

அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது அதிகமாக இருந்தது. அங்கு வந்த உளவியல் நிபுணர்கள் அந்த மாணவர்களிடம் பல கேள்விகள் கேட்டு ஆய்வு நடத்தினர். இன்ஸ்டாகிராம் செயலி ஏன் அவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது என்பது மிகப்பெரும் சந்தேகமாக இருந்தது. பொதுவாக மாணவ பருவத்தில் அதிகமாக வீடியோ கேம் விளையாடுவார்கள். விளையாட்டு, வீடியோ கேம்கள் என்றால் புரிந்துகொள்ளலாம் ஆனால் இன்ஸ்டாகிராம் எப்படி?
பல மாணவர்களின் பதில் ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த பதில், “இன்ஸ்டாகிராம் என்பது இங்கு ஒரு கேம். அதில் தங்கள் புகைப்படம் போடும் யாருக்கு அதிகமாக ‘லைக்குகள்’ கிடைக்கிறது என்பதுதான் கேம். அதிக லைக்குகள் பெறுபவர் வெற்றியாளர். மாணவ பருவத்தில் விளையாடுவதில் அதிக நாட்டம் இருக்கும் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால், சமூக வலைதளத்தையே அவர்கள் விளையாட்டாகத் தான் பார்க்கிறார்கள். அதனால்தான் டிக்டாக் முதல் ரீல்ஸ்வரை “சவால்” எனும் ஆபத்தான விளையாட்டுகள் பிரபலமாகிவிடுகிறது.
லைக்குதான் புதிய அந்தஸ்து
சரி நாம் இன்ஸ்டாவிற்கு வருவோம், அதிக லைக்குகள் ஒரு விளையாட்டு என்று விட்டுவிட முடியாது. ஒருவேளை அதிக லைக்குகள் வரவில்லை என்றால்?
பலர் மனநல சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அடுத்து அதிக லைக்குகள் பெற ஏதாவது விளையாட்டாகச் செய்யப் போய் விபரீதமாக முடியும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த வாரம், தங்களை பற்றிய சுய அடையாளத்தை உருவாக்குவதில் மாணவப் பருவத்தினர் கவனம் செலுத்துவார்கள் என்று பார்த்தோம் அல்லாவா? அந்த சுய அடையாளத்தை உருவாக்குவதில் ஒரு உப நோக்கம் தங்கள் அந்தஸ்தைக் காட்டுவது.
பணம், விலை உயர்ந்த செல்போன், ஆடம்பர ஆடைகள், பார்ட்டி விருந்துகள் மட்டும் அந்தஸ்தல்ல, காஸ்ட்லியான செல்போனை விட சாதாரண இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பது அந்தஸ்தாக தற்போது மாறியுள்ளது. இதுவே இன்று மிக முக்கியமான அந்தஸ்து. இங்குதான் சிக்கல் உருவாகிறது. தங்கள் திறமையை சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டுவதை விட தங்கள் முக அழகு, உடல அழகு, அரை நிர்வாணம், என இன்ஸ்டாவில் கவனம் பெற முனைந்தால்?
இது உடலுக்கும் உடைமைக்கும் ஆபத்து. ஆதலால் மானவர்களே சமூக வலைத்தளங்களை உங்கள் கற்றலுக்கும், மேம்பாட்டிற்கும், உங்களை பாஸிட்டிவாக வெளிக்காட்டவும் பயன்படுத்துங்கள். இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடாது. அதன் ஆபத்தை எடுத்துக்காட்டினால் புரிகிறதா எனப் பாருங்கள்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com