கையருகே கிரீடம் - 27: தேநீர், காபி சுவைத்தால் காசு!

கையருகே கிரீடம் - 27: தேநீர், காபி சுவைத்தால் காசு!
Updated on
1 min read

காசு கொடுத்தால் கடையில் தேநீர் கிடைக்கும். தேநீர் சுவைத்தால் காசு கிடைக்குமா? கிடைக்கும். மாதச்சம்பளமே கிடைக்கும். தேநீர் சுவைஞர் என்ற தொழில் இருப்பது பலருக்கு தெரியாது. சுவைஞர் பணி என்ன? இந்தியாவில் இருக்கிறதா? என்ன படிக்க வேண்டும்? வேலை எங்கு கிடைக்கும்?

ஐரோப்பாவில் சுவைஞர்களுக்கு முக்கியத்துவம் தொடங்கியது. செம்மல்லியை (Sommelier) என்று அழைக்கப்படுகிற சுவைஞர்கள் தற்போது எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இந்தியா உலக அளவில் தேயிலை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நாடு. தேநீர் பருகுபவர்களும் அதிகம் இருப்பதால் தேயிலை மற்றும் தேநீருக்கான மிகப்பெரிய சந்தை இந்தியாவில் இருக்கிறது. தேநீரை தரம் மற்றும் சுவைகளின் அடிப்படையில் பகுத்தறிய சுவைஞர்கள் தேவை.

சுவைப்பதை முழுநேர வேலையாக மேற்கொண்டு மாதச்சம்பளம் பெறுபவர்களும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறார்கள். உங்களுக்கு தேநீர் மீது நாட்டமிருந்தால் சுவைஞர் பணியை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். சுவைப்பத்தோடு வேலை முடிவதில்லை, எப்படி தரமான தேயிலையை உருவாக்குவது, தேநீர் தயாரிப்பது போன்றவற்றிலும் நிபுணத்துவம் தேவை. இவைகளை எங்கே கற்பது? அதற்கென படிப்புகள் உண்டு.

தேநீர் கல்வி நிலையங்களும் படிப்புகளும்

தேயிலை-தேநீர் தொடர்பான படிப்புகள், அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகம், வட வங்காள பல்கலைக்கழகம், பெங்களூருவிலுள்ள இந்திய தோட்டக்கலைமேலாண்மை நிறுவனம் (IndianInstitute of Plantation Management) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் டார்ஜிலிங் தேநீர் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கூட்டமைப்பிலும் வழங்கப்படுகின்றன.

தென்னிந்தியாவில், இந்திய தோட்டக்கலை மேலாண்மை நிறுவனத்தின் ‘தேநீர் சுவைப்பு மற்றும் சந்தைபடுத்தல்’ என்ற சான்றிதழ் படிப்பு பிரபலமானது. 45 நாட்கள் கொண்ட இந்த படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். இது தவிர மேலே குறிப்பிட்ட கல்வி நிலையங்களும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.

காபி குடித்தால் காசு

காபி சுவைஞர்களுக்கும் இந்தியாவில் வாய்ப்புகள் உண்டு. பெங்களூருவிலுள்ள இந்திய காபி வாரியம் நடத்தும் ஒரு வருட காபி தரமேலாண்மை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Coffee Quality Management) காபி சுவைஞர்களுக்கு மிகவும் அவசியம்.

தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிரி தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண்மை ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேரலாம். தேயிலைத்தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள்,தேயிலை வர்த்த நிறுவனங்கள் ஆகியவற்றில் சுவைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உண்டு. அதுபோலவே காபி தோட்டங்கள், தொழிற்சாலைகள், காபி கொட்டை வர்த்தக நிறுவனங்களில் காபி சுவைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உண்டு.

இது தவிர நட்சத்திர விடுதிகளிலும், சுவைஞர் பயிற்சி நிலையங்களிலும் பணி வாய்ப்புகள் உண்டு.(தொடரும்)

கட்டுரையாளர், ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in