிஎஸ்சி தேர்வு எழுதியவுடன் அப்பணி கிடைக்கும் என்பது உறுதியல்ல. இதை உணர்ந்தே முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொள்ளும்போதே ஐஇஎஸ் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் படித்தேன். இதுதான் முதல் முயற்சியில் ஐஇஎஸ் பெறக் காரணம்” என விளக்கினார்.
பொறுப்புகள் பல வகித்தவர்
பணியின் இடையே, ஐஏஎஸ்-க்கு குறிவைத்து இரண்டு முறை யூபிஎஸ்சி தேர்வு எழுதினார் அருண். அதில் பலனில்லாமல் போகவே தனது ஐஇஎஸ் பணியிலேயே ஆர்வத்துடன் பணியாற்றுகிறார். இதர யூபிஎஸ்சி அதிகாரிகளுக்கு அளிக்கப்படுவதுபோல, ஐஇஎஸ் பெற்றவர்களுக்கும் அடிப்படை பயிற்சி ஒன்றாகவே அளிக்கப்படுகிறது. பிறகு முக்கியப் பயிற்சியை இன்ஸ்டிடியூட் ஆப் எகனாமிக் குரோத், டெல்லியில் பெற்றார். இதில், தேசிய அளவிலுள்ள பொருளாதாரக் கல்வி நிறுவனங்களின் பயிற்சியும் அடங்கும். வெளிநாட்டு பயிற்சியில் சிங்கப்பூருக்கும் சென்று வந்தார் அருண்.
தனது முதல் பணியில் அருண், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் தொழிலாளர் தலைமை அலுவலகம், சண்டிகரில் உதவி இயக்குநர் பொறுப்பேற்றார். பிறகு இதன் சென்னை பிராந்திய அலுவலக தலைமை பொறுப்பிற்கு மாற்றப்பட்டார். துணை இயக்குநர் பதவி உயர்வுடன் ஐதராபாத், சென்னை மற்றும் டெல்லி என மாறி, மாறி பல மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி உள்ளார் அருண். தற்போது, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தில் இணை இயக்குநராக டெல்லியில் உள்ளார்.
அருண் போன்ற ஐஇஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் குறிப்பிட்ட அளவில் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் தலைமையில் பொதுமக்களிடம் நடத்தப்படும் பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கான டி.ஏ., உள்ளிட்ட பலவும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஐஇஎஸ் அதிகாரிகளிடம், பொருளாதார ஆலோசனைகள் கேட்டு அதன் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மத்திய நிதி அமைச்சகத்தில் பெரும்பாலும் பணியாற்றும் இவர்களது பங்கு மத்திய பட்ஜெட்டில் மிகவும் முக்கியமானது. தமிழகத்தின் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து நிற்கும் அதிகாரி அருண் பெருமைக்குரியவரே!
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in