

அது 1928. ஒரு உயிரியல் விஞ்ஞானி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார். தட்டுகளில் பல்வேறு வகையான பாக்டீரியாக்களை வளர்த்து அதன் குணநலன்களை ஆய்வது இவருக்கு வாடிக்கை.
அவ்வாறு பாக்டீரியாக்களை வளர்க்கும் தனது தட்டுகளை பெஞ்சின் ஓரமாக ஒதுக்கிவைத்து விட்டுச் சென்றிருந்தார். இவ்வாறு இவர் ஒதுக்கிய இடம்போக மீதமுள்ள பெஞ்சில் அவரது நண்பர் பணியைத் தொடர்ந்தார். அதிக நாளானதால் அவை பல்வேறு மாற்றங்களை அடைந்துவிட்டிருந்தன.
இவ்வாறு அவர் ஓரங்கட்டிச் சென்ற தட்டுகளில் ஒரு தட்டில் மட்டும் நீலநிறமுடைய ஒரு பூஞ்சை வளர்ந்திருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தார். அதே நேரம் அந்த பூஞ்சை வளர்ச்சியடைந்திருந்த இடங்களில் ஸ்டைபிலோகாக்கஸ் என்ற பாக்டீரியா இறந்திருப்பதையும் கண்டார். இது ஒரு சிறப்பான பூஞ்சை என்று அதனைத் தொடர்ந்து ஆய்வு செய்து அதிலிருந்து பெனிசிலின் என்ற உயிர்காக்கும் மருந்தினைக் கண்டறிகிறார். இதன்மூலம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. யார் இவர்? இவர்தான் பெனிசிலியத்தைக் கண்டறிந்த அலெக்சாண்டர் பிளமிங் (1881 -1955).\
மருத்துவம் விட்டு ஆராய்ச்சி
பிளமிங் ஸ்காட்லாந்து நாட்டில் லாக்பீல்டுபார்ம் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை விவசாயி. பிளமிங் ஏழாவதுவயதடைந்தபோதே தந்தை மரணமடைந்தார். குடும்பத்திலிருந்த எட்டு நபர்களில் பிளமிங் கடைக்குட்டி. எப்படிப்பட்ட குழந்தைமை இவருக்குக் கிட்டியிருக்கும் என யோசியுங்கள்.
ஆனாலும் சகோதரர்களின் அரவணைப்பு இவருக்கு கிடைத்தது. பள்ளிப்படிப்பை முடித்த பின் தொழிற்கல்வி நிறுவனம் ஒன்றில் பயின்றார். பின்னர் கப்பல் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். துடிப்பும் ஆர்வமுள்ள இவருக்கு அந்த பணி ஒத்துவரவில்லை.
பின்னர் இவருக்கு மாமா வழியில் கொஞ்சம் பொருளாதார பலம் கிடைத்தது. இதனை வைத்து சமாளித்து 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று மருத்துவராகிறார். மருத்துவத் தொழிலில் தொடர்ந்திருந்தால் நன்கு வருமானம் பார்த்திருக்கலாம். ஆனால், அவரோ அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடவே விரும்பினார். இவருக்கு அரவணைப்பாக இருந்த சகோதரரும் சரி நீ ஆராய்ச்சியே செய் என்று பச்சைக் கொடி காட்ட ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார்.
தன் மூக்கே தனக்கு உதவி
ஆம்ரைட் என்பவரது குழு அந்த நாட்களில் இப்படிப்பட்ட தடுப்பாற்றல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தது. டைபாய்டு நோய்க்கு தடுப்பூசி கண்டறிந்த அந்த குழுவினருடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிரியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
விஞ்ஞானிகளுக்கே உரிய தன்மையுடன் எல்லா நேரமும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறே இருந்தார். ஒருமுறை தனது மூக்கிலிருந்து வழிந்த நீரை ஆராய்ச்சி செய்தார். அதில் பல்வேறு கிருமிகள் இருப்பதைக் கண்டறிந்தார். எவ்வாறு இந்த நீரில் கிருமிகள் வருமென்பதை ஆராய்ந்தபோது மூக்கிலிருந்து வழிந்த நீரானது கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினியையும் பெற்றுள்ளது என்பதைக் கண்டறிந்தார்.
மூக்கிலிருந்து வரும் திரவம் மட்டுமல்ல நமது உமிழ்நீர், கண்ணீர், முட்டையின் வெள்ளைத் திரவம் போன்றவைகிருமிகளை அழிக்கும் வல்லமைகொண்டவை என்பதையும் கண்டறிந்தார். இயற்கையிலேயே கிடைக்கும் இந்த கிருமிநாசினிக்கு லைசோசைம் என்று பெயரிட்டார். தனது வாழ்நாள் முழுவதும் இவ்வாறான கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் மூழ்கிப்போனார்.
ஏற்கெனவே நுண்ணுயிரிகளைப் பற்றிய ஆய்வில் ஆண்டன்வான் லூவான் ஹூக், லூயி பாஸ்டர் போன்றோர் ஆய்வு செய்திருந்தனர். அது இவருக்கு பேருதவியாக இருந்தது. ஆனாலும் இவரது ஆய்வு வேறுபட்டதாய் இருந்தது. இதனை ஆராய நாம் மருந்துகளின் பண்புகளைப் பற்றி கொஞ்சம் கூடுதலாக அறிந்துகொள்ளவேண்டும். சரி இவர் பெனிசிலினைக் கண்டறிந்தவுடன் அது மருத்துவ ரீதியாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டதா? விடை அடுத்த வாரம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com