மகத்தான மருத்துவர்கள் - 25: கண் போன்று மருத்துவத்தை நேசித்த டாக்டர் வி

மகத்தான மருத்துவர்கள் - 25: கண் போன்று மருத்துவத்தை நேசித்த டாக்டர் வி
Updated on
2 min read

“எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்ய கொஞ்சம் புத்திசாலித்தனம் போதும். ஆனால் அந்த வெற்றி நம்மோடு சேர்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கூறியவர் டாக்டர் வி. என்கிற டாக்டர் வெங்கடசாமி.

இவர் அக்டோபர் 1, 1918-ம் ஆண்டு, திருநெல்வேலி எட்டயபுரம் அருகே உள்ள வடமலபுரம் கிராமத்தில் பிறந்தார். விவசாயியான கோவிந்தப்பன் லட்சுமி தம்பதியினரின் ஐந்து குழந்தைகளில் மூத்தவரான வெங்கடசாமி தனது பள்ளிக் கல்வியைத் தொடங்கியது எட்டயபுரத்தில். பள்ளிக்கு தினமும் இரண்டு கி.மீ. நடந்தும், எழுதிப் படிக்க தரையையும் மணலையும் உபயோகித்த எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.

வீட்டில் நூலகம்

விவசாயியாக இருந்தாலும் வாசிப்பில் ஆர்வத்துடன் இருந்த தந்தையைப் பார்த்து தானும் படிக்கத் தொடங்கிய வெங்கடசாமியை அப்போதே ஈர்த்தது சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் காந்தியடிகளின் சிந்தனைகள். அதனால்தானோ என்னவோ, அந்த வயதிலேயே தனக்குக் கிடைத்த புத்தகங்களை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று தனது வீட்டிலேயே சிறிய நூலகம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

தனது பள்ளிப்பருவத்தில் உறவினர்கள் மூவர் பிரசவத்தின்போது அடுத்தடுத்து உயிரிழந்ததைக் கண்ட வெங்கடசாமி, இதற்கு போதிய மருத்துவ வசதி இல்லாததே காரணம் என்பதை புரிந்து கொண்டார். மகப்பேறு மருத்துவராவதென பத்து வயதிலேயே முடிவெடுத்தார்.

அதன்படியே உயர்நிலைக் கல்வியை கோவில்பட்டியில் முடித்து, 1938-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் இளங்கலைப் பட்டமும் பெற்று, 1944-ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முடித்தார். மகப்பேறு மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றார்.

எதிர்பாராத திருப்பங்கள்

மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில், தந்தை கோவிந்தப்பன் உடல்நிலைக் குறைவால் மரணமடைந்து, குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு தன் தலையில் விழ, ஊருக்கு சேவை செய்யும் எண்ணத்தை சற்று ஒத்தி வைத்துவிட்டு, தனது குடும்பத்தை காக்க சம்பளத்துக்காக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார் டாக்டர் வெங்கிடசாமி.

அப்படி, 1945லிருந்து 1948-ம் ஆண்டுவரை இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்த அவர், அப்போது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற போர்களில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சைகள் அளித்தார். ஆனால் மியான்மரில் தங்கியிருந்தபோது திடீரென்று தோல் அழற்சி மற்றும் முடக்குவாதத்தால் (Rheumatoid Arthritis) தாக்கப்பட, 30 வயதில் பணியை விட்டுவிட்டு தாயகம் திரும்பினார்.

தொடர்ந்து மேற்கொண்ட சிகிச்சைகள் அனைத்தும் வலி குறைத்ததே தவிர, முடக்குவாதம் அவரது விரல்களை நிரந்தரமாக வளைத்து, கைகளையும் முடமாக்கியது. மருத்துவராக இருந்தும் மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்காமல், தனக்கேவைத்தியம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தில் இருந்தார்.

ஒருகட்டத்தில் முடமாகிப் போன விரல்களை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு பிரசவம் பார்க்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டார். மகப்பேறு மருத்துவத்திற்கு அடுத்து சற்றே எளிதான கண் மருத்துவத்தை முயற்சிக்கும் முடிவுடன், 1951-ம் ஆண்டு கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டத்தைப் பெற்று, சிறப்பு பயிற்சிகளும் மேற்கொண்டு, 1956-ல் மதுரை அரசு மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்றார்.

இயலாமையால் புதிய கண்டுபிடிப்புகள்

முடக்குவாத பாதிப்பால் திருமணம் செய்யும் எண்ணத்தையே ஒத்தி வைத்திருந்த அவர், இனி தனது வாழ்க்கையே கண் மருத்துவத்திற்கு என்று முடிவுசெய்து, மேலும் வாதத்தால் வளைந்து நின்ற தனது விரல்களுக்கு ஏற்றவாறு தனக்கான அறுவை சிகிச்சை கருவிகளையும் தானே வடிவமைத்தார். அதைக் கொண்டே தனது பணிக்காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார். டாக்டர் வி என்றும் Lakh Surgeon என்றும் அன்பான அடைமொழிகளால் அழைக்கப்பட்டார்.

1965-ல் நடைபெற்ற ஒரு சர்வதேச கண் மருத்துவ கருத்தரங்கில் விபத்தொன்றில் பார்வையிழந்த சர் ஜான்சன் வில்சனை டாக்டர் வி சந்தித்து உரையாற்றியது ஒரு மாபெரும் மாற்றத்திற்கான முன்னோடியாக அமைந்தது. சர் வில்சன் அவர்கள் ஏற்கெனவே நடத்தி வந்த 'Sightsavers International' எனும் அமைப்பு நடத்திவந்த Needless Blindness எனும் தவிர்க்கக் கூடிய பார்வை இழப்பிற்கான ஆலோசனைகளை அடிப்படையாக வைத்து அவர் வடிவமைத்த தேசிய பார்வை இழப்புத் தடுப்புத் திட்டம்தான், இன்று நாடெங்கும் நாம் காணும் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கான மொபைல் கண் சிகிச்சை சிறப்பு முகாம்கள். இவற்றுள் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்கள், வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம்கள், பார்வை சீரமைப்பு முகாம்கள் என அனைத்தும் அடங்கும்.

முதலில் மாநில அளவில் ஆரம்பிக்கப்பட்ட டாக்டர் வியின் திட்டங்கள் தந்த வெற்றியைக் கண்டு, நாடெங்கும் அதைச் செயல்படுத்த அன்றைய‌ பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஆர்வம் தெரிவிக்க, டாக்டர் வி எனும் வெங்கடசாமியை ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது.

(டாக்டர் வி மகிமை தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in